Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 157)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
"என்னை நெகிழ்க்கிலும்", "கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய”.
இதுக்கு ப்ரமாணங் காட்டுகிறார் மேல் (என்னை) என்று தொடங்கி.
இதற்கு “என்னை” என்று தொடங்கி ப்ரமாணம் காண்பிக்கிறார்.
நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக நித்யஸூரிகள் நடுவே யென்னை யங்கீகரித்த பின்பு ஸர்வசக்தியான தானுங் கைவிடமாட்டா னென்கையாலே, “என்னை நெகிழ்க்கிலும்” என்கிற பாட்டு அவனாலே இப்பந்தத்தை யில்லை செய்யப்போகாமைக்கு ப்ரமாணம். பெரியபிராட்டியாருக்கு ஸ்நேஹியாகையாலே அவள் பரிக்ரஹமான என் பக்கலிலே அதிஸ்நேஹியாய், அரியன செய்து வந்து என்னோடே கலந்தவுன்னைப் பெற்று வைத்து இனி நழுவவிடுவேனோ வென்கையாலே, “கோலமலர்ப்பாவைக்கு” என்கிற பாட்டு புருஷகாரம் முன்னாக வந்த இப்பந்தத்தை சேதநனாலு மில்லை செய்யப் போகாதென்னுமதுக்கு ப்ரமாணம்.
– நப்பின்னைபிராட்டியானவள் புருஷகாரமாக நிற்க, நித்யஸூரிகளுக்கு நடுவில் என்னை ஸர்வேச்வரன் ஏற்றுக் கொண்ட பின்னர், ஸர்வசக்தியான அவனும் கூட என்னைக் கைவிட இயலாது என்பதால், திருவாய்மொழி (1-7-8) – என்னை நெகிழ்க்கிலும் – என்னும் பாட்டானது, அவனாலும் சேதநனுடன் உள்ள பந்தத்தை “இல்லை” என்று தள்ள இயலாது என்பதற்கான ப்ரமாணம் ஆகும். அடுத்து “பெரியபிராட்டியாரிடம் நான் அன்புள்ளவன் என்பதால், அவளுக்கு மிகவும் வேண்டியவனாகிய என்னிடம் மிகுந்த அன்பு கொண்டு, அதன் விளைவாக பல அரிய செயல்கள் செய்த உம்மை நான் இவ்விதம் அடைந்த பின்னர் போகவிடுவேனோ?” என்று கூறுவதால், திருவாய்மொழி (10-10-7) – கோல – என்னும் இந்தப் பாட்டானது, புருஷகாரத்தை முன்னிட்டு வந்த இந்தப் பந்தத்தை சேதநனாலும் விட இயலாது என்பதற்கு ப்ரமாணம் ஆகும்.