Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 141)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆகையாலே ஸுகரூபமாயிருக்கும்.

– இத்தால், ப்ரபத்திக்கு வைலக்ஷண்யம் பலித்தபடியே அருளிச்செய்கிறார் (ஆகையாலே) என்று தொடங்கி.

– இதன் மூலம் ப்ரபத்தியின் மேன்மையானது உணரப்பட்டதைக் கூறுகிறார்.

– அதாவது, ஸாத்ய வஸ்துதானே ஸாதநமாகையாலே, தத் வரணரூபமானவிது தேவையாயிராதே ஸுகரூபமாயிருக்குமென்றபடி. அன்றிக்கே, இன்னமும் ப்ரபத்திக்கொரு வைலக்ஷண்யமருளிச்செய்கிறார் (புல்லை) இத்யாதியாலே. அதாவது – புல்லைக்காட்டி தேநுவை அழைத்துக்கொண்டு பின்னை அப்புல்லையே யிடுமளவில் பல ஸாதநங்களுக்கு பேதமில்லாதாப்போலே, “ஸக்ருத் க்ருதோஞ்ஜலி:”, “நமச் சக்ருர் ஜநார்தநம்” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே அஞ்ஜல்யாதி ரூபையான ப்ரபத்தியை முன்னிட்டு ஈச்வரனை வசீகரித்தால் பின்னையவனுக்குகப்பாகச் செய்யுமடிமையும், “பத்தாஞ்ஜலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந:”, ”கைகளாலாரத் தொழுது தொழுதுன்னை” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே தன் ஸ்வரூபாநுரூபமான அஞ்ஜல்யாதி வ்ருத்தி விசேஷங்களாகையாலே பலஸாதநங்களுக்கு பேதமில்லை. இப்படி பலமானது தானே ஸாதநமாகையாலே, இப்ப்ரபத்திதான் தேவையாயிராதே இவனுக்கு ஸுகரூபமாயிருக்குமென்கை. ஆக (ப்ரபத்த்யுபாயத்துக்கு) என்று தொடங்கி இவ்வளவாக ப்ரபத்தியினுடைய தோஷராஹித்யமும் குணஸாஹித்யமும் சொல்லப்பட்டது.

தன்னைப் பெறுவதற்கான ஸாதனாமாகத் தானே உள்ளான். எனவே அவனைப் பற்றுதல் என்பதில் நோக்குடைய இந்த ப்ரபத்தி என்பது விதிக்கப்பட்ட செயல் போன்று கடினமாக அல்லாமல், செய்வதற்குச் சுகம் அளிப்பதாகவே இருக்கும். அல்லது ப்ரபத்திக்கு மேலும் ஒரு மேன்மையை வெளிப்படுத்துகிறார். புல்லைக் காண்பித்துப் பசுவை வரவழைத்து, அதற்கு அந்தப் புல்லையே தின்பதற்கு அளிப்பதன் மூலம் பலன் மற்றும் ஸாதனம் ஆகிய இரண்டிற்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை எனலாம். இது போன்று இங்கு வேறுவிதமாக உரைக்கலாம். ஸ்தோத்ரரத்னம் - ஸக்ருத் க்ருதோஞ்ஜலி: – ஒருமுறை செய்யப்பட்ட அஞ்ஜலி என்பது - என்றும், மஹாபாரதம் - நமச் சக்ருர் ஜநார்தநம் - ஜநார்த்தனனை வணங்கினர் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அஞ்ஜலி செய்தல் போன்றவையான ப்ரபத்தி செயல்பாடுகளை முன்னே நிறுத்திக் கொண்டு ஸர்வேச்வரனை வசீகரித்த பின்னர் அவனது மகிழ்ச்சிக்காகப் பல கைங்கர்யங்கள் செய்யக்கூடும். இப்படிப்பட்ட அடிமைத் தன்மையனது - பத்தாஞ்ஜலி புடா ஹ்ருஷ்டா நம இத்யேவ வாதிந: - குவித்த கரங்களுடன் சந்தோஷம் கொண்டவர்களாக நம: என்று உரைப்பவர்களாக - என்றும், திருவாய்மொழி (3-8-4) – கைகளாலாரத் தொழுது தொழுதுன்னை – என்றும் கூறுவதற்கு ஏற்ப தனது ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்றதான அஞ்ஜலி போன்ற செயல்களாக உள்ளதால் பலன் மற்றும் ஸாதனம் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இல்லை. இப்படியாகப் பலன் என்பது தானே ஸாதனமாகவும் உள்ளதால் ப்ரபத்தி என்பது விதிக்கப்பட்ட ஒன்று போல சுமையாக இல்லாமல் சுகமாகவே உள்ளது. ஆக, “ப்ரபத்த்யுபாயத்துக்கு” என்று தொடங்கும் சூர்ணை-134 முதல் இந்தச் சூர்ணை முடிய ப்ரபத்தியின் குற்றம் இல்லாத தன்மை, குணங்களுடன் கூடியுள்ள தன்மை ஆகிய இரண்டும் உணர்த்தப்பட்டது.