Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 166)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
”ஸ்நாநம் ரோஷஜநகம்” என்கிற வார்த்தையை ஸ்மரிப்பது.
இதுதான் லௌகிகத்தி லன்றிக்கே பிராட்டி திறத்தில் அவன் றனக்குமிப்படி யிருந்தமைக்கு ஸூசகமான வார்த்தையை ஸ்மரிப்பிக்கிறார்மேல் (ஸ்நாநம் என்று தொடங்கி).
– கடந்த சூர்ணையில் கூறப்பட்ட விஷயமானது உலகில் உள்ள சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல, சீதை விஷயத்தில் இராமனுக்கும் இருந்தது என்பதைச் சூசகமாக உணர்த்துகிறார்.
– அதாவது, பிராட்டி திருமஞ்சனம் செய்து வந்தது பெருமாளுக்கு ரோஷஜநகம் என்னுமத்தை ப்ரகாசிப்பிக்கிற “தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்வம்” என்கிற வார்த்தையை இவ்வர்த்தத்துக்குடலாம் ஸ்மரிப்பதென்கை. “ஸபங்கா மநலங்காரம்” இத்யாதிப்படியே, பத்து மாஸம் திருமஞ்ஜநம் பண்ணாமலழுக்கடைந்திருந்த வடிவைக்காண வாசைப்பட்டிருந்தவர்க்கு, இவள் திருமஞ்ஜநம் பண்ணிவந்தவிது ரோஷஜநகமாகச் சொல்லவேண்டாவிறே. ஆனால், “தீர்க்கமுஷ்ணம் விநிச்வஸ்ய மேதிநீவமவலோகயந், உவாச மேகஸங்காசம் விபீஷண முபஸ்திதம்; திவ்யாங்கராகாம் வைதேஹீம் திவ்யாபரண பூஷிதாம், இஹஸீதாம் சிரஸ்ஸ்நாதா முபஸ்தாபய மாசிரம்” என்று இவர்தாமேயன்றோ திருமஞ்ஜநம் பண்ணியலங்கரித்துக் கொண்டு வரும்படி ஸ்ரீவிபீஷணாழ்வானைப் பார்த்தருளிச் செய்தது; இப்படி இருக்கச்செய்தே பின்னை ரோஷம் ஜநிப்பானென்னென்னில்; நாம் நல்வார்த்தை சொல்லிவிடக்கடவோம், தானே யறியாளோ என்று சொல்லிவிட்டாரித்தனை போக்கி, அது ஸஹ்ருதமாகச் சொன்ன வார்த்தையல்ல, அல்லாதபோது ருஷ்டராகக் கூடாதிறே. அவன் தான், “அஸ்நாதா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ராக்ஷஸாதிப” என்றிருக்கச்செய்தே, “யாதாஹ ராமோ பர்த்தா தே ததா தத் கர்த்து மர்ஹஸி” என்று ஸ்ரீவிபீஷணாழ்வன் நிர்பந்தித்துச் சொன்ன பின்பன்றோ திருமஞ்ஜநம் பண்ணிற்றென்னில்? அவன் பெருமாள் திருவுள்ளக் கருத்தை யறியாதே, அருளிச்செய்த வார்த்தையைக் கொண்டு சொன்னானித்தனையிறே. எல்லாஞ் செய்தாலும், பத்துமாஸம் ராவண பவநத்திலேயிருந்த விவள் சிறையிருந்த வேஷத்தோடே சென்று காணுமித்தனையல்லது, திருமஞ்ஜனம் பண்ணேன் என்றிருக்கவேணுமிறே; அது செய்யாதே, சடக்கென திருமஞ்ஜனம் பண்ணி வந்தாளிறே; அது, அவ்விருப்புக்காண வாசைப்பட்டவர்க்கு ரோஷ ஹேதுவாய்த்து. ஆகையாலே (ஸ்நாநம் ரோஷஜநகம்) என்னக் குறையில்லை. அன்றிக்கே (ஸ்நாநம் நோஷஜநக மென்கிற வார்த்தையாவது) - ஸ்ரீவிபீஷணாழ்வான் திருமஞ்ஜநம் செய்தருளச் சொன்னபோது பெருமாள் திருவுள்ளத்தை யறியுமவளாகையாலே, “அவர்க்கிது அநபிமதமாகையாலே ரோஷ ஜநகமாய் வந்துமுடியும்” என்று நினைத்து, “அஸ்நாதா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ராக்ஷஸாதிப” என்று பிராட்டியருளிச் செய்த வார்த்தையாகவுமாம். ரோஷஜநக மென்னுமத்தை ப்ரகாசிப்பிக்கிற வார்த்தையென்று கீழ்சொன்ன ந்யாயமிங்கு மொக்கும்.
