Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 175)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆகையாலே தோஷநிவ்ருத்திபோலே ஆந்தர குணமும் விரோதியாயிருக்கும்.

இப்படி தோஷநிவ்ருத்தி பராநுபவத்துக்கு விலக்கென்னுமிடம் ஸுஸ்பஷ்டமாம்படியான ஹேதுக்கள் பலவற்றையும் அருளிச்செய்கையாலே அத்தை ஸித்திப்பித்தாராய், அது தன்னை த்ருஷ்டாந்தமாக்கி ஸிம்ஹாவலோகந ந்யாயத்தாலே கீழ்ச்சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்ய ரூபாத்மகுணத்தினுடைய பராநுபவவிரோதித்வத்தை ஸ்திரீகரிக்கிறார் (ஆகையாலே) என்று தொடங்கி.

இப்படியாக சேதநன் ஒருவன் தனது சரீரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளுதல் என்பது பகவத் அனுபவத்திற்கு விலக்காக உள்ளது என்பது நமக்குத் தெளிவாகப் புரிவதற்காகப் பல காரணங்களால் அருளிச்செய்தார். இந்தக் கருத்தில் நிலை நின்றவராக, இதனையே உவமையாக உரைக்கிறார். சிங்கம் ஒன்று தான் நடந்து வந்த பாதையை சற்று தூரம் சென்ற பின்னர் திரும்பிப் பார்ப்பதாகிய “ஸிம்ஹாவலோகந ந்யாயம்” என்ற ரீதியில் அருளிச்செய்கிறார். இது என்ன? அதாவது சரீரத்தை விடுதல் என்பது எம்பெருமான் சேதநனை அனுபவிக்க எண்ணும்போது, அத்தகைய அனுபவத்திற்குத் தடையாக எவ்விதம் இருக்குமோ அது போன்று, ஆத்மகுணங்களாக உள்ள அடிமைத்தன்மை மற்றும் பார்தந்த்ர்யம் ஆகிய இரண்டும் எம்பெருமான் சேதநனை அனுபவிக்க எண்ணும்போது தடையாக உள்ளன என்பதை இங்கு உறுதியாக உரைக்கிறார்.

(ஆகையாலே) என்று கீழே ஸித்திப்பித்தவர்த்தத்தை யநுவதிக்கிறார். (தோஷ நிவ்ருத்திபோலே) என்றது - தோஷங்கழிகை ஸ்வரூபௌஜ்ஜ்வல்யத்துக் குறுப்பாயிருக்கச் செய்தேயும் தோஷத்தையே போக்யமாக விரும்புகிற ப்ரணயியான வவனுக் கநபிமதமாகையாலே யாதொருபடி பராநுபவத்துக்கு விரோதியாகிறது, அதுபோலேயென்றபடி. (ஆந்தர குணம்) என்கிறது - சேஷத்வபாரதந்த்ர்யங்களை. இவற்றை (ஆந்தர குணம்) என்கிறது - ஜ்ஞாநாநந்தங்களிலுங்காட்டில் ஆத்மாவுக்கு அந்தரங்கமாகையாலே. இதினுடைய பராநுபவ விரோதித்வப்ரகாரம் கீழ்ச் சொல்லப்பட்டதிறே. இவ்விடத்திலும் (ஆந்தர குணம்) என்கிறது – பாரதந்த்ர்ய மொன்றையுமாம்.

“ஆகையாலே” என்பதன் மூலம் இதுவரை உரைத்தவற்றின் ஆழ்பொருளை உணர்த்துகிறார். “தோஷ நிவ்ருத்திபோல்” என்றால் என்ன? சரீரத்தைக் கைவிடுதல் என்பது, ஆத்மாவானது தனது இயல்பான ஒளியை மீண்டும் அடைவதற்கான (தனது சுருங்கிய ஞானத்தில் இருந்து விடுபடுதல்) நிலைக்கு உதவுவதாக உள்ளது; ஆனால் இது, அழுக்கையே இன்பமானது என்று எண்ணும் காதல் கொண்ட ஸர்வேச்வரனுக்கு விருப்பம் இல்லாத ஒன்றாக இருப்பதால், சரீரம் விடுதல் என்பது எவ்விதம் ஸர்வேச்வரனுடைய அனுபவத்திற்குத் தடையாக உள்ளதோ அது போன்று – என்று பொருள் கொள்க. ”ஆந்த்ர குணம்” என்பதால் சேஷத்வம் மற்றும் பாரதந்த்ர்யம் கூறப்பட்டது. இந்த இரண்டும் ஞானம் மற்றும் ஆனந்தம் என்பதான ஆத்மகுணங்களைக் காட்டிலும் ஆத்மாவிற்கு மேலும் அந்தரங்க குணமாக உள்ளதால் இவ்விதம் கூறப்பட்டது. இந்த இரண்டும் ஸர்வேச்வரன் சேதநனை அனுபவிக்கத் தடையாக உள்ளது குறித்து சூர்ணை 159 முதல் சூர்ணை 163 முடிய கூறப்பட்டது. இந்தச் சூர்ணையில் கூறப்பட்ட ஆந்த்ரகுணம் எனபது பாரதந்த்ர்யத்தை மட்டுமே என்று கொள்ளலாம்.