Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 156)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஸஸாக்ஷிகமாகையாலே இப்பந்தத்தை யிருவராலுமில்லை செய்யப்போகாது.
அநாதிகால ஸ்வதந்த்ரனாய் யாதானும் பற்றி நீங்கித் திரிந்தவிவன் இன்றிறே ஆபிமுக்க்யம் பண்ணிற்று; ப்ரக்ருதியோடே யிருக்கையாலே துர்வாஸநை மேலிட்டு ஆச்ரயணாங்கீகாரங்களாலே உத்பூதமான இந்த ரக்ஷ்ய ரக்ஷக பந்தத்தையில்லை செய்து பழையபடியே போகப்பார்க்குதல், நிரங்குச ஸ்வதந்த்ரனாய் கர்மாநுகுணமாக விவனை லீலையிலே யநாதிகாலம் விநியோகங்கொண்டு போந்த வீச்வரன்றானிப்பந்தத்தை யில்லை செய்து முன்பு போலே இவனை கர்மாநுகுணமாக நிர்வஹிக்கப் பார்க்குதல் செய்யிலோவென்ன வருளிச்செய்கிறார் (ஸஸாக்ஷிகம்) என்று தொடங்கி.
எல்லையற்ற காலமாகச் சேதனன் தனக்குத் தானே உரியவன் என்று எண்ணியவனாக, உலகவிஷயஙளை மட்டுமே பற்றித் திரிகின்றவனாக உள்ளான். அதன் பின்னர் ஒருநாள் ஸர்வேச்வரன் முன்பாக வந்து அன்பு பூண்டு நிற்கிறான். ஆனாலும் அந்தச் சேதனன் சரீரத்துடன் கூடியவன் என்பதால் தீயவாசனைகள் மீண்டும் தலை தூக்கலாம். அப்போது அவன் வந்து பற்றியதாலும், ஸர்வேச்வரன் ஏற்றுக்கொண்டதாலும் உண்டான ”காக்கப்படுபவன், காப்பவன்” என்ற உறவு முறையைத் தள்ளிவிட்டு, மீண்டும் பழைய நிலைக்குச் சேதனன் சென்றுவிட்டால் என்ன ஆகும்? யாராலும் தடுக்க இயலாத சுதந்திரத்துடன் கூடிய ஸர்வேச்வரன், கர்மங்களின் அடிப்படையில் சேதனனின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய சுழற்சியில் தனது லீலையை நடத்தியபடி உள்ளான். இப்படி உள்ள ஸர்வேச்வரன் சட்டென்று மேலே கூறப்பட்ட ”காக்கப்படுபவன், காப்பவன்” என்ற உறவு முறையைத் தள்ளிவிட்டு, முன்பு போன்றே இந்தச் சேதனனை கர்மங்களின் பிடியில் இட்டு நடத்த முயன்றால் என்ன ஆகும்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, இந்த ரக்ஷ்யரக்ஷக ஸம்பந்த மிரண்டு தலையுமறிந்ததாக வந்த தன்றிக்கே புருஷகாரரூப ஸாக்ஷி ஸஹிதமாக வந்ததாகையாலே, இத்தை இருவராலு மழிய மாறப்போகாதென்கை.
”காக்கப்படுபவன், காப்பவன்” என்ற உறவுமுறை என்பது “தான் காக்கப்படும் பொருள்” என்று சேதனன் அறிந்த காரணத்தினாலோ அல்லது “தான் காப்பவன்” என்று ஸர்வேச்வரன் உணர்ந்த காரணத்தினாலோ வந்தது அல்ல. புருஷகாரமாக உள்ள பெரியபிராட்டி என்னும் சாட்சியை ஆதாரமாகக் கொண்டு வந்ததால், இந்த உறவுமுறை என்பது இந்த இருவரும் தாங்களாகவே அழிக்க முயன்றாலும் அறியாதது என்கிறார்.