Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 154)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஔபாதிகமுமாய் நித்யமுமான பாரதந்த்ர்யம் இருவர்க்கு முண்டிறே.

– கீழே “ஸ்வரூபம்” என்று சொன்னதை உபபாதிக்கிறார் (ஔபாதிகமுமாய்) என்று தொடங்கி.

கடந்த சூர்ணையில் கூறிய ஸ்வரூபம் பற்றி மேலும் விளக்குகிறார்.

– அதாவது, சேதநனுக்கிவ்விஷயத்தில் பாரதந்த்ர்யம் ததீயத்வ ப்ரயுக்த மாகையாலே ஔபாதிகமுமாய், அவ்வுபாதிதான் நித்யமாகையாலே நிருபாதிக பகவத் பாரதந்த்ர்யத்தோபாதி நித்யமுமாயிருக்கும்; ஈச்வரனுக்கிவ்வி ஷயத்தில் பாரதந்த்ர்யம் ஆச்ரிதத்வ ப்ரயுக்தமாகையாலே ஔபாதிகமுமாய் அவ்வுபாதி நித்யமாகையாலே அதுதானும் நித்யமாயிருக்குமென்கை. ”இருவர்க்குமுண்டு” என்னாதே, ”உண்டிறே” என்றது, இவ்வர்த்தத்தில் ப்ரமாண ப்ரஸித்தியைத் தோற்றுவிக்கைக்காக.

சேதனன் ஒருவனுக்குப் பெரியபிராட்டி விஷயத்தில் பாரதந்த்ர்யம் என்பது, “பெரியபிராட்டியானவள் ஸர்வேச்வரனின் உடைமை” என்ற காரணத்தை முன்னிட்டு ஏற்படுவதால் ஔபாதிகமாக (காரணத்தின் அடிப்படையில் ஏற்பட்ட ஒன்று) இருக்கும். மேலும் பெரியபிராட்டி ஸர்வேச்வரனின் உடைமை என்பது எப்போதும் உள்ளதால், எந்தவிதமான காரணத்தின் அடிப்படையிலும் வராத பகவத் பாரதந்த்ர்யம் போன்று நித்யமாக இருக்கும். ஸர்வேச்வரனுக்குப் பெரியபிராட்டி விஷயத்தில் பாரதந்த்ர்யம் என்பது, “தன்னைப் பற்றுபவள்” என்ற காரணத்தின் அடிப்படையில் உள்ளதால் ஔபாதிகமாக உள்ளது. ஆயினும் அந்தக் காரணம் என்பது நித்யமாக உள்ளதால், பாரதந்த்ர்யம் என்பது நித்யமாக உள்ளதாகிறது. “இருவருக்கும் உண்டு” என்று கூறாமல் “இருவருக்கும் உள்ளதைக் காணலாம் அல்லவா” என்று கூறியதன் காரணம் இந்தக் கருத்திற்குப் பல ப்ரமாணங்கள் உள்ளன என்பதை உணர்த்தவே ஆகும்.