Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 142)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இவன் அவனைப்பெற நினைக்கும்போது இந்த ப்ராபத்தியும் முபாயமன்று.

இப்படி ப்ரஸ்துதையான ப்ரபத்தியினுடைய அநுபாயத்வத்தையும், தத்ப்ரதிகோடியான பரகத ஸ்வீகாரோபாயத்வத்தையும், தத்ப்ரதிகோடியான பரகத ஸ்வீகாரோபாயத்வத்தையும், ”இது தன்னைப்பார்த்தால்” இத்யாதியாலும், ”ப்ராப்திக்கு பாயம் அவன் நினைவு” இத்யாதியாலும் கீழருளிச்செய்தபடியன்றியே, முகாந்தரேண வருளிச்செய்கிறார் மேல். அதில், இப்படி ஸ்வரூபாநுரூபமானவித்தை ஸாதநமாக்கிக் கொண்டு ஸ்வதந்த்ரனான வவனை யிவன் பெறப் பார்க்குமன்று அவன் நினைவு கூடாதாகில் இது விபலிக்குமென்கிறர் (இவனவனை) என்று தொடங்கி.

இவ்விதம் மேலே கூறப்பட்டதான ப்ரபத்தி என்பது உபாயம் ஆகாத தன்மையை சூர்ணை 54ல் – இது தன்னைப்பார்த்தால் - என்பதன் மூலம் உணர்த்தினார்; அதன் எதிர்தட்டாக உள்ள “எம்பெருமானே வந்து பற்றுதல்” என்பது உபாயமாகின்ற தன்மையை சூர்ணை 66ல் - ப்ராப்திக்குபாயம் அவன் நினைவு – என்பதன் மூலம் உணர்த்தினார். இவற்றை மேலும் சில காரணங்கள் மூலம் அருளிச்செய்கிறார். ஸ்வரூபத்திற்கு ஏற்றதான ப்ரபத்தியை ஒரு சாதனமாகக் கொண்டு, சுதந்திரமாகச் செயல் புரிகின்ற ஸர்வேச்வரனைப் பெறுவதற்கு முயலும்போது, அவனது பற்றுதல் கைகூடாமல் உள்ள காரணத்தினால், ப்ரபத்தியானது பலன் அளிக்காது என்கிறார்.

– அதாவது, உடைமையை உடையவன் சென்று கைக்கொள்ளுமாப்போலே ஸ்வாமியான அவன்றானே வந்து அங்கீகரிக்கக் கண்டிருக்கக்கடவ பரதந்த்ரனான விச்சேதநன், தான் பலியாய் தன் ஸ்வீகாரத்தாலே ஸ்வதந்த்ரனான வவனைப்பெற நினைக்குமளவில் அவன் நினைவு கூடாதாகில், இப்படி விலக்ஷணையாயிருக்கிற ப்ரபத்தியும் தல்லாப ஸாதநமாகாதென்றபடி.

ஒரு பொருளின் சொந்தக்காரன் தானாகவே வலியச்சென்று தன்னுடையதான அந்தப் பொருளைக் கைக்கொள்வதே இயல்பாகும். இது போன்று சேதனன் ஒருவன், ஸர்வேச்வரன் தானாகவே வலிய வந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதி கொண்டவன் ஆவான். ஆனால் இதனை விடுத்து, தன்னுடைய பலனைத் தானே பெறப்போகிறோம் என்று எண்ணியவனாக, தனது ப்ரபத்தி காரணமாக, சுதந்திரமாக உள்ள ஸர்வேச்வரனை பெற முயற்சிக்கலாம். அப்போது அவனது பற்றுதல் கைகூடாது என்பதால், தூய்மையாக உள்ள ப்ரபத்தி என்பது அவனைப் பெற உதவும் சாதனம் அல்ல என்று கொள்க.