Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 167)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

“வஞ்சக்கள்வன்” ”மங்கவொட்டு”.

இப்படியபிமத விஷயத்தி லழுக்குகக்குமாப்போலே, ஆத்மஜ்ஞானம் பிறந்தவிவன் “அழுக்குடம்பு” என்று கழிக்கிற வித்தேஹத்தை ஈச்வரன் விரும்ப எங்கே கண்டதென்ன வருளிச்செய்கிறார் (வஞ்சக்கள்வன்) இத்யாதியாலே.

இவ்விதம் தனது மனைவியின் விஷயத்தில் அழுக்கை விரும்புவது போர்னு, ஆத்ம ஞானம் உண்டான பன்னர் “இந்தச்சரீரம் அழுக்கானது” என்று ஒருவன் தள்ளுகின்ற சரீரத்தை ஈஸ்வரன் விரும்புகிறான் என்பதை எங்கே காணலாம் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது “வஞ்சக்கள்வன்” என்று தொடங்கி “மங்கவொட்டு” என்னுமளவாக, தம்முடைய திருமேனியிலே அத்யாதரத்தைப் பண்ணியவனநுபவித்தபடி களையும்; அவ்வளவன்றிக்கே அதிசாபலத்தாலே இத்திருமேனியோடே தம்மைத் திருநாட்டில் கொண்டுபோவதாக வவன் அபிநிவிஷ்டனாயிருக்கிறபடியைக் கண்டு “பிரானே! இப்படி செய்தருளவொண்ணாது” என்று நிர்பந்தித்து, இதினுடைய தோஷத்தையவனுக் குணர்த்தி, இப்படி ஹேயமான விது மங்கும்படி யிசைய வேணும் என்று கால்கட்டி, அவனித்தை விடுவித்துக் கொண்டு போம்படி வருந்தி இசைவித்துக் கொண்டபடியையு மருளிச்செய்தாரிறே யாழ்வார்.

– திருவாய்மொழி (10-7-1) – வஞ்சக்கள்வன் – என்று தொடங்கி, (10-7-10) - மங்கவொட்டு – என்று முடிகின்ற பாசுரங்கள் மூலமாக ஆழ்வார் உரைப்பது என்னவென்றால், தனது திருமேனியை மிகுந்த ஆசையுடன் ஸர்வேச்வரன் எவ்விதம் அனுபவித்தான் என்பதையும், திருமேனி மீது கொண்ட சபலம் காரணமாகத் தன்னை அதே திருமேனியுடன் பரமபதம் கொண்டு செல்ல அவன் மிகுந்த ஆசையுடன் உள்ளதாகவும் இருப்பதைக் காண்கிறார். இதனைக் கண்ட ஆழ்வார் ஸர்வேச்வரனிடம், “பிரானே! இப்படிச் செய்வது முறையல்ல”, என்று அன்பாகக் கட்டளை இட்டு, இந்தச் சரீரத்தின் தோஷங்களை அவனுக்கு நன்றாக உணர்த்தி, “இப்படியாக உள்ள தாழ்ந்த சரீரம் இங்கேயே மடியும்படி நீ சம்மதிக்கவேண்டும்”, என்று கூறினார். மேலும் அவன் இந்தச் சரீரத்திலிருந்து தனது ஆத்மாவை விடுவித்துக்கொண்டு போகும்விதமாக வருத்தத்துடன் உரைத்த பாசுரங்களை ஆழ்வார் அருளிச்செய்தார் அல்லவோ?