Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 160)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
தனக்குத்தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காயிருக்கும்.
இப்ப்ரகரணாதியிலே (உபாயத்துக்கு) என்று தொடங்கி உபேயாதிகாரமும் சில சொல்லிற்றேயாகிலும் அது ப்ராஸங்கிகமித்தனை. இனி உபேயாதிகாரபரமான ப்ரகரண சேஷத்தாலும் உத்தரகண்டார்த்தத்தை யருளிச்செய்கிறார். அது செய்கிற விடத்தில், பாஷ்யகாரர் கத்யத்தில் உத்தரகண்டார்த்த மநுஸந்தித்தருளின க்ரமத்திலே, நமச்சப்தார்த்தம் முன்னாக வருளிச்செய்கிறார். அதில் இந்த நமஸ்ஸுதான் ப்ராப்ய விரோதி நிவ்ருத்தி ப்ரதிபாதகமாகையாலே, ப்ராப்ய விரோதிகளானவற்றை தர்சிப்பிப்பதாகத் திருவுள்ளம் பற்றி ப்ரதமம் அவற்றிலே யொன்றை யருளிச்செய்கிறார் (தனக்குத்தான்) என்று தொடங்கி.
இந்த ப்ரகரணத்தின் தொடக்கமான “உபாயத்துக்கு” என்னும் சூர்ணை-80 தொடங்கி ஒரு சில இடங்களில் உபேய அதிகாரம் கூறப்பட்டது என்றாலும், அந்த இடத்திற்கு அதிகமான கருத்துக்களாகவே உரைக்கப்பட்டது. அடுத்து உபேய அதிகாரம் பற்றியதான கருத்துக்களை கூறுகின்ற ப்ரகரணத்தில், மீதம் உள்ள கருத்துக்களைக் கூறுவதன் மூலம் (சூர்ணை-80 போன்றதான சில சூர்ணைகளின் எஞ்சிய கருத்துக்கள்) த்வய மந்த்ரத்தின் இரண்டாம் வரியினுடைய பொருளை அருளிச்செய்கிறார். இதனை அருளிச்செய்யும்போது, உடையவர் தன்னுடைய கத்யத்ரயத்தில் பின்வாக்கியத்தின் பொருளை எவ்விதம் அருளிச்செய்தாரோ அதே போன்று இவரும் “நம:” என்ற பதத்தை முதலில் அருளிச்செய்கிறார். ”நம:” என்று இரண்டாம் வரியின் இறுதியில் உள்ள பதமானது, அடையப்போகும் பேற்றுக்குத் தடையாக உள்ளவை (ப்ராப்ய விரோதிகள்) நீங்குவது பற்றி உரைகிறது என்பதால், பேற்றுக்குத் தடையாக உள்ளவற்றை முதலில் காண்பிப்பதற்குத் திருவுள்ளம் கொண்டவராக, அவற்றில் ஒன்றை முதலில் இங்கு அருளிச்செய்கிறார்.
கீழே (ஸ்ரீபரதாழ்வானுக்கு நன்மைதானே தீமையாய்த்து) என்று – ஸ்வகத ப்ரபத்தி “சரண்யஹ்ருதயாநுஸாரி யல்லாதபோது தீமையாய்த் தலைக்கட்டும்படி சொன்ன வித்தாலே, உபாய தசையில் தனக்குத்தான் தேடும் நன்மை தீமையாமென்னுமிட மருளிச்செய்தாராய், இப்ப்ரஸங்கத்திலே உபேய தசையிலும் தான் தனக்குத்தேடும் நன்மை தீமையாய் விடுமென்னுமிட மருளிச்செய்கிறாரென்று கீழோடிதுக்கு ஸங்கதி. (தனக்கு) இத்யாதி. அதாவது – சேஷியானவன் போகதசையில் தன் வ்யாமோஹத்தாலே “ஆருயிர்பட்ட தெனதுயிர் பட்டது” என்னும்படி தன் திறத்தில் மிகவும் தாழநின்று பரிமாறுமளவில், “நாம் சேஷபூதரன்றோ, நம் சேஷத்வத்தை நோக்கவேண்டாவோ” என்று ஸ்வநைச்யாநுஸந்தாநத்தாலே பிற்காலித்து, தனக்குத்தான் தேடுகிற சேஷத்வமாகிற நன்மை, அநாதிகாலம் “ஸ்வதந்த்ரோஹம்” என்றிருக்க தீமையோபாதி அவன் போகத்துக்கு ப்ரதிபந்தகமா யிருக்குமென்கை. (தீமை) என்று – அக்ருத்ய கரணாதிகளைச் சொல்லவுமாம்.
– சூர்ணை-145ல் “ஸ்ரீபரதாழ்வானுக்கு நன்மைதானே தீமையாய்த்து” என்று அருளிச்செய்தார். அதாவது தானாகவே வலியச்சென்று இயற்றும் ப்ரபத்தி என்பது ஸர்வேச்வரனின் திருவுள்ளத்திற்கு ஏற்புடையதாக இல்லாதபோது, அந்த ப்ரபத்தி என்பதே தீமையாக முடிந்துவிடும் என்று கூறினார். இதன் மூலம் உபாயநிலையில் தனக்குத்தானே தேடிக்கொள்ளும் நன்மை என்பதே தீமையில் சென்று முடியும் என்பதை அருளிச்செய்கிறார். ஆக மேலே கூறியதற்கும் இதற்கும் பொருத்தம் உள்ளது. எஜமானனாக உள்ள ஸர்வேச்வரன் தன்னை வந்தடைந்த சேதனனுடன் தான் கூடி நின்று அனுபவிக்கவேண்டும் என்று எண்ணுவான். இப்படிப்பட்ட அளவு கடந்த பேரன்பு காரணமாகத் திருவாய்மொழியில் (9-6-9) – ஆருயிர்பட்ட தெனதுயிர் பட்டது - என்பதற்கு ஏற்ப, தன்னுடைய நிலையில் இருந்து மிகவும் தாழ்வாக இறங்கி வந்து கலக்க எண்ணுவான். அப்போது, “நாம் இவனுடைய அடிமை அல்லவோ? நம்முடைய அடிமைத்தனத்தைச் சற்று எண்ணவேண்டாமா?”, என்று நம்முடைய தாழ்வை மனதில் முன்னிறுத்தி, அவனை விட்டு அகன்று, நாம் நம்முடைய அடிமைத்தன்மையைக் காண்பிப்பதாக எண்ணினால், எல்லையற்ற காலம் ”நானே எனக்கு எஜமானன்” என்று எண்ணும் தீய எண்ணம் போன்றதே ஆகும். அதுவே ஸர்வேச்வரனின் இன்பத்திற்குத் தடையாகிவிடும். ”தீமை” என்றால் செய்யத்தகாதவற்றைச் செய்கின்ற பாவங்கள் என்று கருத்து.