Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 143)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அவன் இவனைப்பெற நினைக்கும்போது பாதகமும் விலக்கன்று.
இனி அவனே ஸ்வீகரிக்குமளவில் உள்ள வாசி சொல்லுகிறார் அவனிவனை) என்று தொடங்கி.
– அடுத்து ஸர்வேச்வரன் தானாகவே வந்து சேதனனைப் பற்றுவதற்கு உள்ள வேறுபாட்டை அருளிச்செய்கிறார்
– அதாவது, ஸ்வாமியாய் ஸ்வதந்த்ரனானவன் ஸ்வம்மாய் பரதந்த்ரனா யிருக்கிற விவனை ஸ்வேச்சையாலே பெற நினைக்குமளவில், பாபங்களில் ப்ரதநமாக வெண்ணப்படும் பாதகமும் ப்ரதிபந்தகமாகமாட்டா தென்கை. இவை யிரண்டாலும் ஸ்வகதஸ்வீகாராநுபாயத்வமும், பரகத ஸ்வீகாரோபாயத்வமும் காட்டப்பட்டது. “சித: பரம் சில்லாபே ப்ரபத்திரபி நோபதி:, விபர்யயேது நைவாஸ்ய ப்ரதிஷேதாயபாதகம்” என்னக்கடவதிறே.
– அனைத்தையும் உடையவனாகவும், சுதந்திரமாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரன் தனது உடைமையாக உள்ளவனும், வேறு எதற்கும் கட்டுப்படாமல் தனக்கு மட்டுமே அடிமையாக உள்ளவனும் ஆகிய சேதனனை, தான் அந்தச் சேதனன் மீது கொண்ட ஆசை காரணமாக அவனை அடைய எண்ணுகிறான். அப்போது பாவங்களில் முதன்மையாகக் கொள்ளப்படுகின்ற தீயவினைகள் என்பது தடையாக நிற்பதில்லை. இந்த இரண்டு சூர்ணைகள் மூலம் அவனை அடைய தானாகவே முயலுதல் என்பது உபாயம் அல்ல என்பதும், அவனே வந்து நம்மைப் பற்றுதலே உபாயம் ஆகும் என்பதும் உணர்த்தப்பட்டன. சித: பரம் சில்லாபே ப்ரபத்திரபி நோபதி:, விபர்யயேது நைவாஸ்ய ப்ரதிஷேதாயபாதகம் – பரம்பொருளைப் பெறும் விஷயத்தில் ப்ரபத்தி உபாயம் அல்ல, ஸர்வேச்வரன் இவனைப் பற்ற எண்ணும்போது பாவங்கள் தடை அல்ல - என்பது காண்க.