Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 173)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
“இளங்கோவில் கைவிடேல்” - என்றிவன் ப்ரார்த்திக்க வேண்டும்படியாயிருக்கும்.
ஆதரம் மட்டமாம்படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் (இளங்கோயில்) இத்யாதியாலே.
திவ்யதேசங்களின் மீது ஸர்வேச்வரனுக்கு உண்டாகின்ற விருப்பம் குறைவுபடுவதை மேலும் விளக்குகிறார்.
– அதாவது, ஸ்ரீபூதத்தார், தம்மைப் பெறுகைக் குறுப்பாக முன்பு தான் விரும்பின திவ்யதேசங்களில் முன்புத்தை யாதரமின்றிக்கே தன் திருவுள்ளத்திலே அத்யாதரத்தைப் பண்ணிச்செல்லுகிறபடியைக் கண்டு, அவ்வோ திவ்யதேசங்களைக் கைவிடப்புகுகிறானோ என்றதிசங்கை பண்ணி, என் ஹ்ருதயத்திலே புகுந்திருக்கைக்கு பாலாலயமான திருப்பாற்கடலைக் கைவிடாதொழிய வேணும் என்றாரிறே. ஆகையால், இப்படியிவன் ப்ரார்த்திக்க வேண்டும்படியாய்த்து அவனுக்கவற்றி லாதரம் மட்டமாம்படி என்கை.
இங்கு பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி (54) – இளங்கோயில் கைவிடேல் – என்ற பாசுரத்தை விளக்குகிறார். இதில் பூதத்தாழ்வார் கூறுவது: என்னை அடைவதற்காக அவன் முன்பு பல திவ்யதேசங்களிலும் எழுந்தருளி நின்றான். இப்போது என்னைப் பெற்ற பின்னர் அவன் அந்த திவ்யதேசங்களின் மீது முன்பு போன்று ஆசை இல்லாமல், என்னுடைய மனதில் மிகுந்த விருப்பம் கொண்டு நிற்கிறான் – என்பதாகும். இதனைக் கண்ட ஆழ்வார் – அவன் தனது மற்ற திவ்யதேசங்கள் அனைத்தையும் கைவிட முயல்கிறான் போலும் – என்று சந்தேகம் கொள்கிறார். ஆகவே அவனிடம், “என் மனதில் நீ புகுவதற்கு பாலாலயம் போன்று விளக்கிய திருப்பாற்கடலை நீ கைவிடாமல் இருத்தல் வேண்டும்”, என்கிறார். ஆக ஞானி ஒருவன் அவனிடம் ”திவ்யதேசங்களைக் கைவிடாதே” என்று வேண்டிக்கொள்ளும் அளவிற்கு அவனுக்கு மற்ற திவ்யதேசங்கள் மீது உள்ள ஆசையானது குறைவுபடத் தொடங்கியது என்று கருத்து.