Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 170)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

“திருமாலிருஞ்சோலை மலையே” என்கிறபடியே உகத்தருளின நிலங்க ளெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைக தேசத்திலே பண்ணும்.

இப்படி தன் விருப்பத்துக்கு விஷயமான விவன் சரீரத்தை அவன் விரும்பும் ப்ரகாரமருளிச் செய்கிறார் மேலே (திருமாலிருஞ்சோலை மலை) என்று தொடங்கி.

– இப்படியாகத் தனது விருப்பத்திற்கு இலக்காக உள்ள சேதநனின் சரீரத்தை ஸர்வேச்வரன் எவ்விதம் விரும்புகிறான் என்பதை அருளிச் செய்கிறார்.

– அதாவது, தெற்குத் திருமலையும் திருப்பாற்கடலையும் என் உத்தமாங்கத்தையுமொக்க விரும்பா நின்றான், ஸ்ரீவைகுண்டத்தையும் வடக்குத் திருமலையையும் என்னுடைய சரீரத்தையுமொக்க விரும்பாநின்றான் என்றாரிறே ஆழ்வார். இப்படி யோரோ ரவயவங்களிலே இரண்டிரண்டு திருப்பதியில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினானென்றவிது, எல்லாத் திருப்பதிகளிலும் பண்ணின விருப்பத்தை ஓரோரவயவங்களிலே பண்ணிநின்றா னென்னுமதுக்குபலக்ஷணம். ஆகையாலே, அப்பாட்டிற் சொல்லுகிறபடியே, தனக்கபிமதமான திவ்ய தேசங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை ஜ்ஞாநியான விவனுடைய சரீரைகதேசத்திலே பண்ணுமென்கிறார்.

திருவாய்மொழி (10-7-8) - திருமாலிருஞ்சோலை மலையே - என்னும் பாசுரம் காண்க. அதில் ஆழ்வார் கூறுவது - திருமாலிருஞ்சோலை, திருப்பாற்கடல் மற்றும் எனது தலை ஆகிய மூன்றையும் ஒரே போன்று விரும்பி நின்றான்; ஸ்ரீவைகுண்டம், திருவேங்கடம் மற்றும் எனது சரீரம் ஆகிய மூன்றையும் ஒரே போன்று விரும்பி நின்றான் - என்பது ஆகும். இவ்விதம் தனது ஒவ்வொரு அவயவம் குறித்தும் இரண்டு திவ்யதேசங்களில் கொள்கின்ற விருப்பத்தைக் கொண்டான் என்று கூறுகிறார். இதன் மூலம் அனைத்து திவ்யதேசங்களிலும் கொண்ட விருப்பத்தைத் தனது ஒவ்வொரு அவயவத்தில் வைத்தான் என்கிறார். அதாவது அந்தப் பாசுரத்தில் கூறப்பட்டபடி தமக்கு விருப்பமான பல திவ்யதேசங்களில் கொள்ளும் விருப்பத்தை ஞானியின் சரீரத்தின் மீது கொள்கிறான் என்கிறார்.