Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 184)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அக்நிஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும் ஆடுகிற பாம்பின் நிழலிலேயொதுங்க நினைக்குமாபோலேயும் விஷய ப்ரவணானாய் ஸுகிக்க நினைக்கை.

இப்படி விநாசகரமான விஷயங்களிலே ப்ரவணனாய் ஸுகிக்க நினைக்குமது விபரீதஜ்ஞாந கார்யமென்னுமத்தை ப்ரமாண ப்ரஸித்த த்ருஷ்டாந்தமுகேந வருளிச்செய்கிறார் (அக்நி ஜ்வாலையை) என்று தொடங்கி.

இவ்விதம் கெடுதலை மட்டுமே அளிப்பதாகிய புலன்களின் விஷயங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவனாக, இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவனாக இருத்தல் என்பது விபரீத ஞானத்தின் செயல்பாடு காரணமாகவே ஏற்படுகிறது என்பதை ப்ரமாணங்களில் கூறப்படும் உவமைகள் மூலம் காண்பிக்கிறார்.

– அதாவது “ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலாமுதந்யாசமநம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸுகசிந்தா சரீரிண:” என்றும், “விஷயாணாந்து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸுகம் நர: ந்ருத்யத: பணிநச்சாயாம் விச்ரமாயாச்ரயேத ஸ:” என்றும் சொல்லுகிறபடியே – தண்ணீர்க்கு விடாய்ப்பட்டவன், விபரீத ஜ்ஞாநத்தாலே தாபஹேதுவான அக்நி ஜ்வாலையை விழுங்கித் தன்விடாய் தீர நினைக்குமாப்போலேயும்; ஆதித்ய கிரணங்களாலே அதிமாத்ர தப்தனானவன் அந்த தாபத்தை யாற்றுகைக்காக நிழலென்கிற மாத்ரத்தைக்கொண்டு, ஆகாம்யநர்த்தத்தை நிரூபியாதே, அத்யந்த குபிதமாய்ப் படத்தை விரித்து நின்றாடுகிற பாம்பின் நிழலிலே யொதுங்க நினைக்குமாப்போலேயும் இருப்பதொன்று, பாதகமான விஷயங்களை ஸுகாவஹமாக ப்ரமித்து அவற்றிலே ப்ரவணனாய் அவற்றை யநுபவித்து ஸுகிக்க நினைக்குமதென்றபடி.

ஆஸ்வாத்ய தஹந ஜ்வாலாமுதந்யாசமநம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸுகசிந்தா சரீரிண: - அக்னியின் ஜ்வாலைகள் மூலம் தனது தண்ணீர்த் தாகத்தைத் தீர்க்க எண்ணுவது போன்று, உலகவிஷயங்களின் இன்பம் மூலமாக ஆத்மாவிற்கு இன்பம் சேர்க்கவேண்டும் என்று என்ணுகிறான் - என்றதுகாண்க. ஆக, மிகுந்த தண்ணீர்த் தாகம் கொண்டவன் தன்னுடைய விபரீதமான ஞானம் காரணமாக, தனக்குத் தாகம் ஏற்படக் காரணமாக இருக்கின்ற அக்னியின் ஜ்வாலையையே விழுங்கித் தனது தாகம் தீர்க்க எண்ணுவது போன்று – என்று கருத்து. விஷயாணாந்து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸுகம் நர: ந்ருத்யத: பணிநச்சாயாம் விச்ரமாயாச்ரயேத ஸ: - உலகவிஷயங்கள் மூலம் யார் ஒருவன் இன்பம் அனுபவித்தபடி உள்ளானோ அவன் படம் விரித்து ஆடுகின்ற பாம்பின் நிழலில் இளைப்பாரச் சென்றவன் போன்று ஆவான் - என்றது காண்க. சூரியனின் சுட்டுப் பொசுக்குகின்ற கதிர்களின் வெப்பம் காரணமாக மிகுதியாகத் தாக்கப்பட்டவன், அந்த வேதனை தீர்வதற்காக, நிழலை அடையும்விதமாக, தனக்கு ஏற்பட உள்ள தீமையை எண்ணாமல், மிகுந்த கோபத்துடன் படம் எடுத்து ஆடும் பாம்பின் நிழலில் ஒதுங்குவது போன்று - என்று கருத்து. தீமை தரவல்ல விஷயங்களை, சுகம் அளிப்பவை என்று மயங்கி அவற்றில் மிகுந்த ஆசை கொண்டவனாக, அவற்றை அனுபவித்து இன்பம் பெற வேண்டும் என்ற எண்ணுகிறான்.