Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 155)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அநித்யமான விருவர் பாரதந்த்ர்யமும் குலைவது அத்தாலே.
இவ்வளவன்று இன்னமுமிதுக்கொரு ப்ரயோஜநமுண்டென்கிறார் (அநித்யமான) என்று தொடங்கி.
இது மட்டுமே அல்ல, மேலும் ஒரு பலன் உள்ளது என்று அருளிச்செய்கிறார்.
அநித்யமான பாரதந்த்ர்யமாவது கர்மபாரதந்த்ர்யம். அதில் சேதநனுக்கு கர்மபாரதந்த்ர்யமாவது: அவச்ய மநுபோக்தவ்யங்களான சுபாசுப கர்மங்களின் வசத்திலே இழுப்புண்டு ஸம்ஸரிக்கை; ஈச்வரனுக்கு கர்மபாரதந்த்ர்யமாவது: தான் செய்த கர்மம் தானநுபவிக்கிறானாகில் நாம் செய்வதென்? என்று இவன் செய்த கர்மத்தையே ப்ரதாநமாக்கி அதுக்கீடாகவே நிர்வஹித்துக்கொண்டு போருகை. இது நடப்பது “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்னுமளவுமாகையாலே, இத்தை அநித்யமென்கிறது. இவை புருஷகார புரஸ்கரணத்தாலே குலைகையாவது - இவன் முன்னிடுமளவில் அத்தலையைத் திருத்தியும், அவன் முன்னிடுமளவில் இத்தலையைத் திருத்தியும், இரண்டு தலையும் ரக்ஷ்யரக்ஷகபாவேந சேரும்படி பண்ணுகையாலே இவை தன்னடையே நிவ்ருத்தமாகை.
“அநித்யமான பாரதந்த்ர்யம்” என்றால் கர்ம பாரதந்த்ர்யம் ஆகும் (கர்மத்திற்கு வசப்படல்). சேதனன் ஒருவனின் கர்ம பாரதந்த்ர்யம் என்பது கண்டிப்பாக அனுபவித்தே தீரவேண்டும் என்பதான நல்வினை மற்றும் தீவினைப் பயன்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றின் பிடியில் சிக்கி, ஸம்ஸாரத்தில் ஆழமாகக் கிடத்தல் ஆகும். ஸர்வேச்வரன் கர்மத்திற்குப் பாரதந்த்ர்யப்படுதல் என்பது – “இந்தச் சேதனன் தான் செய்த கர்மங்களின் பலன்களை அனுபவிக்கிறான். இதில் நாம் என்ன செய்ய உள்ளது?” என்று எண்ணியபடி, சேதனர்களின் கர்மங்களை முன்னிட்டுக்கொண்டு, அவற்றுக்கு ஏற்றபடி அவர்களை வழிநடத்திச் செல்லுதல் என்பதாகும். இப்படியாகச் சேதனன் சிக்குண்டு கிடத்தல், என்பதும், வழிநடத்திச் செல்லுதல் என்பதும், கீதையில் (18-66) – ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன் – என்ற நிலை முடிய மட்டுமே என்பதால், கர்ம பாரதந்த்ர்யத்தை “அநித்யம்” என்றார். ஆனால் இந்த இரண்டும், சேதநன் புருஷகாரத்தை முன்னிடும்போது ஸர்வேச்வரனைத் திருத்தியும், ஸர்வேச்வரன் புருஷகாரத்தை முன்னிடும்போது சேதனனைத் திருத்தியும், ஒருவன் காக்கப்படும் பொருள், மற்றவன் காக்கும் பொருள் என்று இருவரையும் சேர வைப்பதும் செய்வதால் இவர்களது கர்ம பாரதந்த்ர்யம் தானாகவே நீங்கும் என்று கருத்து.