Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 180)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
தன்னைத் தானே முடிக்கையாவது - அஹங்காரத்தையும் விஷயங்களையும் விரும்புகை.
இவன் தன்னைத்தானே முடிக்கையாவது ஏதேன்னு மாகாங்க்ஷையிலே யருளிச் செய்கிறார் (தன்னைத்தானே) என்று தொடங்கி.
– ஒருவன் தன்னைத்தானே முடித்துக்கொள்வது எந்தவிதத்தில் நிகழ்கிறது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– (அஹங்காரமாவது) தேஹாத்மாபிமாநமும், ஸ்வாதந்த்ர்யாபிமாநமும்; (விஷயங்களாவன) – விஹிதநிஷித்த விஷயங்கள். இவற்றை (விரும்புகையாவது) - இவற்றிலே மிகவும் ப்ரவணனாகை. ஆத்ம ஸ்வரூபந்தான் பகவதநந்யார்ஹ விசேஷமாய் பகவதேகபோகமாயிறே யிருப்பது; தாத்ருச ஸ்வரூபத்தை நசிப்பிக்கையிறே – இவற்றிலே இவன் ப்ரவணனாகையாவது. உத்தரவாக்ய நமச்சப்தார்த்தஞ் சொல்லுகிறாராகில் இவை எல்லா மென்னென்னில்; உத்தர வாக்கியத்தில் நமஸ்ஸிலே புருஷார்த்தத்துக் கிடைச்சுவரான விரோதிகளெல்லாம் தள்ளுண்ணுமென்னுமிடம் தோற்றவிறே ”மநோவாக்காயை:” என்று தொடங்கி மூன்று சூர்ணையாலே ஸகல விரோதி நிவ்ருத்தியையும் பாஷ்யகாரரருளிச் செய்தது. இவர் தாமும் முமுக்ஷுப்படியிலே இந்த நமச்சப்தார்த்தம் சொல்லுகிறவளவில், “இதிலே அவித்யாதிகளும் கழியுண்ணும்” என்றாரிறே. ஆகையாலே இவ்விடத்திலும் தேஹாத்மாபிமாநாதிரூபமான அஹங்காரம், தத்கார்யமான விஷயப்ராவண்யம், ததுபயகார்யமான பாகவதாபசாரம் முதலான விரோதிகளை யெல்லாம் ப்ரஸக்தாநு ப்ரஸக்தமாக வருளிச் செய்கிறார்; ஆகையாலே விரோதமில்லை.
– ”அஹங்காரம்” என்றால் – சரீரமே ஆத்மா என்ற எண்ணமும், தான் சுதந்திரமானவன் அல்லது தான் தனக்கே உரியவன் என்ற எண்ணமும் ஆகும். விஷயங்கள் என்றால் சாஸ்த்ரங்களால் தள்ளி வைக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள் (மற்றவர் மனைவியை நாடுதல், தனது மனைவியுடன் சேர்தல்) என்பதாகும். இவற்றை விரும்புதல் என்றால் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் எப்போதும் உள்ள நிலையாகும். ஆத்மாவின் தன்மை எப்படிப்பட்டது என்றால், தான் பகவானுக்கு மட்டுமே ஏற்ற கைங்கர்யங்களைச் செய்தபடி அவனது அடிமையாக இருத்தலும், அவனுடைய அனுபவத்தையே தனக்கு இன்பமாகக் கொண்டிருத்தலும் ஆகும். இத்தகைய தன்மையை அழிப்பது அல்லவோ இவன் மற்ற விஷயங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் உள்ளது ஆகும்? நன்கு ஆராய்ந்தால் த்வயத்தின் இரண்டாவது வரியின் இறுதியில் உள்ள “நம:” என்ற பதம் மூலமாக அடையப் போகின்ற பேற்றுக்குத் தடையாக உள்ள விரோதிகள் அனைத்தும் தள்ளப்பட்டன என்பதை உணர்த்தும்விதமாக கத்யத்ரயத்தில் “மநோவாக்காயை:” என்று தொடங்கி உள்ள மூன்று வரிகளில் விரோதிகளின் நீக்கம் குறித்து ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்தார். ஸ்வாமி பிள்ளை லோகசார்யார் தாம் அருளிச்செய்த முமுக்ஷுப்படியில் (183) – இதிலே அவித்யாதிகளும் கழியுண்ணும் - என்பதில் “நம:” பதத்தின் பொருளைக் கூறும்போது இதனை உணர்த்தினார். இது போன்றே இங்கும் சரீரத்தை ஆத்மாவாக எண்ணுகின்ற நிலை போன்றதான வடிவில் உள்ள அஹங்காரம், அதன் செயலாக உள்ள உலகவிஷயங்களின் மீது ஈடுபாடு, இவற்றின் விளைவுகளான பாகவத அபசாரம் போன்ற பலவிதமான விரோதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூறுவதால் விரோதம் இல்லை என்று கருத்து.