Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 159)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அதிகாரி த்ரயத்துக்கு புருஷகார மவர்ஜநீயம். ப்ரதம ப்ரகரணத்திலே, புருஷகார வைபவகதநமுகேந ”ஸ்ரீமத்” பதார்த்தத்தையும் உபாயவைபவகதநமுகேந “நாராயண சரணௌ சரணம்” என்கிற பதங்களினர்த்தங்களையும் ப்ரதிபாதித்த வநந்தரம், (ப்ரபத்திக்கு தேச நியமமும்) என்று தொடங்கி “ப்ரபத்யே” என்கிற பதத்தால் சொல்லப்பட்ட ப்ரபத்தியினுடைய தேசகாலாதி நியமாபாவத்தையும், அதுக்கு விஷய நியமம் சொல்லுகைக்காக (குணபூர்த்தி யுள்ளவிடமே விஷயமாகை) என்று தொடங்கி முக்தகண்டமாக மீளவும் நாராயண பதார்த்தத்தையும் (இதில் ப்ரபத்தி பண்ணுமதிகாரிகள் மூவர்) என்று உத்தமனாலே ஆக்ஷிப்பதனான வதிகாரியையும் ப்ரபத்தியில் ஸாதநத்வமில்லாமையையும், ப்ரபத்த் யதிகாராபேக்ஷிதமான சக்தி லஜ்ஜா யத்ந நிவ்ருத்தி சமதமாதிசயம் முதலானவற்றையும், ப்ரபத்த்யங்கதயா த்யாஜ்யமான உபாயாந்தரத்தினுடைய தோஷ பூயஸ்த்வத்தையும், தத்ப்ரதிகோடிதயா ப்ரபத்தியினுடைய நைர்தோஷ்யாதிகளையும், ப்ரபத்தி ப்ரஸங்கத்தாலே முகபேதேந ஸ்வகத ஸ்வீகாராநுபாயத்வத்தையும் பரகத ஸ்வீகாரோபாயத்வத்தையும், தத்ப்ராபல்யத்தையும் அவனே ஸ்வீகரிக்குமளவிலும் புருஷகாரத்தை முன்னிட்டே ஸ்வீகரிக்குமென்னுமிடத்தையும், உபயரும் புருஷகாரத்தை முன்னிடுமதுக்குண்டான ப்ரயோஜந விசேஷங்களையும், அதிகாரி த்ரயத்துக்கு புருஷகார மவர்ஜநீய மென்னுமத்தையும் ப்ரதிபாதிக்கையாலே இவ்வளவும் பூர்வகண்டார்த்தத்தை யருளிச்செய்தாராய்த்து.

இப்படியிருக்கையால் இப்புருஷகாரம் ப்ரபத்தியதிகாரிக ளெல்லார்க்கும் அவச்யாபேக்ஷிதமென்கிறார் மேல் (அதிகாரி) இத்யாதியாலே.

இப்படியாக உள்ளதால் புருஷகாரம் என்பது ப்ரபத்தியைக் கைக்கொள்ளும் அதிகாரிகள் அனைவருக்கும் அவசியம் இருக்கவேண்டியதாகிறது என்கிறார்.

