Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 151)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிடுமென்னுமிடம் அபயப்ரதாநத்திலும் காணலாம்.

– இப்படி ஸ்வதந்த்ரனாயிவர்களை யங்கீகரிக்கிற விடத்திலும், “தமப்யபாஷ ஸௌமித்ரே ஸுக்ரீவ ஸசிவம் கபிம்”, “மாழைமான் மடநோக்கி யுன் தோழியும்பி யெம்பி” என்று இளையபெருமாளையும் பிராட்டியையும் முன்னிட்டாப்போலே மற்றும் புருஷகாரத்தை முன்னிட்டு அங்கீகரித்தவிடம் காணலாமோவென்ன வருளிச்செய்கிறார் (இவன்) என்று தொடங்கி.

– இப்படியாக அனுமனையும், குகனையும் எம்பெருமான் ஏற்று அங்கீகரித்த நேரங்களில் பின்வரும் வரிகளில் உள்ளது போன்று லக்ஷ்மணனையும், சீதையையும் புருஷகாரமாக முன்னிட்டே ஏற்றான்: இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (3-27) – தமப்யபாஷ ஸௌமித்ரே ஸுக்ரீவ ஸசிவம் கபிம் - லக்ஷ்மணா! சுக்ரீவனுடைய மந்திரியாகவும், பேசுவதில் வல்லவனும் ஆகிய அனுமன், இனிய சொற்களுடன் நம்முடன் எப்போதும் கூடியிருக்கும்படியாக நீ பேசுவாயாக. பெரியதிருமொழி (5-8-1) - மாழைமான் மடநோக்கி யுன் தோழியும்பி யெம்பி மேலே உள்ள வரிகள் போன்று மற்ற புருஷகாரங்களை முன்னிட்டு எம்பெருமான் யாரையேனும் ஏற்றுக் கொண்ட நிகழ்வுகள் உள்ளனவா என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, இச்சேதநன் தான் ஆச்ரயிக்கிறபோது புருஷகாரமாக முன்னிடுமவர்களை, அவனு மங்கீகரிக்குபோதும் முன்னிடுமென்னுமிடம், திருவடியையும் ஸ்ரீகுஹப்பெருமாளையும் அங்கீகரித்த ஸ்தலங்கள் மாத்ரமன்றிக்கே, ஸ்ரீவிபீஷணாழ்வானை யங்கீகரித்த ஸ்தலத்திலும் காணலாமென்கை. எங்ஙனே யென்னில்? ”ஸோஹம்பருஷிதஸ்தேந தாஸவச் சாவமாநித: த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம்கத:” என்று சரணம் புகுந்து, “ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபஸ்திதம்” என்று நின்ற விபீஷணாழ்வானை அபயப்ரதாநபூர்வகமாக அங்கீகரிக்கிறவிடத்தில், “ஆநயைநம் ஸ்வயம்” என்று முதலிகளுக்கெல்லாம் மூலபூதரான மஹாராஜரை முன்னிட்டிறே அங்கீகரித்தது. திருவடியையும் ஸ்ரீவிபீஷணாழ்வானையுமங்கீகரிக்கிறவிடத்தில் பிராட்டி ஸந்நிஹிதையல்லாமையாலே யவளை முன்னிட்டமை தோற்றிற்றில்லையேயாகிலும், பிராட்டி லங்கைக்கெழுந்தருளுகிறபோது மஹாராஜரும் திருவடியும் நிற்கிறவிடத்திலே, திருவாபரணங்களைப் பொகட்டு கடாக்ஷித்து வைத்துப்போகையாலும், லங்கையிலே எழுந்தருளினபின்பு ஸ்ரீவிபீஷணாழ்வானைப் பெருமாள் திருவடிகளிலே வரும்படி கடாக்ஷித்தருளுகையாலும், பெருமாளிருவரையு மங்கீகரிக்குமிடத்தில் பிராட்டியை முன்னிட்டே யங்கீகரித்தாரென்று கொள்ளவேண்டும். பரதந்த்ரையான வவளுக்கு இத்தலையில் நினை வொழியத் தனித்தொரு ப்ரவ்ருத்தி கூடாதிறே; ஆகையாலேயிறே, பரகத ஸ்வீகாரம் சொல்லுகிறவிடத்திலே ஸ்ரீவிபீஷணாழ்வானை யங்கீகரித்த தத்தையுமிவர் ஸஹபடித்தது.

