Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 162)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஹாரோபி
அழகுக்குடலானது அநுபவவிரோதியாமென்னுமிடம் சேஷி வசநத்தாலே தர்சிப்பிக்கிறார் மேல் (ஹாரோபி) என்று.
– அழகிற்கு இலக்கணமாக உள்ளவை அனுபவிக்கும்போது தடையாக இருக்கும் என்பதை ஸர்வேச்வரனே உரைத்த வரி மூலமாக அருளிச்செய்கிறார்.
– ”ஹாரோபி நார்ப்பித: கண்டே ஸ்பர்சஸம்ரோத பீருணா, ஆவயோரந்தரே ஜாதா: பர்வதாஸ் ஸரிதோ த்ருமா:” என்று ஸம்ச்லேஷ தசையில் ஸ்பர்ச விரோதியாமென்னுமச்சத்தாலே பிராட்டி திருக்கழுத்தி லொருமுத்துவட முட்படப் பூண்பதில்லை என்றாரிறே பெருமாள். “பீருணா” என்கிற லிங்கவ்யத்யயம் ஆர்ஷம். அன்றிக்கே, அழகுக்கிட்டது அணைக்கைக்கு விரோதியாமென்னுமிட மறிவிக்கையே ப்ரயோஜநமாக்கி, லிங்காநுகுணமாகப் பெருமாள் தம்மளவிலே யோஜிக்கவுமாம்.
இராமாயணம் – ஹாரோபி நார்ப்பித: கண்டே ஸ்பர்சஸம்ரோத பீருணா, ஆவயோரந்தரே ஜாதா: பர்வதாஸ் ஸரிதோ த்ருமா: - ”புணரும்போது தடையாக இருக்கும்” என்ற அச்சம் கொண்ட சீதை ஒரு சிறிய முத்துமாலையைக்கூட தனது கழுத்தில் அணிந்து கொள்ளவில்லை; அப்படிப்பட்ட எங்கள் இருவரின் நடுவே மலைகள், நதிகள் மற்றும் மரங்கள் உள்ளன - என்று இராமன் உரைத்தான். அதாவது சீதை தனது திருக்கழுத்திலே சிறிய முத்துமாலை கூட அணியவில்லை என்றார். இங்கு மேலே உள்ள ச்லோகத்தின் இறுதியில் உள்ள ”பீருணா” என்ற பதம் ஆண்பால் சொல்லாகும். இந்தச் சொல்லிற்கு “அச்சம் கொண்ட சீதையாலே” என்று பொருள் உரைக்கப்படுவதால், பால் மாறாட்டம் உண்டானது என்கிறார். அல்லது இது போன்று பால்மாறாட்டம் கொள்ளாமலேயே, “இராமன் எந்தவிதமான நகையும் அணியவில்லை”, என்று சீதை உரைப்பதாகவும் கொள்ளலாம்.