Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 169)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பரமார்த்தனான விவனுடைய சரீர ஸ்திதிக்கு ஹேது கேவல பகவதிச்சையிறே.

இன்னம் முகாந்தரத்தாலே இவன் தேஹத்திலவன் விருப்பத்தை தர்சிப்பிக்கிறார் (பரமார்த்தன்) என்று தொடங்கி.

– வேறு ஒரு காரணம் என்பதாலும் சேதனனின் சரீரத்தின் மீது ஸர்வேச்வரனுக்கு உள்ள ஆசையைக் காண்பிக்கிறார்.

(பரமார்த்தனாகிறான்) – “இந்நின்ற நீர்மை யினியாமுறாமை”, “எந்நாள் யானுன்னை யினி வந்து கூடுவன்”, ”எங்கினித் தலைப்பெய்வன்”, ”நாளே லறியேன்”, ”தரியே னினி”, “கூவிக்கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ” என்று ஸம்ஸாரத்தில் அடிக்கொதிப்பாலும், பகவதநுபவத்தில் பெருவிடாயாலும் இருக்குமேலில்லை என்னும்படி யார்த்தி விளைந்தவன்; ஏவம் பூதனானவனுடைய சரீர ஸ்திதிக்கு ஹேது ப்ராரப்த கர்மமென்ன வொண்ணாதிறே, “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்றத்தோடு விரோதிக்கையாலே; ”ஆர்த்தாநா மாசுபலதா ஸக்ருதேவ க்ருதா ஹ்யஸௌ, த்ருப்தாநாமபி ஜந்தூநாம் தேஹாந்தர நிவாரிணீ” என்றிறே ப்ரபத்தி ஸ்வபாவந்தானிருப்பது. ஆகையால், இவனுடைய சரீர ஸ்திதிக்கு ஹேது, “இன்னமும் சில நாளிவனை யிச்சரீரத்தோடே வைத்துநுபவிக்கவேணும்” என்கிற ஈச்வரோச்சையொழிய வேறொன்றில்லாமையாலே (கேவல பகவதிச்சையிறே) என்கிறார். ப்ராரப்த கர்மமடியாக விருக்கிற த்ருப்த விஷயத்திலும் பகவதிச்சை யுண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே.

– ஆர்த்தன் என்றால் இப்போதுள்ள சரீரத்தின் மீது வெறுப்பு அடைபவன், பரமார்த்தன் என்றால் இவ்விதம் உள்ளவர்களில் மிகவும் சிறந்தவன் ஆவான். இப்படிப்பட்டவன் யார் என்றால், கீழே உள்ள வரிகளில் உள்ளது போன்று இருப்பவன்: திருவிருத்தம்(1) - இந்நின்ற நீர்மை யினியாமுறாமை திருவாய்மொழி (3-2-1) – எந்நாள் யானுன்னை யினி வந்து கூடுவன் திருவாய்மொழி (3-2-9) - எங்கினித் தலைப்பெய்வன் திருவாய்மொழி (9-8-4) - நாளே லறியேன் திருவாய்மொழி ( 5-8-7) - தரியே னினி திருவாய்மொழி(6-9-9) - கூவிக்கொள்ளுங்கால மின்னங் குறுகாதோ மேலும் ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிப்பதாலும், ஸர்வேச்வரனைப் பிரிந்து அதிக தாகம் எடுத்தவன் தண்ணீருக்காகத் தவிப்பது போன்று உள்ளவனாகவும் ஆவான் (அல்லது இதனை விட வேறு ஏதும் இல்லை என்னும்படியான துன்பத்தில் உள்ளவன்). இவனது இந்தச் சரீர இருப்பிற்குக் (அவனைப் பொறுத்தவரை துன்பத்துடன் கூடிய சரீர இருப்பு) காரணம் பலரும் நினைப்பது போன்று கடந்த பிறவிகளில் செய்த செயல்கள் காரணமாகப் பலன் தரத் தொடங்கிவிட்ட (ப்ராரப்த) கர்மங்கள் அல்ல; ஏன் என்றால், இவ்விதம் கொண்டால் இந்தக் கருத்தானது, கீதை (18-66) - ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி - அனைத்து பாவங்களிலிருந்தும் நான் விடுவிப்பேன் – என்பதுடன் முரணாகிறது அல்லவா? மேலும் ப்ரபத்தியின் தன்மை எப்படிப்பட்டது என்றால், ஆர்த்தாநா மாசுபலதா ஸக்ருதேவ க்ருதா ஹ்யஸௌ, த்ருப்தாநாமபி ஜந்தூநாம் தேஹாந்தர நிவாரிணீ – ஒருமுறை செய்யப்பட்ட ப்ரபத்தியானது துன்பம் அடைந்தவர்களுக்கு விரைவான நல்ல பயனை அளிக்கிறது, த்ருப்தப்ரபந்நன் ஒருவனுக்கு வேறு சரீரம் கிட்டாமல் செய்கிறது - என்பதற்கு ஏற்ப அல்லவா உள்ளது? எனவே இவனது சரீரம் இருப்பதன் காரணம் என்னவென்றால், “இன்னும் சில நாட்கள் இவனை இந்தச் சரீரத்துடன் வைத்து நாம் இவனை அனுபவிபோம்”, என்பதான ஸர்வேச்வரனின் ஆசை அல்லாமல் வேறு ஏதும் இல்லை என்கிறார். ப்ராரப்த கர்மம் காரணமாக ஏற்படுகின்ற த்ருப்தப்ரபந்தன் (இந்த பிறவியின் இறுதியில் மோக்ஷம் அடைபவன்) குறித்தும் ஸர்வேச்வரனுக்கு ஆசை ஏற்படுவதால், அந்த ஆசையை வேறுபடுத்துவதற்காக “கேவல” என்ற பதம் இடப்பட்டது.