Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 182)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

“ந காமகலுஷம் சித்தம்”, “ந ஹி மே ஜீவிதேநார்த்த:”, “ந தேஹம்”, “எம்மாவீட்டுத்திறமும்”.

இவ்வஹங்காரத்தினுடைய க்ரௌர்யத்துக்கு ப்ரமாணங்கள் காட்டுகிறார் மேல்.

அஹங்காரத்தின் கொடுமைகளுக்கான ப்ரமாணங்களை அருளிச்செய்கிறார்.

அதில் ப்ரதமத்திலே, ருக்வேதகிலமான ஜிதந்தாவசநத்தை யருளிச் செய்கிறார்; “நகாமகலுஷம் சித்தம் மமதே பாதயோஸ்ஸ்திதம், காமயே வைஷ்ணவத்வந்து ஸர்வ ஜந்மஸு கேவலம்”, இதுக்கர்த்தம் – நிருபாதிக சேஷியாய் நிரதிசய போக்யரான தேவரீர் திருவடிகளிலே வ்யவஸ்திதமான வென்னெஞ்சானது, ஸ்ரீவைகுண்டாதிகளாகிற வேறொன்றை ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்துக் கலங்கியிருக்கிற தன்று, ஸர்வ ஜந்மங்களிலும் தேவர்க்கே ரஸமாம்படியிருக்கிற தாஸ்யத்தையே யாசைப்படாநின்ற தென்று. கேவலபதத்தாலே – இத்தலைக்குமாயிருக்கு மிருப்பைக் கழிக்கிறது; து சப்தம் அவதாரணார்த்தம். இத்தால் – மோக்ஷபர்யந்தமாகத் தன்னுகப்பால் வருமதெல்லாம் அஹங்கார கர்ப்பமாகையாலே த்யாஜ்யமென்னுமிடம் சொல்லப்பட்டது. அநந்தரம், பிராட்டி வசநத்தை யருளிச்செய்கிறார். “நஹிமே ஜீவிதேநார்த்தோ நைவார்த்தைர் நச பூஷணை:, வஸந்த்யா ராக்ஷஸீமத்யே விநா ராமம் மஹாரதம், இதுக்கர்த்தம் - மஹாரதரான பெருமாளைப் பிரிந்து ராக்ஷஸிகள் நடுவே வஸியா நிற்கிற வெனக்கு ப்ராணனாலொரு ப்ரயோஜநமில்லை, அர்த்தங்களாலுமொரு ப்ரயோஜநமில்லை, ஆபரணங்களாலு மொருப்ரயோஜநமில்லை என்று. இத்தால் - ப்ராணாதிகளெல்லாம் அத்தலையி விநியோகத்துக்கான வன்றிக்கே தனக்கான போது அஹங்கார ஸ்பர்சியாகையாலே த்யாஜ்யமென்னுமிடம் சொல்லப்பட்டது. அநந்தரம், பரமாசார்யரான ஆளவந்தார் வசநத்தை யருளிச்செய்கிறார். “நதேஹம் நப்ராணாந் நசஸுக மசேஷாபிலக்ஷிதம் நசாத்மாநம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத், பஹிர்ப்பூதம் நாத! க்ஷணமபிஸஹே யாது சததா விநாசம் தத்ஸத்யம் மது மதந விஜ்ஞாபந மிதம், இதுக்கர்த்தம் – எனக்கு வகுத்த சேஷியானவனே, உன்னுடைய சேஷத்வமாகிற வைச்வர்யத்துக்குப் புரம்பான தேஹத்தையும் க்ஷணமும் ஸஹியேன், இத்தேஹத்துக்கு தாரகங்களான பராணங்களையும் ஸஹியேன், எல்லாராலுமா சைப்படப்பட்ட சுகத்தையும் ஸஹியேன், புத்ரமித்ர களத்ராதிகளான மற்றொன்றும் ஸஹியேன், இவையித்தனைக்கும் போக்தாவான ஆத்மா தன்னையும் ஸஹியேன், இதெல்லா முருக்காணவொண்ணாதபடி சததாவாக நசித்துப்போக வேணும், இந்த விஜ்ஞாபநம் ஸத்யம், இங்ஙனன்றாகில் தேவர்க்குப் பொய்யனான மது பட்டது படுகிறேன் என்று. இத்தால் – இத்தலையில் சேஷத்வத்துக்குப் புறம்பானதெல்லாம் அஹங்கார துஷ்டமாகையாலே த்யாஜ்யமென்னுமிடம் சொல்லப்பட்டது. – அநந்தரம், மயர்வற மதிநல மருளப் பெற்றவர்களில் தலையானவர் வசநத்தை யருளிச்செய்கிறார் (எம்மாவீட்டுத் திறமும்) என்று. அதாவது - “ஆழ்வீர் மோக்ஷத்தைக் கொள்ளும்” என்ன; என்னுகப்புக்காகத் தருகிற மோக்ஷம் எப்ப்ரகாரத்தாலும் விலக்ஷணமா யிருந்ததேயாகிலும், அதின் இடையாட்டமும் ப்ரஸங்கிக்கக் கடவோ மல்லோமென்கை. இத்தால் – தன்னுகப்பால் வரும் மோக்ஷமும் அஹங்காரம் கர்ப்பமாகையாலே, ஐச்வர்யாதிகளோபாதி த்யாஜ்யமென்னுமிடம் சொல்லப்பட்டது.