(அதிகாரி த்ரயமாவது) - அஜ்ஞர், ஜ்ஞாநாதிகர், பக்தி விவசர் என்கிற மூன்றதிகாரிகளும். இவர்களுக்கு (புருஷகார மவர்ஜநீயம்) என்கிறது – குற்றத்தை சமிப்பிக்கை முதலானவற்றுக்கு புருஷகாராந்வயம் வேண்டுகையாலே, ஸர்வதா கைவிட வொண்ணாதென்கை. அதவா, இப்புருஷகாரந்தான் அநந்யப்ரயோஜநராய் ப்ரபத்தி பண்ணுமவர்களுக்கேயோ, ப்ரயோஜநாந்தரபரராய்ப் பண்ணுமவர்க்கும் வேணுமோ வென்ன வருளிச் செய்கிறார் (அதிகாரி) இத்யாதியாலே. (அதிகாரித்ரயம்) என்கிறது - ஐச்வர்ய கைவல்ய பகவச்சரணார்த்திகள். இவர்கள் மூவர்க்கும் (புருஷகார மவர்ஜநீயம்) என்றது - ஸ்வஸ்வாபிலக்ஷித ஸித்திக்கு ஈச்வரனை யுபாயமாக ஸ்வீகரிக்குமளவில் இவர்களபராதங்களைப் பொறுத்து அவனங்கீகரிக்கும்படி பண்ணுகைக்கு புருஷகார மவச்யாபேக்ஷித மென்கை. ”பூர்வவாக்யத்தில் புருஷகார பூர்வகமான உபாய வரணம் ப்ரயோஜ்நாந்தரபரர்க்கும் பொதுவாகையாலேயிறே, உத்தரவாக்யத்தாலே அநந்ய ப்ரயோஜநத்வத்தை ப்ரகாசிப்பிக்க வேண்டுகிறது; பூர்வவாக்யத்தில் ப்ரதிபாதிதமான ஸாதந விசேஷம் பலசதுஷ்டய ஸாதாரணமாயிறே யிருப்பது. அதில் இவ்வதிகாரிக்கு அபிலக்ஷிதமான பல விசேஷமின்ன தென்னுமிடத்தை ப்ரகாசிப்பிக்கிறது இவ்வாக்யம்” என்று பரந்தபடியிலும்; “கீழ்ச்சொன்ன ஸாதநம் பல சதுஷ்டய ஸாதாரணமாயிருக்கையாலே இவனுக்கபேக்ஷிதமான பல விசேஷத்தைச் சொல்லுகிறது” என்று ச்ரிய:பதிப்படியிலும்; “உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது, ப்ராப்யாந்தரத்துக் கன்றென்கை” இத்யாதியாலே முமுக்ஷுப்படியிலும் இவர்தாமேயருளிச் செய்தாரிறே. “திருமாலைக் கைதொழுவர்”, “அடியாரைச் சேர்தல் தீர்க்குந் திருமாலை” என்கிறபடியே, புருஷகாரம் முன்னாகப் பற்றி ப்ரயோஜநங்களைக் கொண்டகலாதே அவற்றை யொழிந்து “ஒண்டொடியாள் திருமகளுமவனுமான சேர்த்தியி லடிமையைப் பேறென்று கீழ்ச்சொன்னவுபாய பலத்தைக் காட்டுகிறது பிற்கூறு” என்றிறே இவர் திருத்தம்பியாரும் அருளிச்செயல் ரஹஸ்யத்திலருளிச் செய்தது. ஆக, (இவனவனை) என்று தொடங்கி இவ்வளவாக – ஸ்வகத ஸ்வீகாராநுபாயத்வமும், பரகத ஸ்வீகாரோபாயத்வமும், தத்ப்ராபல்யமும், அவனே ஸ்வீகரிக்குமளவிலும் புருஷகாரம் முன்னாகவே ஸ்வீகரிக்கும்படியையும், இருவருமிப்புருஷகாரத்தை முன்னிடுகிறது தனக்கு ப்ரயோஜந மின்னதென்னுமிடமும், ப்ரபத்த்யதிகாரிக ளெல்லாருக்கும் புருஷகார மவர்ஜநீய மென்னுமதுவும் சொல்லப்பட்டது.

