Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 179)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
தன்னைத் தானேயிறே முடிப்பான்.
இப்படி இவன் தன்னைத்தானே முடித்துக்கொள்ளுமோவென்ன வருளிச் செய்கிறார் (தன்னைத்தானே) என்று தொடங்கி.
இப்படியாக ஒருவன் தனக்குத்தானே நன்மை தேடிக்கொள்ளுதல் என்பதில் ஈடுபட்டு, தனக்குத்தானே முடிவு தேடிக்கொள்பவர்கள் யாரும் உண்டா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார். (அல்லது இப்படியாகத் தனக்குத் தானே நன்மை தேடிக் கொண்டு ஒருவன் முடிந்து போனால், அதற்கு எம்பெருமான் அல்லவோ காரணம் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்).
– அதாவது, ஸர்வேச்வரனின் உஜ்ஜீவிப்பிக்கைக்கு அவஸர ப்ரதீக்ஷணாய்ப் போருமவனாகையாலே இவனுடைய விநாசத்துக்கு ஒரு நாளுமவன் ஹேதுவன்று; இனி “அஸந்நேவ” என்னும்படி தன்னை நசிப்பித்துக்கொள்ளுவான் தானேயிறே யென்கை. “யானே என்னை” என்கிற பாட்டிலே “யானே” என்று – என்னிழவு பகவத் க்ருதமல்ல, அவன் எதிர் சூழல்புக்குத் திரியாநிற்க நானே கிடீர் விநாசநத்தைச் சூழ்த்துக்கொண்டேன் என்றாரிறே யாழ்வார்.
ஸர்வேச்வரன் நம்மைக் கரை ஏற்றுவதற்குச் சரியான தருணம் பார்த்தபடி உள்ளவன் என்பதால் நம்முடைய கேட்டிற்கு அவன் எப்போதும் காரணம் ஆகமாட்டான். தைத்திரீயத்தில் – அஸந்நேவ – ஸர்வேஸ்வரனை இல்லை என்று கூறினால் தானே இல்லாதவன் ஆகிறான் – என்பதற்கு ஏற்ப தன்னை அழித்துக் கொள்பவன் தானாகவே அல்லவோ அவ்விதம் அழித்துக்கொள்பவன் ஆகிறான்? திருவாய்மொழியில் (2-9-7) - யானே என்னை - என்று கூறும் பாசுரத்தில், “எனது அழிகை என்பது பகவானின் செயல் காரணமாக அல்ல, நானே எனது அழிவை ஏற்படுத்திக்கொண்டேன்”, என்கிறார்.