Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 165)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாயிரா நின்றதிறே.
– தோஷநிவ்ருத்தியிலாத்ம ஸ்வரூபம் அத்யந்த பரிசுத்தமாய் போக்யமாயிருக்குமத்தனை யன்றோ, ஆனபின்பு தோஷநிவ்ருத்தி அநபிமதமாய் தோஷமபிமதமாயிருக்கக்கூடுமோவென்ன வருளிச்செய்கிறார் (ஆபரணம்) என்று தொடங்கி.
– இந்தச் சரீரத்தின் தொடர்பு என்பது விலகிய பின்னரே ஆத்மாவின் ஸ்வரூபம் என்பது மிகவும் தூய்மையானதாக, அனுபவிக்க இனிமையான ஒன்றாக இருக்கும் அல்லவோ? இப்படி உள்ளபோது, சரீரத்தின் தொடர்பு விலக்குதல் என்பது விருப்பம் அற்றதாய், தோஷங்களுடன் கூடிய இந்தச் சரீரம் என்பது விருப்பத்திற்கு உரியதாய் எவ்விதம் இருக்கும்? இந்தக் கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது லோகத்தில் விஷய ப்ரவணராயிருப்பார்க்கு, அபிமத விஷயத்தினுடைய ஔஜ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம் அநபிமதமாய், அநௌஜ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாயிரா நின்றதிறே என்கை.
இந்த உலகத்தில் ஸர்வேச்வரன் தவிர மற்ற அனைத்து விஷயங்களின் மீதும் பற்றுடன் உள்ள ஒருவனுக்குத் தான் விரும்பும் பெண் ஒருவளது சரீரத்திற்கு அழகு சேர்க்கின்ற ஆபரணங்களைப் பிடிக்காமல் இருக்கும்; மாறாக அவளது அழுக்கான சரீரம் என்பது மிகவும் விரும்பப்படுவதாக இருக்கும், அதாவது அழகு இல்லாத நிலைக்குக் காரணமாக உள்ள அழுக்கானது விரும்பப்படுவதாக இருக்கும்.