எம்பெருமானை சேதனன் பற்றும்போது யாரைப் புருஷகாரமாகக்கொண்டு பற்றுகிறானோ அதே போன்று ஸர்வேச்வரனும் அவர்களை முன்னிட்டுக் கொண்டே ஏற்கிறான் என்ற நிகழ்வானது அனுமனையும் குகனையும் ஏற்ற இடம் தவிர, விபீஷணனை ஏற்றபோதிலும் காணலாம் எப்படி? இராமாயணம் யுத்தகாண்டம் (17-16) – ஸோஹம்பருஷிதஸ்தேந தாஸவச் சாவமாநித: த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச ராகவம் சரணம்கத: - நான் இராவணனுக்கு நன்மையை மட்டுமே உபதேசம் செய்தேன்; ஆனால் அவனால் துன்பமான சொற்கள் உரைக்கப்பெற்றேன்; வேலையாட்களைக் காட்டிலும் தாழ்வாக நடத்தப்பட்டேன்; எனது புத்திரர்களையும் மனைவியையும் விட்ட நான் இராகவனைச் சரணம் புகுந்தேன் – என்று சரணம் அடைத்தான். அப்போது இராமாயணம் யுத்தகாண்டம் (17-13) - ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே நிவேதயத மாம் க்ஷிப்ரம் விபீஷணமுபஸ்திதம் - அனைத்து உயிர்களும் சரணம் புகுவதற்கு ஏற்றவனும், மிகவும் உயர்ந்தவனும் ஆகிய இராகவனிடம் சென்று எனது பெயரான விபீஷணன் என்பதை உடனே தெரிவிப்பீர்களாக - என்று கூறினான். அப்போது அந்த விபீஷணனை இராமாயணம் யுத்தகாண்டம் (18-34) – ஆநயைநம் ஸ்வயம் - வானரர்களின் தலைவனாகிய சுக்ரீவா! அவனை அழைத்து வருவாயாக; அவனுக்கு என்னால் அபயம் அளிக்கப்பட்டது; விபீஷணனாக இருந்தாலும், இராவணனாக இருந்தாலும் அழைத்து வா - என்று அழைத்து வரக் கூறி, அனைத்திற்கும் முதல்வனான சுக்ரீவன் முன்னிட்டே அபயம் அளித்தான். அனுமனையும், விபீஷணனையும் ஏற்றுக்கொண்ட இடத்தில் அங்கு புருஷகாரமாகப் பெரியபிராட்டி இல்லையே, ஆக அவளை முன்னிட்டுச் சரணாகதி நடைபெற்றதாக வெளிப்படவில்லையே என்று கேள்வி எழலாம். இதற்கு விடை அளிக்கிறார். அங்கு பெரியபிராட்டி இல்லை என்றபோதிலும் சுக்ரீவனும், அனுமனும் நின்ற இடத்தில், இராவணனால் தான் அபகரித்துச் செல்லப்பட்டபோது, மேலிருந்து தனது திருவாபரணங்களை அங்கு விழும்படியாகச் செய்து அனுமனைக் கடாக்ஷித்தாள். விபீஷணனின் மனைவியாகிய சரமை என்பவள் சீதையுடன் நட்புடன் இருந்த காரணத்தினால் அவள் மூலமாக விபீஷணன் இராமனின் திருவடிகளை அடையும்படி கடாக்ஷித்தாள் (அல்லது விபீஷணனின் மகளாகிய த்ரிஜடை என்பவள் மூலம் கடாக்ஷித்தாள் என்றும் கொள்ளலாம்). ஆகவே இந்த இருவரையும் பெரியபிராட்டியை முன்னிட்டே இராமன் ஏற்றான் என்றாகிறது. எம்பெருமானுக்கு வசப்பட்டவளான பிராட்டிக்கு, அவனது நினைவுகள் நீங்கலாக வேறு எந்தச் செய்கையும் இருத்தல் பொருந்தாது. ஆகவேதான் பரகத ஸ்வீகாரம் குறித்துக் கூறும்போது, விபீஷணனை இராமன் ஏற்றதைப் பற்றிக் கூறினார்.