Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 145)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஸ்ரீபரதாழ்வானுக்கு நன்மைதானே தீமையாயிற்று; ஸ்ரீகுஹப்பெருமாளுக்குத் தீமைதானே நன்மையாயிற்று.

அவர்கள் தங்கள் பக்கலிவை கண்டபடி என்னவென்ன வருளிச்செய்கிறார் (ஸ்ரீபரதாழ்வானுக்கு) இத்யாதி வாக்ய த்வயத்தாலே.

அவர்களிடம் இவை இரண்டும் எப்படிக் காணலாம் என்பதற்கான விடையை அளிக்கிறார்.

– அதாவது, பெருமாளை மீட்டுக் கொண்டுவந்து திருவபிஷேகம் பண்ணுவித்துத் தன் ஸ்வரூபாநுரூபமான வடிமையைப் பெற்று வாழுகைகாக, “ஏபிச்ச ஸசிவைஸ்ஸார்த்தம்” இத்யாதிப்படியே வழியே பிடித்து மநோரதித்துக் கொண்டு சென்று பெரியவார்த்தியோடேயவர் திருவடிகளிலே ப்ரபத்தி பண்ணிய ஸ்ரீபரதாழ்வானுக்கு, அப்படி பண்ணின ப்ரபத்தியாகிற நன்மைதானே, சரண்யரான பெருமாள் திருவுள்ளத்துக் கநிஷ்டமாகையாலே தீமையாய்விட்டது. “ஏழை ஏதலன்” இத்யாதிப்படியே பெருமாள் தாமே வந்தங்கீகரிக்கப்பெற்ற ஸ்ரீகுஹப்பெருமாளுக்கு, தோஷமே பச்சையாக வங்கீகரிக்கையாலே, பாதகமாகிற தீமைதானே நன்மையாய்விட்ட தென்கை. “யத் த்வத்ப்ரியம் ததிஹ புண்யம புண்ய மந்யத்” என்றிறே புண்யபாப லக்ஷணம்; ஆகையா லிவர்கள் பக்கலிலே காணலாமென்கை.

இராமன் கானகம் சென்றபோது, எப்படியாவது இராமனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவந்து, அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து, அதன் மூலம் தனது ஸ்வரூபத்திற்கு ஏற்றதான கைங்கர்யத்தைப் பெற்றுவிடலாம் என்று பரதன் எண்ணினான். ஆகவே இராமாயணம் அயோத்யாகாண்டம் (104-12) - ஏபிச்ச ஸசிவைஸ்ஸார்த்தம் - என்ற ச்லோகத்திற்கு ஏற்ப இராமன் சென்ற வழியில் சென்று, மிகுந்த துன்பத்துடன் இருந்த பரதன் இராமனின் திருவடிகளில் சரணாகதி செய்தான். ஆனால் இத்தகைய ப்ரபத்தி என்பது இராமனின் திருவுள்ளத்திற்கு ஏற்றபடி அமையாத காரணத்தினால் நன்மையில் முடியவில்லை. குகனைப் பொறுத்தவரை பெரியதிருமொழி (5-8-1) – ஏழை ஏதலன் – என்று கூறும் பாசுரத்திற்கு ஏற்ப, இராமன் தானாகவே வலிய வந்து ஏற்றுக்கொண்டான். இதனால் தாழ்ந்தவன், வேடன் போன்ற தோஷங்கள் குகனுக்கு உள்ளபோதிலும், அத்தகைய தீமைகளே நன்மைகளாக மாறின. அதிமாநுஷ்யஸ்தவம் – யத் த்வத்ப்ரியம் ததிஹ புண்யம புண்ய மந்யத் - எது உனக்கு விருப்பமோ அதுவே புண்ணியம், எது விருப்பம் அல்லனவோ அதுவே பாவம் – என்று புண்ணியபாவ இலக்கணங்கள் கூறியது காண்க. ஆகவே இவர்களிடம் இந்த இரண்டையும் இவ்விதம் காணலாம்.