Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 163)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பராநுபவந்துக்கு விலக்கு.

ஆனால் பின்னை பாரதந்த்ர்யமேயோ நல்லதென்ன வருளிச்செய்கிறார் மேல் (புண்யம் போலே) என்று தொடங்கி.

– இங்கு “புண்யம்” என்பது அடிமைத்தனத்தைக் குறிக்கும். இத்தகைய புண்யம் போன்று பாரதந்த்ர்யம் என்பது நல்லதோ என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.

– (புண்யம்) என்றது, கீழ் (நன்மை) என்கிற சொல்லாலே சொன்ன சேஷத்வத்தை; அது கீழ்ச்சொன்னபடியே ஸ்வநைச்யாநுஸந்தாநத்தாலே யிறாய்க்கைக் குறுப்பாய்க் கொண்டு யாதொருபடி போகவிரோதியாகா நிற்கும். அப்படியே, போக திசையில் அவனுக்கு எதிர் விழிகொடாதே அசித்துப் போலே கிடக்கைக் குறுப்பான கேவல பாரதந்த்ர்யமும் எதிர்விழி ஸாபேக்ஷனான வீச்வரனுடைய போகத்துக்கு மிடறுபடியா மென்றபடி. – அன்றிக்கே, (புண்யம்) என்கிறது - ஸத்கர்மத்தையாய், அது யாதொருபடி பாபத்திற்காட்டில் வ்யாவ்ருத்தமா யிருக்கச்செய்தே பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமாகா நிற்கும். அப்படியே, இறாய்க்கைக் குறுப்பான சேஷத்வத்திற்காட்டில் அசித்துப்போலே எதிர்தலையிட்டது வழக்காயிருக்கைக் குறுப்பாகையாலே வ்யாவ்ருத்தமான பாரதந்த்ர்யம் எதிர்விழி கொடுக்கைக் குறுப்பல்லாமையாலே பரனுடைய வநுபவத்துக்கு ப்ரதிபந்தகமா மென்னவுமாம். இத்தாலே – கேவல சேஷத்வமும் கேவல பாரதந்த்ர்யமும் ஓரோராகாரங்களாலே போகவிரோதியாகா நிற்கும்; பாரதந்த்ர்யத்தோடே கூடின சேஷத்வமே உத்தேச்யமென்கை.

– ”புண்யம்” என்பது மேலே உள்ள சூர்ணைகளில் “நன்மை” என்ற பதம் மூலம் கூறப்பட்ட அடிமைத்தன்மை ஆகும். அத்தகைய சேஷத்வம் என்பது தன்னுடைய தாழ்வை நினைத்தபடி உள்ளதால், ஸர்வேச்வரனின் போகத்திற்குத் தடையாக இருக்கும். இது போன்று ஸர்வேச்வரன் நம்மைக் கிட்டும்போது, நாம் அவனுடைய எண்ணத்திற்கு ஏற்றபடி செயல்கள் ஏதும் செய்யாமல், அறிவற்ற பொருள் போன்று நிற்பதான பாரதந்த்ர்யம் என்பது - நம்மிடம் இருந்து ஈடுபாட்டுடன் கூடிய செயல்களை விரும்புகின்ற ஸர்வேச்வரனின் இன்பத்திற்குத் தடையே ஆகிறது. அல்லது ”புண்யம்” என்பதை சேஷத்வம் என்று பொருள் கொள்ளாமல், நல்வினை என்று பொருள் கொள்ளலாம். இவ்விதம் பொருள் கொண்டால், அத்தகைய நற்செயல்கள் என்பது பாவங்களைக் காட்டிலும் வேறுபட்டதாக உள்ளபோதிலும், ஸர்வேச்வரனை அடையத் தடையாகவே இருப்பதாகும். இது போன்று சேஷத்வம் என்பதைக் காட்டிலும், அறிவற்ற பொருள் போன்று தன்னை எடுப்பவர் எண்ணப்படி அப்படியே செயல் புரிவது என்ற பாரதந்த்ர்யம் வேறுபட்டதாக உள்ளபோதிலும், அவனுக்குத் தகுந்த செயல்களைச் செய்தபடி இருத்தல் என்ற நிலை இல்லாத காரணத்தினால், ஸர்வேச்வரனுடைய அனுபவத்திற்குத் தடையே ஆகும் என்றும் பொருள் உரைக்கலாம். இதனால் சேஷத்வம் மற்றும் பாரதந்த்ர்யம் ஆகிய இரண்டும் தனித்தனியாக உள்ளபோது அவற்றின் தனித்தன்மைகள் காரணமாக ஸர்வேச்வரனின் இன்பத்திற்குத் தடையே ஆகின்றன. ஆகவே பாரதந்த்ர்யத்துடன் கூடிய சேஷத்வமே மிகவும் சிறந்தது என்கிறார்.