Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 149)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இவ்வர்த்தத்தை வேதபுருஷனபேக்ஷித்தான்.

இவ்வர்த்தந்தான் வேதாபிமதமென்கிறார் மேல் (இவ்வர்த்தத்தை) என்று தொடங்கி.

”ஸ்வாதந்த்ர்யம் காரணமாக ஏற்பட்ட பாரதந்த்ர்யம்” என்பது எந்தவிதமான தடையும் இல்லாதது என்னும் கருத்தானது, வேதங்களாலும் விரும்பப்படும் கருத்து என்று அருளிச்செய்கிறார்.

– (இவ்வர்த்தம்) என்கிறது கீழ் ப்ரபலமாகச் சொல்லப்பட்ட பரகதஸ்வீகாரத்தை. (வேத புருஷனித்தை யபேக்ஷித்தான்) என்றது “நாயமாத்மா ப்ரவசநேந லப்ய: நமேதயா நபஹுநா ச்ருதேந, யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்று கடவல்லியிலும் முண்டகோபநிஷத்திலும் சொல்லுகையாலே யாதரித்தானென்கை. அஸக்ருத் கீர்த்தந மபேக்ஷா கார்யமிறே.

– “இவ்வர்த்தம்” என்பதன் மூலம் கடந்த சூர்ணையில் கூறப்பட்ட ”ஸ்வாதந்த்ர்யம் காரணமான பாரதந்த்ர்யம்” என்பது உணர்த்தப்பட்டது. “வேத புருஷனித்தை யபேக்ஷித்தான்” என்பதன் மூலம் கூறப்படுவது என்ன? கடவல்லியும் (2-43), முண்டக உபநிஷத்தும் (3-2-37) – நாயமாத்மா ப்ரவசநேந லப்ய: நமேதயா நபஹுநா ச்ருதேந, யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய: தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் - ஸர்வேச்வரன் மனனம் காரணமாகவோ, பக்தி வடிவமான உபாசனம் காரணமாகவோ, பலவகையான கேள்விகள் மூலமாகவோ அடையப்படுபவன் அல்லன்; ஸர்வேச்வரன் யார் ஒருவனை விரும்பி ஏற்கிறானோ அந்த ஒருவனால் மட்டுமே அடையப்படுபவன்; அந்தச் சேதனனுக்கே ஸர்வேச்வரன் தனது ஸ்வரூபம் உள்ளிட்ட அனைத்தையும் உணர்த்துகிறான் - என்றது காண்க. ஆகவே வேதபுருஷன் இதே கருத்தை ஏற்றான் என்றாகிறது. பலமுறை ”ஏற்கிறான்” என்று கூறப்படுவதன் காரணம் விருப்பத்தால் ஆகும்.