Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 177)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

“தன்னால் வரும் நன்மை விலைப்பால்போலே; அவனால் வரும் நன்மை முலைப்பால் போலே” என்று பிள்ளான்வார்த்தை.

– ஆக, (நன்மைதானே தீமையாயிற்று) என்றும், (தனக்குத்தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காயிருக்கும்) என்றும், (தோஷ நிவ்ருத்திதானே தோஷமாமிறே) என்றும் - தான் தனக்குத் தேடும் நன்மை ஹேயமென்னுமிடம் சொல்லுகையாலே, அவன் தேடும் நன்மையே யுபாதேயமென்னுமிடம் பலித்ததிறே; இப்படி தான் தனக்குத் தேடும் நன்மை ஹேயம், அவன் தேடும் நன்மை யுபாதேய மென்னுமிடத்தை ஆப்த வசநத்தாலே தர்சிப்பிக்கிறார் மேல் (தன்னால்) என்று தொடங்கி.

“நன்மைதானே தீமையாயிற்று (சூர்ணை 145)”, “தனக்குத்தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காயிருக்கும் (சூர்ணை 160), “தோஷ நிவ்ருத்திதானே தோஷமாமிறே (சூர்ணை 176)” போன்ற பல சூர்ணைகள் மூலமாகத் தானாகவே தனக்குத் தேடிக்கொள்கின்ற நன்மை என்பது தீமையை ஏற்படுத்துவதால் கைவிடத்தக்கது என்று உரைக்கப்பட்டன; இதன் மூலமாக ஸர்வேச்வரன் நமக்குத் தேடி அளிக்கின்ற நன்மையே ஏற்புடையது என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டது. இவ்விதம் நாமாகவே நமக்குத் தேடிக்கொள்கின்ற நன்மை கைவிடத்தக்கது என்றும், அவன் நமக்கு அளிக்கின்ற நன்மையே ஏற்கத்தக்கது என்றும் நம்பத் தகுந்த சான்றோர்கள் கூறும் சொற்களை இங்கு உரைக்கிறார்.

(தன்னால் வரும் நன்மையாவது) - ஸ்வயத்நத்தாலே தான் தனக்குண்டாக்கிக் கொள்ளும் நன்மை. (விலைப்பால்போலே) என்றது - ஔபாதிகமுமாய், விரஸமுமாய், அப்ராப்தமுமா யிருக்குமென்கை. (அவனால் வரும் நன்மையாவது) – நிருபாதிக ஸ்வாமியான வவன்றானே இவனுக்கிது வேணும் என்றுண்டாக்கும் நன்மை. முலைப்பால் போலே என்றது - நிருபாதிகமுமாய், ஸரஸமுமாய், ப்ராப்தமும யிருக்குமென்கை.

– ”தன்னால் வரும் நன்மையாவது” என்றால் – தன்னுடைய முயற்சி மூலமாகத் தானாகவே தனக்குத் தேடிக்கொள்ளும் நன்மை என்பதாகும். “விலைப்பால்போலே” என்றால் – இத்தகைய முயற்சி எப்படிப்பட்டது என்றால், ஒரு குறிப்பிட்ட காரணத்தை அடியொற்றி வந்ததால் எந்தவிதமான சுவையும் இன்றி, ஏற்கத்தகாத ஒன்றாக இருக்கும். “அவனால் வரும் நன்மையாவது” என்றால் – எந்தவிதமான காரணமும் இன்றி நமக்கு உதவுகின்ற ஸர்வேச்வரன் “இந்தச் செயல் இவனுக்கு ஏற்புடையது, இந்த வஸ்து இவனுக்குத் தேவை” என்று தானாகவே அளிப்பதாகும். இது தாய்ப்பால் போன்று காரணம் இன்றி சுரக்கின்ற காரணத்தினால் சுவையானதாக, ஏற்கத்தக்கதாக இருக்கும் என்று கருத்து.