Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 140)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

புல்லைக்காட்டி யழைத்துப் புல்லையிடுவரைப்போலே பல ஸாதநங்களுக்கு பேதமில்லை.

– “பூர்ண விஷயம்” என்று தொடங்கி இவ்வளவும் ப்ரஸக்தாநுப்ரஸக்தமாக வந்தவித்தனையிறே. ப்ரபத்தி வைலக்ஷண்யமிறே கீழ்ச்சொல்லப்பட்டது, ஆகையாலே அதுக்கின்னமுமோரு வைலக்ஷண்யம் சொல்லுகைக்காக ஸித்தோபாயத்துக்கும் பலத்துக்குமுண்டான ஐக்யத்தை முந்துறவருளிச்செய்கிறார் (புல்லைக்காட்டி) என்று தொடங்கி.

– ”பூர்ணவிஷயம்” என்று தொடங்கும் சூர்ணை-136 முதல் கடந்த சூர்ணை முடிய உள்ள அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொடர்ந்து வந்தவை ஆகும். ப்ரபத்தியின் மேன்மை குறித்து அல்லவோ கூறிவந்தார்? அதனைத் தொடரும்விதமாக, அத்தகைய ப்ரபத்திக்கு மேலும் ஒரு மேன்மை உள்ளது என்று உரைக்க எண்ணினார். எனவே ஸித்தோபாயம் மற்றும் பலன் ஆகிய இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை முதலில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, கோவை வரவழைத்துப் பின்னையதுக்கு தாரகாதிகளையிட்டு நோக்க நினைப்பார் தத்போக்யமான புல்லுதன்னையே தத்வசீகார ஸாதநமாக முன்னிட்டழைத்துக் கொண்டு, அது தன்னையே மேலுமிடுமளவில் பல ஸாதநங்களுக்கு பேதமில்லாதாப்போலே, விலக்ஷணகுண விக்ரஹ விசிஷ்டனானதானே முந்துற விவனைச் சேர்த்துக் கொள்ளுகைக் குபாயமாய், பின்னை யென்றுமொக்க விவனுக்கு பேயமாயிருக்கையாலே பலஸாதநங்களிரண்டும் ஏகவஸ்துவாயிருக்குமென்கை.

– ஒரு பசுவைத் தன்னிடம் அழைக்க எண்ணுபவர்கள், அதற்குப் பிடித்தமான புல்லைக் காண்பிப்பார்கள். அந்தப் பசு தங்களிடம் வந்த பின்னர் அந்த புல்லையே உணவாக அளித்து விடுவார்கள். இங்கு உபாயமாகவும், பலனாகவும் அந்தப் புல்லே உள்ளது. ஆக பலன் மற்றும் உபாயம் ஆகிய இரண்டிற்கும் எந்தவிதமான வேறுபாடும் இன்றி அந்தப் புல் உள்ளது. இது போன்று மேன்மையான குணங்கள் மற்றும் விக்ரஹம் ஆகியவற்றுடன் உள்ள தானாகவே சேதனனைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள முதலில் தானே உபாயமாக நின்று, அதன் பின்னர் எப்போதும் உபேயமாகவும் உள்ளான். ஆகவே பலனும் ஸாதனமுமாக இவனே உள்ளான்.