– ”அதிகாரி த்ரயமாவது” என்றால் அஜ்ஞர், ஜ்ஞாநாதிகர் மற்றும் பக்தி பரவசர் என்பவர் ஆவர் (இவர்கள் பற்றி சூர்ணை 42 மற்றும் 43-ல் காண்க). இவர்களுக்குப் புருஷகாரம் அவர்ஜநீயம் (அவர்ஜநீயம் = எப்போதும் கைவிடத்தக்கது அல்ல) என்றால் - குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும்படிச்செய்தல் போன்ற பலவற்றுக்கும் புருஷகாரத்தின் தொடர்பு அவசியம் என்பதால், புருஷகாரமானது எப்போதும் கைவிட இயலாத ஒன்று – என்பதாகும். இந்தப் புருஷகாரம் என்பது மற்ற எந்தவிதமான பயன்களையும் எண்ணாமல் ப்ரபத்தி செய்பவர்களுக்கு மட்டும் வேண்டுமா அல்லது மற்ற பயன்களையும் மனதில் கொண்டு ப்ரபத்தி செய்பவர்களுக்கும் வேண்டுமா என்ற கேள்விக்கு இந்தச் சூர்ணை மூலம் விடை அளிக்கிறார் என்றும் கூறலாம். இவ்விதமாகச் சூர்ணைக்குப் பொருள் கொண்டால் “அதிகாரித்ரயம்” என்பது - ஐச்வர்யம், கைவல்யம் மற்றும் பகவத் சரணார்த்திகளைக் குறிக்கும் (இவர்களில் முதல் இரு பிரிவினரும் பயன்களை எண்ணி ப்ரபத்தி செய்பவர்கள், மூன்றாமவர் பயன் ஏதும் எண்ணாமல் ப்ரபத்தி செய்பவர்). இவர்களுக்குப் புருஷகாரம் அவர்ஜநீயம் என்றால் என்ன? இவர்கள் மூவரும் அவரவர்கள் விரும்பும் பலனை அடைவதற்காக ஈச்வரனை உபாயமாகக் கொள்கின்றனர்; அப்போது இவர்களது குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு, அவன் இவர்களை ஏற்கும்படியாகச் செய்வதற்குப் புருஷகாரம் அவசியம் வேண்டியதாகிறது; எனவே இவர்களால் புருஷகாரம் கைவிடத்தக்கது அல்ல. இப்படியாக மேலே இரண்டாவதாக உரைக்கப்பட்ட பொருளில் கூறப்பட்ட மூன்று விதமான அதிகாரிகளுக்கும் ப்ரபத்தியின்போது புருஷகாரம் அவசியம் என்பதைத் தகுந்த ப்ரமாணங்கள் மூலம் அருளிச்செய்கிறார். இதனை இவர் (ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார்) கீழே மூன்று க்ரந்தங்கள் மூலமாக அருளிச்செய்தமை காண்க: பரந்தபடி - பூர்வவாக்யத்தில் புருஷகார பூர்வகமான உபாய வரணம் ப்ரயோஜ்நாந்தரபரர்க்கும் பொதுவாகையாலேயிறே, உத்தரவாக்யத்தாலே அநந்ய ப்ரயோஜநத்வத்தை ப்ரகாசிப்பிக்க வேண்டுகிறது; பூர்வவாக்யத்தில் ப்ரதிபாதிதமான ஸாதந விசேஷம் பலசதுஷ்டய ஸாதாரணமாயிறே யிருப்பது. அதில் இவ்வதிகாரிக்கு அபிலக்ஷிதமான பல விசேஷமின்ன தென்னுமிடத்தை ப்ரகாசிப்பிக்கிறது இவ்வாக்யம் - த்வய மந்த்ரத்தின் முதல் வாக்கியம் மூலம் ”புருஷகாரத்தை முன்னிட்ட ப்ரபத்தி” என்பது பயன்களை எதிர்பார்த்து ப்ரபத்தி