Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 152)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இருவர் முன்னிடுகிறது தந்தாம் குற்றங்களை சமிப்பிக்கைக்காக.
இவன் நிருபாதிக சேஷபூதனாய் அவன் நிருபாதிகசேஷியாயிருக்கையாலே அவ்யவதாநேந ஆச்ரயிக்கவும் அங்கீகரிக்கவு மமைந்திருக்க, இப்படியிருவரும் புருஷகாரத்தை முன்னிடுகிற தெதுக்காகவென்ன வருளிச்செய்கிறார் (இருவர் என்று தொடங்கி).
(சூர்ணையில் உள்ள இருவர் என்பது சேதனன் மற்றும் ஈச்வரன் ஆவர். சமிப்பிக்கை என்றால் பொறுத்துக்கொள்ளுதல் என்று பொருள்). சேதனன் எந்தவிதமான காரணமும் இன்றி அவனுக்கு அடிமையாகவும், ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இன்றி எஜமானனாகவும் உள்ளனர். இப்படி உள்ளபோது சேதனன் நேராகச் சென்று எம்பெருமானைப் பற்றுவது என்பதும், அவன் இவனை நேரடியாக ஏற்பது என்பதும் நிகழலாம். அல்லவா? இதற்கு ஏன் இவர்கள் இருவரும் புருஷகாரமாக மற்றொருவரை நாடவேண்டும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
சேதநனுக்குக் குற்றமாவது, அநாதிகாலமவன் பக்கல் விமுகனாய் அந்ய விஷயப்ரவணனாய் ததாஜ்ஞாதிலங்கநமேபண்ணிக் கூடுபூரித்து வைத்தவபராதம்; ஈச்வரனுக்குக் குற்றமாவது, அவர்ஜநீயமான ஸம்பந்தமுண்டாயிருக்க அபராதத்தையே கணக்கிட்டு அநாதிகாலமிவனை யகலவடித்திருந்தவிது. இவன்றன் குற்றத்தை சமிப்பிக்கையாவது – இத்தைப் பார்த்து ஈச்வரன் சீறாதபடி பண்ணுகை; அவன்றன் குற்றத்தை சமிப்பிக்கையாவது – இத்தை நினைத்து சேதநன் வெருவாதபடி பண்ணுகை.
– சேதனனிடம் உள்ள குற்றங்கள் எவை என்றால்: எல்லையற்ற காலமாக ஸர்வேச்வரனிடம் எந்தவிதமான ஈடுபாடும் அற்றவனாக, மற்ற உலகவிஷயங்களில் ஈடுபாடு கொண்டவனாக, ஸர்வேச்வரனின் ஆணைகளை எப்போதும் மீறியபடி உள்ளவனாக, நெல் முதலிய தான்யங்கள் களஞ்சியத்தை நிறைப்பது போன்று தனது பாவங்களால் ஆத்மாவை நிறைத்து வைப்பவனாக உள்ள தன்மையே ஆகும். ஸர்வேச்வரனிடம் உள்ள குற்றங்கள் எவை என்றால்: சற்றும் நீக்க இயலாத ஸம்பந்தம் என்பது சேதனர்களிடம் இவனுக்கு உள்ளபோதிலும், சேதனர்களின் பாவங்களை மட்டுமே கணக்கில் வைத்தபடி இருந்து, எல்லையற்ற காலம் அந்தப் பாவங்களின் காரணமாக சேதனனைத் தன்னருகில் சேர்க்காமல் தள்ளி வைத்திருத்தல் ஆகும். புருஷகாரமாக உள்ள பிராட்டி சேதனனின் குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளும்படிச் செய்வது என்றால்: இவனது குற்றங்களைக் கண்டு ஸர்வேச்வரன் கோபம் கொண்டு சீறாமல் செய்வதாகும். ஸர்வேச்வரனின் குற்றத்தை பிராட்டி சமிப்பிக்கை என்றால்: தனது குற்றங்களைக் கண்டு அச்சம் கொண்ட சேதனனை ஆறுதல்படுத்தி, அதன் காரணமாக அவன் ஈச்வரனை விட்டு அகலாதபடி செய்தல் ஆகும்.