– சீதை இராவணனின் சிறை வாசத்திற்குப் பின்னர் இராமனைக் காண வந்தபோது நீராடிவிட்டு வந்தாள். இப்படியாக வந்தது இராமனுக்கு மிகுந்த சீற்றத்தை உண்டாக்கியது. இதனை உணர்ந்துகின்ற இராமாயணம் யுத்தகாண்டம் (115-17) - தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்வம் - சீதையே! கண்களில் நோய் உள்ள ஒருவனுக்கு விளக்கானது எத்தனை வெறுப்பை உண்டாக்குமோ அது போன்று நீ இப்போது உள்ளாய் - என்ற இராமனின் சொற்கள், கடந்த சூர்ணையில் கூறப்பட்டதை விளக்குவதாக உள்ளன. இராமாயணம் ஸுந்தரகாண்டம் (15-21) - ஸபங்கா மநலங்காரம் - அலங்காரம் இல்லாமலும், அழுக்கு படிந்தபடியும் இருந்த சீதை - என்று கூறுவதற்கு ஏற்ப, பத்து மாதங்கள் நீராடாமல் இருந்த சீதையின் அழுக்கான வடிவழகைக் காண வேண்டும் என்ற ஆசையுடன் இராமன் இருந்தான். அப்போது இவள் நீராடிவிட்டு வந்த நிலை என்பது சீற்றத்திற்குக் காரணமாக இருந்தது என்பதைக் கூறவும் வேண்டுமோ? இங்கு ஒரு சந்தேகம் எழலாம். கீழே உள்ள இராமாயண வரிகள் காண்க: யுத்தகாண்டம் (114-6) - தீர்க்கமுஷ்ணம் விநிச்வஸ்ய மேதிநீவமவலோகயந், உவாச மேகஸங்காசம் விபீஷண முபஸ்திதம் – இராமன் தனது அருகில் நின்றிருந்த மேகம் போன்ற நிறம் கொண்ட விபீஷணனிடம் மிகவும் தீர்க்கமாகவும், பூமியைப் பார்த்தபடியும், பெருமூச்சு விட்டபடியும் பின்வருமாறு உரைத்தான் (இங்கு – தீர்க்கமபிநிச்வவஸ்ய – என்று சில இராமாயண ப்ரதிகளில் உள்ளது). யுத்தகாண்டம் (114-7) - திவ்யாங்கராகாம் வைதேஹீம் திவ்யாபரண பூஷிதாம், இஹஸீதாம் சிரஸ்ஸ்நாதா முபஸ்தாபய மாசிரம் – நீராடியவளாகவும், நறுமணத்துடன் கூடிய சந்தனம் பூசப்பட்டவளாகவும், திவ்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும் விதேக தேசத்து அரசனின் புத்திரியான சீதையை இங்கு தாமதிக்காமல் அழைத்து வருவாயாக. அதாவது மேலே உள்ள வரிகளின்படி, இராமன் தானாகவே அல்லவோ சீதையை நீராடி அலங்காரம் செய்துகொண்டு வரும்படி விபீஷணன் மூலமாக உரைத்தான்? இப்படி உள்ளபோது, சீதை நீராடி வந்தவுடன் சீற்றம் அடைந்தது எவ்விதம் ந்யாயம் ஆகும்? ஏன் சீற்றம் அடைந்தான்? இதற்குச் சமாதானம் அருளிச்செய்கிறார். அதாவது இராமனின் எண்ணம், “நாம் அவளை இவ்விதம் நீராடி அலங்கரித்துக்கொண்டு வரும்படி உரைத்துவிடுவோம். ஆனால் என்னுடைய மன ஓட்டம் எப்படிப்பட்டது என்று