Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 161)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அழகுக்கிட்ட சட்டை அணைக்கைக்கு விரோதியாமாபோலே.

சேஷியுடைய விருப்பத்துக்குடலாய் ஆத்மாவுக்கு அலங்காரமாயிருக்கிற சேஷத்வம், போகவிரோதியாகிறபடி யெங்ஙனேயென்ன வருளிச்செய்கிறார் (அழகுக்கு) என்று தொடங்கி.

– எஜமானனாகிய ஸர்வேச்வரனின் விருப்பத்திற்கு ஏற்பவும், ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு அலங்காரமாகவும் திகழ்கின்ற அடிமைத்தன்மை என்பது ஸர்வேச்வரனின் விருப்பத்திற்கு எப்படித் தடையாகும் என்ற கேள்விக்கு விடை அருளிசெய்கிறார்.

– அதாவது, ஸ்த்ரீக்கு அழகுக்கிட்ட சட்டை நாயகனுகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கலங்காரமுமா யிருந்ததேயாகிலும், போகதசையில் ஆலிங்கந விரோதியாமாப் போலே, இதுவும் போகவிரோதியாமென்றபடி.

ஒரு பெண் தன்னுடைய அழகிற்காக அணிந்து கொள்ளும் ஆடை மற்றும் ஆபரணங்கள், அவளது கணவனின் மனமகிழ்வுக்கும் அவளது அலங்காரத்திற்கும் பொருத்தமாகவே உள்ளபோதிலும், அத்தகைய ஆடை ஆபரணங்கள் அவர்கள் புணரும்போது தடையாகவே இருக்கும். இது போன்றே சேதநனின் அடிமைத்தன்மை என்பது ஸர்வேச்வரனின் இன்பத்திற்குத் தடையே ஆகும்.