Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 158)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

கர்மணி வ்யுத்பத்தியில் ஸ்வரூபகுணங்களால் வருகிற கர்த்ருஸங்கோச ராஹித்யத்தை நினைப்பது.

– (ஸஸாக்ஷிகமான விப்பந்தத்தை யில்லை செய்யப் போகாது) என்றது - ஸாக்ஷியான புருஷகார விஷயத்தி லிருவர்க்குமுண்டான நித்யபாரந்த்ர்யத்தைப் பற்ற வகையாலே, இருவர்க்கு மிவ்விஷயத்திலுண்டான நித்யபாரதந்த்ர்யத்தில் ப்ரமாணங் காட்டுகிறார் மேல் (கர்மணி) என்று தொடங்கி.

– “ஸஸாக்ஷிகமான விப்பந்தத்தை யில்லை செய்யப் போகாது” என்று சூர்ணை 156-ல் கூறப்பட்டதை ப்ரமாணத்துடன் விளக்குகிறார். அந்தச் சூர்ணையின் மூலம், அந்த உறவுக்கு சாக்ஷியான பெரியபிராட்டி விஷயத்தில் ஈச்வரன் மற்றும் சேதனன் ஆகிய இருவருக்கும் எப்போதும் உள்ள பாரதந்த்ர்யம் உணர்த்தப்படுகிறது. ஆகவே இந்த இருவருக்கும் பெரியபிராட்டி விஷயத்தில் உள்ள பாரதந்த்ர்யம் நித்யமானது என்பதற்கு ப்ரமாணம் அருளிச்செய்கிறார்.

(கர்மணி வ்யுத்பத்தி) யாவது – ”ச்ரீங்ஸேவாயாம்” என்கிற தாதுவில், ”ஸ்ரீயதே” என்கிற வ்யுத்பத்தி. இதுக்கர்த்தம் – ஸேவிக்கப்படாநின்றா ளென்றிறே. இவ்வ்யுத்பத்தியில், (ஸ்வரூப குணங்களால் வருகிற கர்த்ரு ஸங்கோச ராஹித்யமாவது) – சேஷத்வமாகிற ஸ்வரூபத்தாலும் ப்ரணயித்வமாகிற குணத்தாலும் வருகிற சேதந பரமசேதநர்களாகிற ஸேவாகர்த்தாக்களுக்கு ஸங்கோசமில்லாமை. அதாவது - இரண்டு தலைக்குமிவள் விஷயத்தி லுண்டான ஸேவை அவிச்சிந்நமாய்ச் சொல்லுகை. இத்தை (நினைப்பது) என்றது - இவ்விஷயத்தி லிரண்டு தலைக்கு முண்டான பாரதந்த்ர்யத்தை ஸ்மரிப்பதென்றபடி.

– ” கர்மணி வ்யுத்பத்தி” என்பது என்ன? கர்மணி வ்யுத்பத்தி என்றால் செயல்பாட்டுவினை என்பதாகும் (passive voice). “ச்ரீங்ஸேவாயாம்” என்றால் என்ன? ”ஸ்ரீ” என்ற பதத்திற்கு ஆறுவகையான வ்யுத்பத்தி (வினைப்பொருள்) உரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று “ச்ரீங்ஸேவாயாம்” என்னும் தாதுவில் அமைக்கப்பட்ட “ஸ்ரீயதே” என்ற வ்யுத்பத்தி ஆகும். இது “ஸ்ரீயதே இதி ஸ்ரீ:” - அனைவராலும் பற்றப்படுகிறாள் – என்பதாகும். “அனைவராலும் வணங்கப்படுகிறாள்” என்ற நிலைக்கு ஒருவரது ஸ்வரூபத்திற்கு ஏற்ப குறைவு உண்டாகுமோ என்ற சந்தேகம் தோன்ற, அதற்கு விடை அளிக்கிறார். இந்த நிலைக்கு ஸ்வருபத்தின் குணங்களால் உண்டாகிற எந்தவிதமான குறையும் இல்லை என்கிறார். சேதனர்களுக்கு உள்ள சேஷத்வ ஸ்வரூபம் காரணமாக சேதனர்களும் (அனைத்து சேதனர்களும் எம்பெருமானின் வசப்பட்டவர்கள், அவன் பெரியபிராட்டியின் வசப்பட்டவன், ஆக அனைவரும் பெரியபிராட்டியின் வசப்பட்டவர்கள்), எல்லையற்ற காதல் காரணமாக ஸர்வேச்வரனும் பெரியபிராட்டியை வணங்கியே நிற்கின்றனர் என்பதால் ”அனைவராலும் வணக்கப்படுகிறாள்” என்பதற்கு எந்தக் குறைவும் இல்லை (மனைவியைக் கணவன் வணங்குதல் என்பது பல தமிழ் நூல்களிலும் காணப்படுகின்ற தமிழர் மரபே ஆகும்). அதாவது இவள் விஷயத்தில் உள்ள பாரதந்த்ர்யம் என்பது இருவருக்கும் எந்தவிதமான இடையூறும் இன்றி உள்ளது. இதனை “நினைப்பது” என்பதன் கருத்து - இப்படியாக இவர்கள் இருவருக்கும் பெரியபிராட்டி விஷயத்தில் உண்டான பாரதந்த்ர்யம் பற்றி நினைத்தல் – என்பதாகும்.