Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 146)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
ஸர்வாபராதங்களுக்கும் ப்ராயச்சித்தமான ப்ரபத்தி தானும் அபராத கோடியிலேயாய் க்ஷாமணம் பண்ண வேண்டும்படி நில்லாநின்றதிறே.
இவன் பண்ணும் ப்ரபதநம் சரண்ய ஹ்ருதயாநுஸாரி யல்லாதபோது அபராதகோடி கடிதமாமென்னுமிட மருளிச்செய்தார் கீழ்; இதுதா னிவனுடைய பூர்வவ்ருத்தத்தைப் பார்த்தாலும் அபராதகோடியிலேயா யிருக்குமென்னு மிடத்தை ப்ரகாசிப்பிக்கைக்காக பாஷ்யகாரருடைய வநுஷ்டாந ப்ரகாரத்தை யருளிச் செய்கிறார் மேல் (ஸர்வாபராதங்களுக்கும்) என்று தொடங்கி.
– அனைவரும் சென்று சரண் புகுவதற்கு ஏற்றவனுடைய திருவுள்ளத்திற்கு, ஒருவன் செய்த ப்ரபத்தி என்பது ஏற்கத்தக்கதாக இல்லாதபோது, அத்தகைய ப்ரபத்தி என்பது அபராதங்களின் வரிசையில் சேர்ந்துவிடும் என்று அருளிச்செய்தார். இத்தகைய ப்ரபத்தி என்பது ஒருவனுடைய முந்தைய செயல்களை ஆராய்ந்தாலும் அபராதவரிசையில் நிற்கும் என்பதை மேலும் விளக்க எண்ணியவராய், பாஷ்யக்காரரின் அநுஷ்டானத்தை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “அஹமஸ்ம்யபராதாநா மாலய” என்கிறபடியே, அபராதங்களுக் கெல்லாம் கொள்கலமாயிருக்கிற விச்சேதநன் ப்ரபத்தி பண்ணவே, ”ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்னும்படி இவனளவில் ஸர்வேச்வரன் திருவுள்ளம் ப்ரஸந்நமாய் விடுகையாலே, ஸர்வாபராதங்களுக்கும் ப்ராயச்சித்தமாயிறே ப்ரபத்திதா னிருப்பது; இப்படி யிருந்துள்ள ப்ரபத்தியை “த்வத் பாதாரவிந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே” என்று பண்ணியருளின பாஷ்யகாரர்க்கு, ஸ்வபூர்வ வ்ருத்தத்தை யநுஸந்தித்தவாறே அது தானும் அபராத கோடியிலேயாய் “த்வமேவ மாதாச” என்று தொடங்கி இத்தலையிலபராதத்தைப் பொறுக்கைக் குறுப்பான பந்தவிசேஷங்களை யெல்லாம் விண்ணப்பஞ் செய்துகொண்டு, “தஸ்மாத் ப்ரணம்ய” இத்யாதியாலே இப்படி திருமுன்பே கூசாமல் வந்து நின்று ப்ரபத்தி பண்ணின இவ்வபராதத்தைப் பொறுத்தருளவேணுமென்று க்ஷாமணம் பண்ண வேண்டும்படி நில்லாநின்றதிறே யென்கை; ஆகையால், இவ்வழியாலுமிது அபராதகோடி கடிதமாயிருக்கு மென்கை. அநாதிகால மபராதத்தைப்பண்ணிப் பின்பொருநாளிலே ஆபி முக்கியம் பண்ணினானேயாகிலும், “ரிபூணாமபி வத்ஸல:”, “யதிவா ராவணஸ் ஸ்வயம்” என்றிருக்கு மீச்வர ஹ்ருதயத்தைப் பார்த்தால் அவன் கைக்கொள்ள ஒரு குறை இல்லை. அவனப்படி யிருந்தானே யாகிலும், தன் பூர்வவ்ருத்தத்தை யுணர்ந்தால் இவனித்தை அபராதமாகவே நினைத்து க்ஷாமணம் பண்ணவேண்டும் படியாயிறே யிருப்பது.
அஹமஸ்ம்யபராதாநா மாலய - நான் குற்றங்களின் இருப்பிடமாகவே உள்ளேன் - என்று கூறுவதற்கு ஏறப அபராதங்கள் அனைத்திற்கும் இருப்பிடமாக உள்ள நாம் ப்ரபத்தி செய்யும்போது, கீதை (18-66) - ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி - அனைத்து பாவங்களில் இருந்தும் நான் விடுவிபேன் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் தன்னுடைய திருவுள்ளத்தில் இரக்கம் கொண்டு விடுகிறான். இதனால் அனைத்துவிதமான பாவங்களுக்கும் ப்ராயச்சித்தமாக ப்ரபத்தி உள்ளது. சரணாகதி கத்யத்தில் – த்வத் பாதாரவிந்த யுகளம் சரணமஹம் ப்ரபத்யே - உனது தாமரை மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான் சரணம் என்று பற்றுகிறேன் - என்று உரைத்த பாஷ்யகாரருக்கு தம்முடைய கடந்தகால செயல்களின் சிந்தனை முன்னே வந்து நின்றது. ஆகவே ப்ரபத்தியை அபராதங்களின் வரிசையில் சேர்த்தார். எப்படி? சரணாகதி கத்யத்தில் – த்வமேவ மாதா ச – என்று தொடங்கி, நமது வாழ்க்கையில் நாம் செய்து வந்த அனைத்துவகையான குற்றங்களையும் பொறுத்துக் கொள்ளும்படியாக உறவுமுறைகளை விண்ணபித்தபடி கத்யத்தில் உரைக்கிறோம். அதன் பின்னர் - தஸ்மாத் ப்ரணம்ய - என்பது போன்றவை மூலம் இவ்விதமாக அனைத்தையும் செய்துவிட்டு, அவனுடைய திருமுகத்தின் முன்பாகச் சற்றும் கூசாமல் வந்து நின்று, ”ப்ரபத்தி செய்தல்” என்ற பெரும் அபராதத்தையும் செய்கிறோம். இதனைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்படியாக அவனிடம் விண்ணப்பம் செய்யும் அளவில் ப்ரபத்தி உள்ளது என்று பாஷ்யக்காரர் உணர்த்தினார். எனவே எந்தவகையாலும் ப்ரபத்தி என்பது அபராத வரிசையில் உள்ளது. எல்லையற்ற காலம் பாவங்களை மட்டுமே செய்து வந்து, ஒருநாள் சட்டென்று தனது ப்ரேமையை ஸர்வேச்வரன் பக்கம் திருப்பினான் என்றாலும், ரிபூணாமபி வத்ஸல: - விரோதியிடமும் வாத்ஸல்யம் கொண்டவன் - என்பதையும், இராமாயணம் யுத்தகாண்டம் (18-38) – யதிவா ராவணஸ் ஸ்வயம் – இராவணனாக உள்ளபோதிலும் – என்பதையும் கருத்தில் கொண்டு, ஸர்வேச்வரனின் திருவுள்ளத்தை நோக்கினால், அவன் நம்மை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஸர்வேச்வரன் இவ்விதம் உள்ளான் என்றபோதிலும், சேதனன் தனது முந்தைய செயல்களைச் சற்றே எண்ணிப் பார்த்து, அதன் காரணமாக ப்ரபத்தியை அபராதமாகவே எண்ணி, இதனை எம்பெருமான் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று விண்ணப்பம் செய்ய வேண்டும்படியாக ப்ரபத்தி உள்ளது என்று கருத்து.