Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 164)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
குணம்போலே தோஷ நிவ்ருத்தி.
இப்படி உபேய தசையில் சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் பராநுபவத்துக்கு விலக்காம்படியை அருளிச்செய்த அநந்தரம் ப்ராப்தி தசையில் இவனுடைய நிர்பந்த மூலமாகவுண்டான தோஷ நிவ்ருத்தி பராநுபவத்துக்கு விலக்காம்படியை யருளிச் செய்கிறார் (குணம்போலே தோஷ நிவ்ருத்தி) என்று.
– இப்படியாக உபேயநிலையில் சேஷத்வம் என்பதும், பாரதந்த்ர்யம் என்பதும் ஸர்வேச்வரனின் அனுபவத்திற்குத் தடையாக உள்ளதை அருளிச்செய்தார். அடுத்து ஸர்வேச்வரனை அடையக்கூடிய நிலையில், ஸர்வேச்வரனின் நிர்பந்தம் காரணமாகவே ஏற்பட்ட இந்த சரீரத்தின் தொடர்பை விலக்குதல் என்பதும் ஸர்வேச்வரனின் அனுபவத்தை விலக்கக் காரணம் என்று அருளிச்செய்கிறார்.
(குணம்) என்கிறது, கீழ் விரோதியாகச் சொன்ன சேஷத்வ பராதந்த்ர்யங்களிரண்டையும். இவைதான் ஆத்மாவுக்கு அந்தரங்க குணமாயிறே யிருப்பது. இதுபோலே (தோஷ நிவ்ருத்தி) என்றது - இவ்வாத்மகுண த்வயமும் கீழ்ச்சொன்னபடியே யாதொருபடி பராநுபவத்துக்கு விலக்காகிறது, அப்படியே, இவன் நிர்பந்தித்துப் பண்ணுவித்துக் கொள்ளுகிற ப்ரக்ருதி ஸம்பந்தமாகிற தோஷத்தினுடைய நிவ்ருத்தியும், சரமசரீரமாகையாலே இத்தோடே சிறிது தான் வைத்தநுபவிக்க விச்சிக்கிற வவனுடைய வநுபவத்துக்கு விலக்காமென்கை. (குணம்போலே) என்று – பாரதந்த்ர்யமொன்றையும் த்ருஷ்டாந்திக்கிற தாகவுமாம்.
“குணம்” என்ற பதம் மூலம் கடந்த சூர்ணைகளில் கூறிய சேஷத்வம் மற்றும் பாரதந்த்ர்யம் ஆகியவை கூறப்பட்டது. இவை இரண்டுமே ஆத்மாவின் அந்தரங்கத் தன்மைகள் ஆகும். “தோஷநிவ்ருத்தி” என்றால் “ஆத்ம குணங்களாக உள்ள இவை இரண்டும், மேலே கூறியபடி எவ்விதம் ஸர்வேச்வரனுடைய அனுபவத்திற்குத் தடையாக உள்ளனவோ அது போன்று, ஸர்வேச்வரன் நிர்பந்தித்து ஏற்படுத்தும் சரீர ஸம்பந்தம் என்ற தோஷத்தின் நீக்குதலும் தடையே ஆகும்” - என்பதாகும். அதாவது சேதநன் ஒருவனுக்கு இந்தச் சரீரம் இறுதியாக உள்ளதால், இந்தச் சரீரத்துடன் இவனைச் சிலகாலம் இந்த உலகில் வைத்து அனுபவிக்க விரும்புகின்ற ஸர்வேச்வரனின் விருப்பத்திற்குத் தடையாகிறது என்றபடி பொருள் கொள்ளவேண்டும். அல்லது “குணம்போலே” என்பதற்குப் பாரதந்த்ர்யம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் கொள்ளலாம் (அதாவது ஸர்வேச்வரன் நம்மை இந்தச் சரீரத்துடன் சிலகாலம் இந்த உலகில் வைத்து, நம்மை அனுபவிக்க விரும்பும்போது, “இந்தச் சரீரம் நீங்கவேண்டும்” என்று எண்ணுவது அவனது அனுபவத்திற்குத் தடை என்கிறார்).