Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 168)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

வேர்சூடுமவர்கள் மண்பற்றுக் கழற்றாதாப்போலே ஜ்ஞாநியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்.

அபிமத விஷயத்தி லழுக்குப்போலே யாதரிக்கிற மாத்ரமன்றிக்கே, இவனுடைய ஜ்ஞாநபரிமளம் இத்தேஹத்திலே ப்ரகாசிக்கையாலும் இத்தை யாதரிக்கு மென்னுமிடத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச்செய்கிறார் (வேர்) இத்யாதியாலே.

– மனதிற்குப் பிடித்தவளின் விஷயத்தில் உள்ள அழுக்கு போன்ற சேதனனின் சரீரத்தை விரும்பும் ஸர்வேச்வரன், சேதனனின் ஞானம் என்பது இந்தச் சரீரத்தின் மூலமாகவே வெளிப்படுவதால், இதனைப் பெரிதும் விரும்புகிறான் என்பதை ஓர் உதாரணம் மூலம் விளக்குகிறார்.

– அதாவது, மணத்தின் வாசியறிந்து வேர்சூடும் போகிகளானவர்கள், மண்ணையுதறில் மணங்குன்றும் என்று மண்பற்றுக்கழற்றாதே சூடுமாபோலே, பரம போகியான ஸர்வேச்வரன் ஜ்ஞாநியான விவனை விரும்பி யநுபவிக்குமிடத்தில், “ஆஹ்லாத சீத நேத்ராம்பு:” இத்யாதிப்படியே ஜ்ஞாந கார்யமான விக்ருதிகளுக்கெல்லா மாச்ரயமாய்க் கொண்டு இவனுடைய ஜ்ஞாந பரிமளவெல்லாம் தோற்றும்படியிருக்கிற விக்ரஹத்தோடே கூட விரும்புமென்றபடி.

– குருவேர் என்று கூறப்படுகின்ற வேரைத் தலையில் நறுமணம் காரணமாகச் சூடிக்கொள்ள எண்ணுகின்ற இன்பம் அனுபவிக்க எண்ணுபவர்கள், அதில் உள்ள மண்ணைத் தட்டி உதறிவிட்டால், அதன் நறுமணம் குறைந்துவிடும் என்று கருதி, அந்த மண்ணுடனேயே தங்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். இதே போன்று இன்பத்தை அனுபவிப்பவர்களில் மிகவும் உயர்ந்தவனாகிய ஸர்வேச்வரன் செய்வது என்னவென்றால் “ஆஹ்லாத சீத நேத்ராம்பு:” - ஸர்வேச்வரனின் குணங்களை எண்ணிய மாத்திரத்தில் கண்களில் ஆனந்தக்கண்ணிர் பெருகும்படியும், மயிர்க்கூச்சல் எடுக்கும்படியும் உள்ளவன் என்பதற்கு ஏற்ப, ஞானத்தின் வெளிப்பாடு காரணமாக அத்தகைய ஞானவேறுபாடுகளை வெளிப்படுத்தவல்ல இடமாக உள்ள ஞானியின் சரீரத்தை விரும்புகிறான்.