ப்ரமாணங்களில் முதலில் ருக்வேதகிலமாகிய ஜிதந்தாவில் எடுக்கப்பட்ட வரிகள் உரைக்கிறார். இந்த வரியானது - நகாமகலுஷம் சித்தம் மமதே பாதயோஸ்ஸ்திதம், காமயே வைஷ்ணவத்வந்து ஸர்வ ஜந்மஸு கேவலம் - என்பதாகும். இதன் பொருள் – எந்தவிதமான காரணமும் இன்றி எஜமானனாகவும், எல்லையற்ற இனிமையும் கொண்ட உன்னுடைய திருவடிகளில் மட்டுமே நிலையாக நிற்கின்ற எனது நெஞ்சமானது ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட மற்றொரு புருஷார்த்தம் அவசியம் என்று இல்லாமல், தாங்களாகவே புருஷார்த்தமாக உள்ள திவ்யதேசங்களை எண்ணிக் கலங்கியபடி இருப்பதில்லை; அனைத்துப் பிறவிகளிலும் உனக்கு மட்டுமே கைங்கர்யம் செய்தபடி இருத்தல் என்ற இன்பமான அடிமை நிலையை மட்டுமே எண்ணியபடி உள்ளது - என்பதாகும் (இதன் மூலம் நமது மகிழ்விற்காகக் கிட்டும் பரமபதம் கூட அஹங்காரத்தின் அடிப்படை என்கிறார்). இந்த வரியில் உள்ள “கேவலம்” என்ற பதம் நாம் நமக்காக உள்ள இருப்பை விலக்குகிறது. ”து” என்ற பதம் “அடிமைத்தனத்தையே” என்பதைப் பிரித்து உணர்த்துகிறது. ஆக இதன் மூலமாக மோக்ஷம் என்பது முடிய தனது மகிழ்விற்காக வரும் அனைத்தும் அஹங்காரத்தைக் கொண்டே ஏற்படுகின்றன என்பதால் அவை அனைத்தையும் கைவிட வேண்டும் என்பது உரைக்கப்பட்டது. – அடுத்து சீதாப்பிராட்டியின் சொற்களை உரைக்கிறார். இந்த வரியானது இராமாயணம் ஸுந்தரகாண்டம் – நஹிமே ஜீவிதேநார்த்தோ நைவார்த்தைர் நச பூஷணை:, வஸந்த்யா ராக்ஷஸீமத்யே விநா ராமம் மஹாரதம் – என்பதாகும். இதன் பொருள் – மிகச் சிறந்த வீரனாகிய இராமனைப் பிரிந்து அரக்கிகளின் நடுவே வாழ்கின்ற எனக்கு, எனது ப்ராணன் மூலம் எந்தப் பயனும் இல்லை; ஐச்வர்யங்களால் எந்தப் பயனும் இல்லை; ஆபரணங்கள் மூலம் எந்தப் பயனும் இல்லை - என்பதாகும். இதன் மூலம் நம்முடைய உயிர் உள்ளிட்ட அனைத்தும் அவனுக்காக மட்டுமே உள்ளன அல்லாமல் அவை தனக்கு என்று எண்ணும்போது அஹங்காரத்துடன் சேர்ந்து விடுவதால், விடத்தக்கவை என்கிறார். அடுத்து மிகவும் உயர்ந்த ஆசார்யரான