Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 147)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
நெடுநாள் அத்யபரையாய்ப் போத்த பார்யை லஜ்ஜாபயங்களின்றிக்கே பர்த்ருஸகாரத்தாலே நின்று என்னை யங்கீகரிக்கவேணுமென்று அபேக்ஷிக்குமாபோலே யிருப்பதொன்றிதிறேயிவன் பண்ணும் ப்ரபத்தி.
இவன் பண்ணும் ப்ரபத்தி, ஸ்வபூர்வ வ்ருத்தத்தை யநுஸந்தித்தால் அபாராதகோடிலேயா யிருக்குமென்னுமத்தை த்ருஷ்டாந்தமுகேந தர்சிப்பிக்கிறார் மேல் (நெடுநாள்) என்று தொடங்கி.
ஒருவன் தன்னுடைய முந்தைய செயல்களை எண்ணிப் பார்த்தான் என்றால், அவன் செய்கின்ற ப்ரபத்தி என்பது அபராதங்களின் எல்லையாகவே இருப்பதை உணரலாம் என்பதை ஓர் உதாரணம் மூலம் அருளிச்செய்கிறார்.
– அதாவது, நெடுங்காலம் பர்த்தாவோடு ஒட்டற்று பரபுருஷகாமிநியாய் தந்நிக்ரஹ பாத்ரமாய்ப் போந்தாளொருபார்யை, “இப்படிப்பட்டநாமவன் ஸந்நிதியிலே கூசாமல் சென்று நிற்கும்படியென்” என்கிற லஜ்ஜையும், “இத்தனை காலமும் நாம் செய்து திரிந்ததெல்லாம் கண்டிருக்கிறவன், இப்போது நம்மைவந்திப்படியபேக்ஷிப்பதே! என்று தண்டிக்கில் செய்வதென்!” என்னும் பயமுமின்றிக்கே, அவன் முன்னே சென்று நின்று என்னையங்கீகரிக்கவேணும் என்றபேக்ஷிக்குமளவில் எத்தனையபராதமுண்டு; அப்படியே யிருப்பதொன்றிறே, பகவதநந்யார்ஹனாய் வைத்து அநாதிகாலம் அவனுடன் பற்றின்றிக்கே அந்யபரனாய்ப்போந்தவிவன், ஸ்வபூர்வ வ்ருத்தாந்தாநுஸந்தாநத்தால் வரும் லஜ்ஜையும் ஸ்வதந்த்ரனானவவன் தண்டிக்கில் செய்வதென் என்னும் பயமுமின்றிக்கே, தத்ஸந்நிதியிலே சென்று நின்று தன்னை யங்கீகரிக்கவேணுமென்று பண்ணுகிற சரண வரண மென்கை. ஆக இவ்வளவும், ஸ்வகத ஸ்வீகாராநுபாயத்வமும், பரகத ஸ்வீகாரோபாயத்வமும் ப்ரதிபாதிக்கப்பட்டது.
– பல காலமாகத் தனது கணவனுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல், மற்ற ஆண்மகன் ஒருவனை நாடி அவனை அடைந்த மனைவி ஒருவள், மீண்டும் தனது கணவனை அடைந்தால் தண்டிக்கப்படுவோம் என்ற நிலையில் உள்ளாள். அவள் தனது கணவன் முன்பாகச் சென்று, “இப்படிப்பட்ட நான் எனது கணவன் முன்பு எந்த முகத்துடன் விழிப்பேன்”, என்று எண்ணிச் சிறிதும் வெட்கம் அடையாமலும்; ”இத்தனை காலம் தவறான செய்கைகளுடன் நான் திரிந்து வந்ததை இவன் பார்த்திருப்பான். இப்படிப்பட்ட இவள் மீண்டும் நம்மை நாடி வந்து விரும்புவது எப்படி என்று எண்ணி என்னைத் தண்டித்தால் என்ன செய்வது?” என்று எண்ணி அச்சம் கொள்ளாமலும், அவன் முன்பாகச்சென்று, ”என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கேட்பது போல் - என்கிறார். இத்தகைய செய்கை எத்தனை அபராதங்களுடன் கூடியது! இத்தகைய அபராதங்கள் போன்றே - ஸர்வேச்வரனுக்கே உரியவனாக உள்ள நாம், எல்லையற்ற காலம் அவன் மீது எந்தவிதமான பற்றுதலும் இன்றி, வேறு எண்ணங்களுடன் திரிகிறோம். நம்முடைய முந்தைய செயல்களால் எந்தவிதமான நாணமும் கொள்வதில்லை. சுதந்திரமானவனாகிய ஸர்வேஸ்வரன் தண்டித்தால் என்ன செய்வது என்ற அச்சமும் இல்லை. அவன் முன்பாக நின்று நம்மை ஏற்கவேண்டும் - என்று ப்ரபத்தி செய்யும் செய்கை உள்ளது. இப்படியாக நாமாகவே சென்று ஸர்வேச்வரனிடம் ப்ரபத்தி செய்வதன் ஆகாத தன்மை மற்றும் அவனாகவே வந்து நம்மை ஏற்றுக்கொள்வதன் ஏற்புடைய தன்மை என்பது உணர்த்தப்பட்டது.