செய்பவர்களுக்கும் பொதுவானது என்று உணர்த்தப்பட்டது. இதன் காரணமாகவே இரண்டாவது வரியின் மூலம் பயன்களை எதிர்பாராமல் செய்யும் ப்ரபத்தி குறித்துத் தெளிவுபடுத்த வேண்டியதாயிற்று. முதல் வாக்கியம் மூலம் வெளிப்படும் சாதனம் என்பது இழந்த செல்வம், புதியதான செல்வம், கைவல்யம் மற்றும் மோக்ஷம் ஆகிய நான்கினை அடைவதற்குப் பொதுவாகவே உள்ளதாகிறது. இவற்றில் கைங்கர்யத்தை மட்டுமே விரும்பும் அதிகாரிக்கு விருப்பம் இன்னது என்பதை த்வயத்தின் முதல் வாக்கியம் தெளிவாக்குகிறது. ச்ரிய:பதிப்படி – கீழ்ச்சொன்ன ஸாதநம் பல சதுஷ்டய ஸாதாரணமாயிருக்கையாலே இவனுக்கபேக்ஷிதமான பல விசேஷத்தைச் சொல்லுகிறது - த்வயத்தின் முதல் வாக்கியமானது நான்கு விதமான பலன்கள் பற்றியும் பொதுவாக உள்ளதால், நான்காம் பலனாகிய மோக்ஷம் விரும்பும் அதிகாரியின் விருப்பம் குறித்து த்வயத்தின் இரண்டாம் வாக்கியம் உரைக்கிறது. முமுக்ஷுப்படி – உத்தர வாக்யத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது, ப்ராப்யாந்தரத்துக் கன்றென்கை – த்வயத்தின் பின் வாக்கியம் மூலம் (மோக்ஷ) பலன் பற்றி மட்டுமே கூறப்படுகிறது அல்லாமல் மற்ற பலன்கள் பற்றி அல்ல. ஸ்வாமி பிள்ளைலோகாசார்யரின் திருத்தம்பியாரான ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள்நாயனார் தனது அருளிச்செயல் ரஹஸ்யத்தில் உரைப்பது என்னவென்றால் - முதல்திருவந்தாதி (52) - திருமாலைக் கைதொழுவர், திருவாய்மொழி (1-5-7) - அடியாரைச் சேர்தல் தீர்க்குந் திருமாலை - போன்ற பாசுரங்களில் கூறப்படுவது போன்று புருஷகாரத்தை முன்னிட்டு ஸர்வேச்வரனைப் பற்றிய பின்னர், அற்பமான பயன்களைப் பெற்ற பின் அவனை விட்டு அகலக்கூடாது; மாறாக இது போன்ற பயன்களை ஒழிக்கவேண்டும்; திருவாய்மொழி (4-9-10) – ஒண்டொடியாள் திருமகளுமவனுமான சேர்த்தியி லடிமையைப் பேறென்று கீழ்ச்சொன்னவுபாய பலத்தைக் காட்டுகிறது பிற்கூறு - பெரியபிராட்டியும் ஸர்வேச்வரனும் ஒன்றாக உள்ளபோது அவனுடைய கைங்கர்யத்தை எதிர்பார்த்துப் பெறவேண்டும் என்று அல்லவோ த்வயத்தின் இரண்டாம் வாக்கியம் உரைக்கிறது - என்பதாகும். ஆகவே “இவன் அவனைப் பெற” என்றுள்ள சூர்ணை 142 தொடங்கி இந்தச் சூர்ணை முடிய, நாமாகவே அவனைக் கைக்கொள்வது ஏற்காது (ஸ்வகத ஸ்வீகாரம்) என்பதும், அவனே வந்து நம்மைக் கைக்கொள்வதே (பரகதஸ்வீகாரம்) ஏற்புடையது என்பதும், பரகதஸ்வீகாரத்தின் வலிமையும், ஸர்வேச்வரனே நம்மை வலிய வந்து