அவள் அறிவாள்”, என்பதாகும். ஆக இராமன் விபீஷணனிடம் உரைத்தது ஆழ்மனதில் இருந்து வெளிப்பட்டது அல்ல; எனவே சீற்றம் அடைந்தான். இவ்விதம் கொள்ளவில்லை என்றால் சீற்றத்துடன் கூடியவனாக இருந்த நிலை பொருந்தாது அல்லவோ? அடுத்து இராமனின் எண்ணத்தைச் சீதை புரிந்துகொண்டாளா என்று சந்தேகத்திற்கு விடை அளிக்கிறார். இராமாயணம் யுத்தகாண்டம் – அஸ்நாதா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ராக்ஷஸாதிப - சீதை விபீஷணனிடம், “அரக்கர்களின் தலைவனே! நான் நீராடாமல் உள்ள நிலையிலேயே இராமனைக் காண விரும்புகிறேன்”, என்றாள். இதனைக் கேட்ட விபீஷணன், “இராமாயணம் யுத்தகாண்டம் – யாதாஹ ராமோ பர்த்தா தே ததா தத் கர்த்து மர்ஹஸி - உனது நாயகனான இராமன் உன்னை என்ன செய்யச் சொல்கிறானோ அதன்படி நீ செய்யக் கடமைப்பட்டுள்ளாய்”, என்று உரைத்தான். ஆக இராமன் கூறியதைக் கேட்ட விபீஷணன் இராமனின் சொற்கள் அளவில் கேட்டு வந்தானே தவிர, இராமனின் திருவுள்ளத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இவன் வந்து இவ்விதம் நிர்பந்தம் செய்த காரணத்தினால் அல்லவோ சீதை நீராடினாள்? என்ன சமாதானம் உரைத்தாலும், சீதை பத்து மாதங்கள் இராவணனின் சிறையில் இருந்தாள். அப்போது அந்தச் சிறை வாசத்தின் பின்னர் அதே சிறைக்கோலத்துடன் அல்லவோ இராமனைச் சென்று கண்டிருக்க வேண்டும்? “நீராடமாட்டேன்” என்று உறுதிபட இருந்திருக்கவேண்டும். அதனை விடுத்து, விபீஷணன் உரைத்தவுடன் சட்டென்று நீராடினாள் அல்லவா? இதுவே சிறையிருந்த கோலத்துடன் காண்பதற்கு விருப்பத்துடன் வந்த இராமனுக்குச் சீற்றம் உண்டாகக் காரணம் ஆகிவிட்டது. எனவே “ஸ்நாநம் ரோஷஜநகம்” என்பதில் எந்தவிதமான தோஷமும் இல்லை. அல்லது “ஸ்நாநம் நோஷஜநகம்” என்பதற்கு வேறு பொருள் உரைக்கலாம். விபீஷணன் வந்து நீராடும்படி உரைத்தபோது, இராமனின் திருவுள்ளம் என்ன என்பதை சீதை அறிந்தவள் என்பதாலும், இந்தச் செயல் இராமனுக்கு விருப்பம் அல்லாத ஒன்று என்பதாலும், இந்தச் செயலானது இராமனின் சீற்றத்திற்குக் காரணமாகிவிடும் என்று எண்ணினாள். ஆகவே யுத்தகாண்டம் – அஸ்நாதா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ராக்ஷஸாதிப - அரக்கர்களின் தலைவனே! நான் நீராடாமல் உள்ள இந்த நிலையையே என்று கணவனான இராமனுக்குக் காண்பிக்க விரும்புகிறேன் – என்று கூறியதாகக் கொள்ளலாம்.