Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 148)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
க்ருபையாலே வரும் பாரதந்த்ர்யத்திற்காட்டில் ஸ்வாதந்த்ர்யத்தாலே வரும் பாரதந்த்ர்யம் ப்ரபலம்.
இனி, இவன் ஸ்வீகாரங்கண்டிரங்கி யவனிவனுக்கு பரதந்த்ரனாவதிலும் தன் ஸ்வாதந்த்ர்யத்தால் வந்து பரதந்த்ரனாவதே ப்ரபலமென்கிறார் (க்ருபையாலே) என்று தொடங்கி.
– ஸர்வேச்வரன் சேதனனின் ப்ரபத்தியைக் கண்டு இரக்கம் கொண்டு, தனது க்ருபை காரணமாக அந்தச் சேதனனுக்கு வசப்படுவதைக் காட்டிலும், தன்னுடைய சுதந்திரம் காரணமாக தானாகவே வலியச் சென்று சேதனனுக்கு வசப்படுதலே சிறந்தது என்கிறார்.
– அதாவது, ஆர்த்தராய் அநந்ய சரண்யராய் தன் திருவடிகளிலே வந்து சரணம் புகுந்தவர்களளவில் தனக்குண்டான க்ருபையாலே அவர்கள் சொன்னதே செய்யும்படி பரதந்த்ரனாகையும், பட்டத்துக்குரியவானையுமரசும் போலே தன்நிரங்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே நிர்ஹேதுகமாகச் சிலரை யங்கீகரீத்துத் தன்னையவர்களிட்டது வழக்காக்கி வைக்கையும், இரண்டுமீச்வரனுக் குள்ளதொன்று; இதில் முற்பட்டது, ஓரோதசைகளிலே ஸ்வாதந்த்ர்ய நிருத்தமாய் விபலிக்கவுங் கூடும்; பிற்பட்டது, அப்ரதிஹதமாகையாலே ஒருக்காலும் கண்ணழிவில்லை. ஆகையாலே அதிலுங் காட்டிலிது ப்ரபலமென்கை.
– மிகுந்த துன்பம் அடைந்தவர்களாக, தன்னைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்று தன்னை அடைந்தவர்களாக, தனது திருவடியில் சரணம் புகுந்தவர்களிடம் ஸர்வேச்வரன் மிகுந்த இரக்கம் கொள்கிறான். இதனால் தனது க்ருபை காரணமாக உண்டான பாரதந்த்ர்யமாகும். மாறாக, எந்தவிதமான காரணமும் இன்றி ஒரு சிலரை ஸர்வேச்வரன் அங்கீகாரம் செய்கிறான்; அதன் பின்னர், தான் அவர்கள் சொற்படிக் கேட்டு நடக்கிறான். இது ஸ்வாதந்த்ர்யம் காரணமாக உண்டான பாரதந்த்ர்யமாகும். இந்த இரண்டு தன்மைகளுமே ஸர்வேச்வரனுக்கு உள்ளது. இந்த இரண்டில் முதலில் கூறப்பட்டதான ”க்ருபை காரணமாக உண்டான பாரதந்த்ர்யம்” என்பது ஒரு சில நேரங்களில் ஸர்வேச்வரனின் ஸ்வாதந்த்ர்யம் காரணமாகத் தடைப்பட்டு, பலன் அளிக்காமல் போய்விடக்கூடும். ஆனால் இரண்டாவதாகக் கூறப்பட்ட ”ஸ்வாதந்த்ர்யம் காரணமாக ஏற்பட்ட பாரதந்த்ர்யம்” என்பது எந்தவிதமான தடையும் இல்லாதது என்பதால், பலன் உண்டாக எந்த இடையூறும் இல்லை. எனவே முந்தையதைக் காட்டிலும் பிந்தையது ஏற்றமானது என்று கருத்து.