ஸ்வாமி ஆளவந்தாரின் சொற்களை அருளிச்செய்கிறார். இது ஸ்தோத்ரத்னத்தின் (57) - நதேஹம் நப்ராணாந் நசஸுக மசேஷாபிலக்ஷிதம் நசாத்மாநம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத், பஹிர்ப்பூதம் நாத! க்ஷணமபிஸஹே யாது சததா விநாசம் தத்ஸத்யம் மது மதந விஜ்ஞாபந மிதம் – என்ற ச்லோகம் ஆகும். இதன் பொருள் - எனக்கு எஜமானனாக உள்ளவனே! உன்னுடைய கைங்கர்யம் என்பதான் ஐச்வர்யத்திற்கு மாறாக உள்ள எனது சரீரத்தை நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன்; இந்தச் சரீரம் நிலைநிற்கக் காரணமாக உள்ள பலவற்றையும் பொறுக்கமாட்டேன்; அனைவராலும் விரும்பப்படும் சுகத்தையும் பொறுக்கமாட்டேன்; புத்திரர்கள், மனைவி, உறவினர்கள் போன்றவர்களையும் பொறுக்கமாட்டேன்; இவை அனைத்தும் அனுபவிக்கவல்ல ஆத்மாவையும் பொறுக்கமாட்டேன்; இவை அனைத்தும் அனுபவிக்க அடையாளம் தெரியாதபடி நூறு பகுதிகளாகப் பிளந்து போகட்டும்; எனது இந்த விண்ணப்பம் உண்மையானது; இவ்விதம் இல்லை என்றால், உம்மிடம் பொய் உரைத்தமைக்காக மது என்ற அசுரன் எப்படி அழிந்தானோ அது போன்று அழிந்து போகிறேன் - என்பதாகும். ஆக ஸர்வேச்வரனின் கைங்கர்யத்திற்குப் புறம்பாக உள்ள அனைத்தும் அஹங்காரம் என்பதுடன் சேர்வதால் விடத்தக்கவை என்பது கூறப்பட்டது. அடுத்து மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களான ஆழ்வார்களில் முதன்மையான ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியை - எம்மாவீட்டுத் திறமும் – எண்று உரைக்கிறார். இதன் பொருள் – ஸர்வேச்வரன் ஆழ்வாரிடம், ”ஆழ்வாரே! இதோ மோக்ஷத்தைப் பெற்றுக் கொள்ளும்”, என்கிறான்; இதற்கு ஆழ்வார், “நம்முடைய மகிழ்ச்சிக்காக இவன் நமக்கு அளிக்கின்ற மோக்ஷம் மேன்மையானதே என்றாலும், அது புருஷார்த்தம் ஆகாது”, என்று எண்ணினார் - என்பதாகும். ஆகவே நமது மகிழ்ச்சிக்காகக் கிட்டும் மோக்ஷம் என்பது அஹங்காரத்தை அனுமதிக்கக்கூடும் என்பதால், ஐச்வர்யம் போன்று இத்தகைய மோக்ஷமும் கைவிடத்தக்கதே என்று உணர்த்தப்பட்டது.