Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 185)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அசுணமா முடியுமாபோலே பகவதநுபவைகபரனாய் ம்ருதுப்ரக்ருதியாயிருக்குமவன் விஷயதர்சநத்தாலே முடியும்படி.
விஷய ஸ்பர்சம் ஸ்வரூப நாசகம், விஷய ப்ரவணனாய் ஸுகிக்க நினைக்குமது விபரீத ஜ்ஞாநகார்ய மென்றிறே கீழ்ச்சொல்லி நின்றது; இவ்விஷய ஸ்பர்சம் வேண்டா, பகவத் குணங்களிலே நைந்திருக்குமவன் இவற்றைக் காணவே முடியமென்கிறார் மேல் (அசுணமா) என்று தொடங்கி.
– உலகவிஷயங்களின் தொடர்பு என்பது ஆத்மஸ்வரூபத்தை அழித்துவிடும் என்றும், உலகவிஷயங்களின் மீது ஆசை கொண்டவனாக இன்பம் பெறவேண்டும் என்ற எண்ணமானது விபரீத ஞானத்தின் செயல் என்றும் உரைத்தார். இத்தகைய உலக விஷயங்களில் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே ஒருவனை அவை முடிக்கும் என்பது அவசியம் அற்றது; ஸர்வேச்வரனின் குணங்களில் மட்டுமே ஈடுபட்டபடி உள்ள ஒருவன், இவற்றைக் கண்ணால் கண்டாலே முடிந்துவிடுவான் என்கிறார்.
– அதாவது, அசுணமாவென்கிற பக்ஷி அதிமதுரமான கரந ச்ரவணத்தாலே நெஞ்சு நீர்ப்பண்டமாயிளகின தசையிலே அதிகடிநமான பறையையடிக்கக் கேட்டுப் பட்டுக் கிடக்குமாப்போலேயாய்த்து, பகவதநுபவமொன்றிலுமே தத்பரனாய் தத்குண ரஸத்திலே நைந்து இதர விஷயங்களின் பேர் கேட்கிலும் மாந்தும்படி ம்ருது ப்ரக்ருதியா யிருக்குமவன் பகவதேகபோகத்வரூப ஸ்வரூப நாசகங்களான விஷயங்களைக் கண்ட மாத்ரத்திலே யேங்கி முடியும்படி யென்கை.
அசுணமா என்று ஒரு பறவை உள்ளது. அது மிகவும் இனிமையான இசையைக் கேட்டவுடன் நீர்ப்பண்டம் போன்று உருகி நிற்கும். ஆனால் அந்தப் பறவை மிகவும் கடினமான பறை இசையைக் கேட்டவுடன் இறந்துவிடும். இது போன்று ஒருவன் ஸர்வேச்வரனின் அனுபவம் என்பதில் மட்டுமே ஈடுபாடு கொண்டு, அவனுக்கு மட்டுமே அடிமையாக, அவனது குணங்களை எப்போதும் எண்ணி, அந்தக் குணங்களின் இனிமையில் ஊறிப்போய், மற்ற விஷயங்கள் பற்றி அவற்றின் பெயரைக் கேட்டவுடனேயே மயங்கும்படி மென்மையான தன்மை கொண்டு இருக்கக்கூடும். இப்படிப்பட்டவன், ஸர்வேச்வரனின் அனுபவத்தை மட்டுமே இன்பமாகக் கொண்டுள்ள ஆத்மாவின் ஸ்வரூபத்தை அழிக்கக்கூடிய விஷயங்களைக் கண்களால் கண்டவுடனேயே முடித்துவிடுவான்.