ஏற்றுக் கொள்கின்ற நேரத்திலும் புருஷகாரமாகப் பெரியபிராட்டியை முன்னிட்டே ஏற்கிறான் எனபதும், சேதனன் மற்றும் ஸர்வேச்வரன் ஆகிய இருவரும் புருஷகாரத்தை முன்னிடுவதற்குப் பயன் இன்னது என்பதும், ப்ரபத்தியைக் கைக்கொள்ளும் அனைத்துவிதமான அதிகாரிகளுக்கும் புருஷகாரம் கண்டிப்பாக தேவையானதாகும் என்பதும் கூறப்பட்டன. முதல் ப்ரகரணத்தில் புருஷகார வைபவம் பற்றி அருளிச்செய்தபோது “ஸ்ரீமத்” என்ற பதத்தின் பொருளை உரைத்தார்; உபாய வைபவம் பற்றி அருளிச்செய்தபோது ”நாராயண சரணௌ சரணம்” என்பதன் பொருளை அருளிச்செய்தார். அதனைத் தொடர்ந்து “ப்ரபத்திக்குத் தேசநியமம்” என்ற சூர்ணை-23 தொடங்கி, “தர்ம புத்ராதிகளுக்கு” என்ற சூர்ணை-33 முடிய உள்ள சூர்ணைகளின் மூலம் “ப்ரபத்யே” என்ற பதத்தால் விளக்கப்படுகின்ற ப்ரபத்தி என்பதற்கு, தேசம் போன்ற வரையறை இல்லை என்ற கருத்தை அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ப்ரபத்திக்கு விஷய நியமம் இன்னது என்று உணர்த்துவதான “நாராயண” என்ற பதத்தை வெளிப்படையாக அருளிச்செய்யும் பொருட்டு “விஷய நியமமாவது” என்று தொடங்கும் சூர்ணை-34 முதல், “இதுதான்” என்றுள்ள சூர்ணை-40 முடிய உள்ள சூர்ணைகளை இட்டார். “ப்ரபத்யே” என்ற பதம் மூலம் உணர்த்தப்படும் அதிகாரி குறித்து “இதில் ப்ரபத்தி” என்றுள்ள சூர்ணை-41ஐ அருளிச்செய்தார். மேலும் கீழே உள்ள பலவற்றையும் அருளிச்செய்தார் என்பதால், இதுவரை த்வயத்தின் முற்பகுதியை விளக்கினார் என்று கருத்து: ப்ரபத்தியில் ஸாதனம் அளிக்கின்ற தன்மை இல்லை ப்ரபத்திக்கு அதிகாரம் (தகுதி) என்னவென்றால் தனது சக்தி இல்லாமை, நாணம் இல்லாமை, தனது முயற்சி இல்லாமை, சமம் மற்றும் தமம் போன்றவற்றுடன் இருத்தல் என்பவை ப்ரபத்திக்கு ஓர் அங்கமாக மற்ற உபாயங்களைக் கைவிட வேண்டும் என்பதையும் அவற்றின் தோஷங்கள் பற்றியும் உரைத்தார். ப்ரபத்தியின் தோஷம் அற்ற தன்மை ப்ரபத்தியைப் பற்றிய ப்ரகரணம் என்பதால் ஸ்வகத ஸ்வீகாரம் உபாயம் ஆகாது என்பதும், பரகத ஸ்வீகாரத்தின் உபாயமாகின்ற தன்மை, அந்த பரகத ஸ்வீகாரத்தின் வலிமை இன்னது என்பதை உனர்த்தினார். ஸர்வேச்வரன் தானே வலிய வந்து ஏற்றாலும், ஒரு புருஷகாரத்தை முன்னிட்டே எற்பான். சேதனன் மற்றும் ஸர்வேச்வரன் ஆகிய இருவரும் ஏன் புருஷகாரத்தை முன்னிடுகின்றனர் என்பதைக் காரணத்துடன் பயன்கள் மூலமாக உரைத்தார். மூன்றுவகையான அதிகாரிகளுக்கும் புருஷகாரம் என்பது தள்ளப்படத்தக்கது அல்ல.