Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 178)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அவனையொழியத் தான் தனக்கு நன்மை தேடுகையாவது - ஸ்தநந்தய ப்ரஜையை மாதாபிதாக்கள் கையில் நின்றும் வாங்கி காதுகனான ஆட்டு வாணியன் கையிலே காட்டிக்கொடுக்குமா போலே யிருப்பதொன்று.
இவ்வளவன்றிக்கே, எம்பெருமானை யொழியத்தான் தனக்கு நன்மை தேடவிழிந்தால் ஸ்வவிநாசமே பலிக்குமென்னுமிடத்தை ஸநிதர்சநமாக அருளிச் செய்கிறார் (அவனை என்று தொடங்கி).
எம்பெருமானைத் தவிர்த்துவிட்டு, தனக்குத்தானே நன்மையைத் தேடிக்கொள்ளும் முயற்சியில் ஒருவன் ஈடுபட்டாலோ, அல்லது அது போன்று சிந்தித்தாலோ அது அழிவையே உண்டாக்கும் என்பதை ஓர் உதாரணத்துடன் அருளிச் செய்கிறார்.
– அதாவது, ப்ராப்தனுமாயாப்தனுமானவவன் இவனுக்கு நன்மை தேடுமதொழிய, அதுக்கெதிர்த்தட்டான தான் தனக்கு ஸ்வோஜ்ஜீவநார்த்தமான நன்மை ஸம்பாதிக்கையாவது - ஸ்வரக்ஷணோபயோகியான ஜ்ஞாநசக்திகளொன்றுமின்றிக்கே ஸ்வமாத்ராதிக ளுணர்ந்து நோக்கவேண்டும்படியான ஸ்தநந்தய ப்ரஜையை, ரக்ஷகரான மாதாபிதாக்கள் கையில் நின்றும் வலிய வாங்கி, கொலைக்குக் கூசாதே உயிர்க் கொலையாகக் கொன்று மாம்ஸங்களோடே கலசி விற்றுவிடும் காதுகனான ஆட்டு வாணியன் கையிலே இத்தை நோக்கிக்கொள் என்று காட்டிக்கொடுக்குமாப் போலேயிருப்பதொன்றென்கை. இத்தால் - ஸர்வேச்வரனே ரக்ஷகன், தான் தனக்கு நாசகன் என்னுமிடம் சொல்லப்பட்டது.
நமக்கு உரியவனும், நமக்கு நன்மையை மட்டுமே பண்ணுபவனும் ஆகிய ஸர்வேச்வரன் நமக்கு நன்மையைத் தேடுவதைத் தவிர்த்து, அதற்கு மாறாக நாமே நம்முடைய நன்மையைத் தேடிக்கொள்ளுதல் எப்படி உள்ளது என்றால் – தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அறிவும் ஆற்றலும் இல்லாத, தன்னைக் காப்பாற்றுவதற்குத் தனது தாய்தந்தையரே வேண்டும் என்னும்படியாக உள்ள தாய்ப்பால் பருகுகின்ற கைக்குழந்தை ஒன்றை, அதனைக் காப்பாற்றுபவர்களான அதன் தாய்தந்தையர் கைகளில் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி, அதனை எந்தவிதமான கொலைக்கும் அஞ்சாமல் உயிர்களைக் கொன்று, மாமிஸங்கள் பலவற்றைக் கலந்து விற்கின்ற ஆட்டு இறைச்சியை விற்கும் ஒருவனிடம், “இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்” என்று கூறுவது போன்றதாகும். இதன் மூலம் ஸர்வேச்வரனே நம்மைக் காப்பவன் என்பதும், தானே தனக்கு நாசத்தை ஏற்படுத்திக் கொள்பவன் என்பதும் உரைக்கப்பட்டது.