Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 183)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ப்ரதிகூலவிஷயஸபர்சம் விஷஸ்பர்சம் போலே, அநுகூலவிஷயஸ்பர்சம் விஷமிச்ர போஜனம் போலே.

ஆக அஹங்காரத்தின் கொடுமையை யருளிச் செய்தார் கீழ்; அநந்தரம் விஷயங்களின் கொடுமையை யருளிச் செய்கிறார் மேல் (ப்ரதிகூலவிஷய ஸ்பர்சம்) என்று தொடங்கி.

இதுவரை அஹங்காரம் ஏற்படுத்துகின்ற கொடுமைகள் பற்றி விரிவாக அருளிச்செய்தார். அடுத்து புலன்களின் விஷயங்கள் குறித்த கொடுமைகள் பற்றி அருளிச்செய்கிறார்.

(ப்ரதிகூல விஷயமாவது) லோகவிருத்தமுமாய் நரகஹேதுவுமா யிருந்துள்ள நிஷித்த விஷயம்; தத்ஸ்பர்சத்தை விஷஸ்பர்சம்போலே என்றது - ப்ராணபாதகத்வேந ப்ரஸித்தமாகையாலே ப்ராதிகூல்யந் தோற்றநின்ற ப்ராணனை முடிக்கும் விஷஸ்பர்சம்போலே, சாஸ்தர நிஷித்ததயா ப்ரஸித்தமாகையாலே ப்ரதிகூல மென்றே தோற்றியிருந்து ஸ்வரூப நாசத்தைப் பண்ணுகையாலே. (அநுகூல விஷயமாவது) - லோகவிருத்தமுமன்றிக்கே நரகஹேதுவுமன்றிக்கே விசிஷ்ட வேஷாநுகூலமாயிருந்துள்ள விஹிதவிஷயம்; தத்ஸ்பர்சத்தை (விஷமிச்ர போஜநம் போலே) என்றது - விஷமிச்ராந்ந போஜநம் அதறியாதவனுக்கு அநுகூலமென்றே தோற்றியிருந்து அவன் ப்ராணனை முடித்துவிடுமாப்போலே, சாஸ்த்ர விஹிததயா ப்ரஸித்தமாகையாலே அநுகூலம்போலே தோற்றியிருந்து ஆத்மாவினுடைய அநந்யபோகத்வரூபமான ஸ்வரூபத்தை நசிப்பிக்கையாலே. “விஷஸ்ய விஷயாணாஞ்ச தூரமத்யந்த மந்தரம், உபபுக்தம் விஷம்ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி” என்று புஜிக்கவும் வேண்டாதே ஸ்மரணமாத்ரத்தாலும் முடிக்கையாலே, விஷத்திற்காட்டில் விஷயமதி க்ரூரமென்னாநின்றதிறே.

– ”ப்ரதிகூல விஷயம்” என்றால், இந்த உலகினரால் வெறுக்கத்தக்கதாகவும், நரகம் ஏற்படக் காரணமாக உள்ளதும் ஆகிய மற்றவர் மனைவியை நாடுதல் போன்ற செயல்களாகும். இப்படிப்பட்டவர்களின் சேர்க்கை என்பதை “விஷஸ்பர்சம்” போன்றது என்றார். இவை உயிரை எடுக்கவல்ல விஷம் போன்று அல்லது விஷத்தின் தொடர்பு போன்று சாஸ்த்ரங்களால் விலக்கப்படுவதன் காரணமாக ப்ரதிகூலம் என்றே தோற்றம் அளித்து, ஸர்வேச்வரனின் இன்பத்திற்காக மட்டுமே உள்ள ஆத்மாவின் ஸ்வரூபத்தை அழித்துவிடுவதால் “விஷஸ்பர்சம்” போன்றது என்கிறார். “அநுகூலவிஷயம்” என்றால் இந்த உலகினரால் வெறுக்கப்படாததாகவும், நரகம் ஏற்படக்காரணமாக ஆகாததும், சரீரத்துடன் கூடியதான ஆத்மாவிற்கு நன்மை அளிப்பதாகவும், சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டதும் ஆகிய தனது மனைவியுடன் சேர்தல் போன்றவையாகும். இவை “விஷமிச்ர போஜனம் = விஷம் கலந்த உணவு” போன்றவை என்கிறார். விஷம் கலந்த உணவை ஒருவன் உண்டால், அதனை அறியாமல் உண்ட அவனுக்கு அந்த உணவு நன்மை அளிப்பது போன்று காணப்பட்டாலும், விஷமானது உயிரைக் குடித்துவிடும்; இது போன்று ஆத்மாவிற்கு நன்மை அளிப்பது போன்று தோன்றினாலும் ஆத்மாவானது “ஸர்வேச்வரனுக்கு மட்டுமே நான் இன்பமான பொருளாக இருப்பேன்” என்று எண்ணுவதை மாற்றி, அதன் ஸ்வரூபத்தை அழித்துவிடும். இதற்கான ப்ரமாணம் – விஷஸ்ய விஷயாணாஞ்ச தூரமத்யந்த மந்தரம், உபபுக்தம் விஷம்ஹந்தி விஷயாஸ் ஸ்மரணாதபி - விஷத்திற்கும் புலன்களின் விஷயங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது; எப்படி எனில், விஷம் உண்டால் மட்டுமே கொல்லும், விஷயங்கள் நினைக்கப்பட்டவுடன் கொன்றுவிடும் – என்பதாகும். ஆகவே உண்ணவேண்டிய அவசியம் இல்லாமல், நினைக்கப்பட்டவுடன் கொல்லுவதால், விஷத்தைக் காட்டிலும் புலன்களின் விஷயங்கள் மிகவும் கொடியவை என்கிறார்.