Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 172)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
“கல்லும் கனைகடலும்” என்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றிலாதரம் மட்டமாயிருக்கும்.
இந்த ஸாதந ஸாத்யத்வ ப்ரயுக்தமான ஆதரதாரதம்யத்தை யருளிச் செய்கிறார் (கல்லும்) என்று தொடங்கி.
– இப்படியாக உள்ள உபாயம் மற்றும் பலன் காரணமாக ஏற்படுகின்ற ஆசையின் உயர்வு மற்றும் தாழ்வுகளை இந்தச் சூர்ணையின் உரைக்கிறார்.
– அதாவது, தன் திருவுள்ளத்தில் புகுந்தபின்பு, தனக்குப் புறம்பொன்றிலு மாதரமில்லை என்று தோற்றும்படி அவனிதிலே அத்யாதரத்தைப் பண்ணி நித்யவாஸம் பண்ணுகையாலே, திருமலையும், தன் ஸந்நிதாநத்தாலே கோஷிக்கிற திருப்பாற்கடலும், ஒருத்தர்க்குமெட்டாத பரமபதமான தேசமும் புல்லியவாய்த்தினவோ என்றாரிறே யாழ்வார்; இப்படியே, ஸாத்யமான இச்சேதநஹ்ருதயம் ஸித்தித்தால், இதுக்கு ஸாதநமாக முன்பு விரும்பிப்போந்த திவ்யதேசங்களி லாதரம் ஸங்குசிதமாயிருக்கும் மென்கை. ஸாத்யம் கைபுகுரு மளவுமிறே ஸாதநத்தி லாதரம் மிக்கிருப்பது.
முதலில் பெரியதிருவந்தாதி (68) - கல்லும் கடலும் - என்ற பாசுரத்தின் விளக்கத்தை அருளிச்செய்கிறார். நம்மாழ்வார் கூறுவது - என்னுடைய மனதில் அவன் புகுந்த பின்னர் அவனுக்கு மற்ற எதன் மீதும் ஆசை இல்லை என்பது புலப்படும்படியாக, அவன் எனது சரீரம் மீது மிகுந்த ஆசையுடன் எப்போதும் வசிக்கிறான். இதனால் திருமலை, தன்னுடைய சேர்க்கை காரணமாக ஒலிக்கின்ற திருப்பாற்கடல், யாருக்கு எளிதில் எட்டாத பரமபதம் ஆகிய பலவும் தாழ்ந்ததாக அவனுக்கு மாறியது போலும் – என்பதாகும். ஆக, இப்படி இவன் செய்கின்ற உபாயத்திற்குப் பலனாக மனிதர்களின் மனம் வசிப்பதற்குக் கிட்டினால், அவற்றை அடையும் உபாயமாகத் தான் விருப்பத்துடன் வசித்து வந்த திவ்ய தேசங்களின் மீது ஆசை குறைவாகவே இருக்கும் என்று கருத்து. பலன் கைகூடும் காலம் வரை மட்டுமே அந்தப் பலனைப் பெறுவதற்காக மேற்கொள்ளும் உபாயத்தின் மீது ஈடுபாடு இருக்கும் அல்லவோ?