Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 171)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அங்குத்தை வாஸம் ஸாதநம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம்.

உகந்தருளின நிலங்களி லெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவ்விஷயமொன்றிலுமே பண்ணுமென்றார் கீழ்; இவ்விஷயம் ஸித்தித்தால் உகந்தருளின நிலங்களிலாதரம் அவனுக்கு ஸங்குசிதமா மென்னுமிட மருளிச்செய்கைக்காக, இரண்டிடத்துக்கு முண்டான வாசியையருளிச் செய்கிறார் (அங்குத்தை) என்று தொடங்கி.

– தான் மிகவும் விருப்பத்துடன் எழுந்தருளியுள்ள அனைத்து திவ்யதேசங்கள் மீதும் எத்தனை விருப்பம் கொள்வானோ, அந்த அளவிற்கு ஞானியின் சரீரம் மீது விருப்பம் கொள்கிறான் என்று கடந்த சூர்ணையில் உரைத்தார். இப்படியாக ஞானியின் சரீரம் ஒன்றில் வசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது என்றால், திவ்யதேசங்களின் மீது ஸர்வேச்வரன் கொள்ளும் ஈடுபாடு குறைவுபடும் என்பதை விளக்கும்விதமாக இரண்டிற்கும் இடையே உள்ள வேற்றுமையை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

உகந்தருளின நிலங்களில் விரும்பிவர்த்திக்கிறது உசிதோபாயங்களாலே சேதநரையகப்படுத்திக் கொள்ளுகைக்காகையாலே (அங்குத்தை வாஸம் ஸாதநம்) என்கிறது. இச்சேநநன் திருந்தி இவன் ஹ்ருதயத்தினுள்ளே தான் வஸிக்கப்பெற்றவிது அங்கு நின்று பண்ணின க்ருஷிபலமாகையாலே (இங்குத்தை வாஸம் ஸாத்யம்) என்கிறது. “நாகத்தணைக் குடந்தை”, “மலைமேல்தான் நின்று”, “பனிக்கடலில் பள்ளிகோளை” இத்யாதிகளிலே, இவற்றினுடைய ஸாதநஸாத்யத்வங்கள் தோற்றாநின்றதிறே.

“அங்குத்தை வாஸம் ஸாதநம்” என்பது என்ன? தான் விரும்பிய திவ்ய தேசங்களில் அதிக ஈடுபாட்டுடன் வசிப்பது ஏன் என்றால் அங்கு வருபவர்களைத் தகுந்த உபாயங்கள் மூலமாகத் தன்னிடம் அகப்பட்டுக் கொள்ளும்படிச் செய்வதற்காக ஆகும். இதனால்தான் இப்படி வசிப்பதை “ஸாதனம்” என்றார். “இங்குத்தை வாஸம் ஸாத்யம்” என்பது என்ன? இந்த மக்கள் திருந்தும் விதமாக திவ்யதேசங்களுக்கு வருபவர்களின் மனதில் அவன் புகுந்து விடுகிறான். ஆக இது மேலே கூறப்பட்ட சாதனம் அல்லது உபாயத்தில் பலனாக உள்ளதால் ஸாத்யம் (அல்லது பலன்) எனப்பட்டது. கீழே உள்ள பல பாசுரங்கள் இங்கு கூறப்பட்ட ஸாதனம் மற்றும் பலன் ஆகியவற்றை உரைப்பது காண்க: நான்முகன் திருவந்தாதி (36) – நாகத்தணைக் குடந்தை திருவாய்மொழி (10-4-4) – மலைமேல்தான் நின்று பெரியாழ்வார் திருமொழி (5-4-9) – பனிக்கடலில் பள்ளிகோளை