Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 139)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

“பத்ரம் புஷ்பம்”, “அந்யத் பூர்ணாத்”, “புரிவதுவும் புகை பூவே”.

இப்படியவன் அல்பஸந்துஷ்டனென்னுமதுக்கு ப்ரமாணமுண்டோ வென்ன வருளிச் செய்கிறார் மேல் (பத்ரம் புஷ்பம்) என்று தொடங்கி.

– இவ்விதம் நாம் செய்யும் மிகவும் சிறிய செயல்களைக் கண்டும் அவன் மனமகிழ்வு கொள்பவன் என்பதற்கு ஏதேனும் ப்ரமாணம் உள்ளதா என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்த்யுப ஹ்ருத் மச்நாமி ப்ரயதாத்மந:” என்று பத்ரத்தையாகவுமாம், பலத்தையாகவுமாம், ஐலத்தையாகவுமாம், யாவனெருவனெனக்கு பக்தியாலே தருகிறான், அநந்ய ப்ரயோஜநதையாகிற சுத்தியோடே கூடின மநஸ்ஸையுடையனான வப்படிப்பட்ட பக்தியோடே தரப்பட்டவத்தை, அவாப்தஸமஸ்தகாமனாயிருக்கிற நான், அவன் ப்ரேமத்தாலே கலங்கித் தருமாப்போலே வ்யாமோஹத்தாலே கலங்கி அடைவுகெட விநியோகங் கொள்ளுவன் என்று தானேயருளிச்செய்தானிறே. – “அத்யத் பூர்ணாதபாம் கும்பா தந்யத் பாதாவநேஜநாத், அந்யத் குசல ஸம்ப்ரச்நாந், நசேச்சதி ஜநார்தந”. அதாவது – ஸ்ரீதூதெழுந்தருளுகிறபோது, த்ருதராஷ்ட்ரன், “பாண்டவ பக்ஷபாதியாயிருக்கிற க்ருஷ்ணன் வாராநின்றான். அவனுக்குச் சில நாட்டையுங் கொடுத்துப் பொன்னையுங் கொடுத்து நமக்காக்கிக் கொள்ளுகிறோம்” என்றாப்போலே சிலவற்றைச் சொல்ல; நினைவுஞ் சொலவுமொத்திராத வஞ்சகனான வவன் கருத்தையறிந்த ஸஞ்ஜயன், “வருகிறவ னங்ஙனொத்தவனல்லகாண், அவனுக்கு வேண்டுவதிவ்வளவு”, என்றான். அதாவது - தான் குடிக்குந் தண்ணீரையொரு குடத்திலே நிறைத்துக் குளிரவைக்கக் கடவனே, அத்தை அவன் வருகிற வழியிலே வாசலிலே வைக்கவமையும், அதுக்குமேலொன்றும் வேண்டா; தன் க்ருஹத்திலே அதிதி வந்து புகுந்தால் காலைக் கழுவுவதாக ஸாமாந்ய சாஸ்த்ரம் விதித்து வைத்ததிறே, அவ்வோபாதி அவன் திருவடிகளை விளக்கவமையும், அவனான வாசிக்கு விசேஷித்தொன்றும் செய்யவேண்டா; நெடுந்தூரம் வந்தவனை குசலப்ரச்நம் பண்ணக்கடவதிறே, அவ்வோபாதியோரின்சொல் சொல்லவமையும், ஏற்றமாகவொன்றும் வேண்டா, இவ்வளவுகளையொழிய மற்றோன்றை இச்சியான் காணவனென்கை. இத்தால் - நீ கொடுக்க நினைக்கிற நாட்டையும் பொன்னையு மவனொரு சரக்காக நினைத்திருக்குமோ, வல்லையாகில் உன் ஆபிமுக்க்ய ஸூசகமாக விவ்வளவுகளைச் செய்யப்பாரென்றபடி. – ”பரிவதிலீசனை” என்று தொடங்கி, ”புரிவதுவும் புகைபூவே” என்று – ஹேய ப்ரத்யநீகனான ஸர்வேச்வரனை ஸம்ஸாரந்முக்தரா யநுபவித்து, அவ்வநுபவஜநித ப்ரீதியாலே “ஏதத்ஸாமகாயந் நாஸ்தே” என்கிறபடியே பாடி, விஸ்த்ருதராகையைப் பெறவேண்டிருப்பீர், உபகரணங்களில் குறைவு பார்த்தகலுகை தவிர்த்து, அஸம்ஸ்க்ருதமான ஜலத்தை யேதேனு மொருபடி ப்ரயோகித்து, பின்னையவனுக்கு அருள் கொடையாகக் கொடுப்பதுவுமேதேனுமொரு புடையும் ஏதேனுமொரு பூவும், இவ்வளவு மமையுங் கிடிகோளவனுக்கு என்று அவனுடைய ஸ்வாராததையை ஸுஸ்பஷ்டமாக ஆழ்வாரருளிச் செய்தாரிறே.

கீதை (9-26) - பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்த்யுப ஹ்ருத் மச்நாமி ப்ரயதாத்மந: – இலை, மலர், கனி, நீர் என்று எதனை அன்புடன் அளித்தாலும் நான் ஏற்பேன் - என்று கூறுவதற்கு ஏற்ப இலை, மலர்கள், பழங்கள், தண்ணீர் என்று ஒருவன் எனக்கு எதையாவது அளிக்கக்கூடும்; மற்ற எந்தப் பயனையும் எதிர்பாராமல் தூய்மையுடன் கூடியதான பக்தி கொண்டு அவ்விதம் அளிக்கும் அவற்றை நான் ஏற்கிறேன்; அனைத்தையும் எல்லையில்லாமல் கொண்டுள்ள நான் செய்வது என்னவென்றால், அவன் என் மீது கொண்ட ப்ரேமையால் தடுமாற்றம் அடைந்து எனக்கு எதனை அளிப்பது என்று எவ்விதம் கலங்கித் தவித்து, எதனையாவது அளிக்கிறானோ, அதே போன்று நானும் அதே ப்ரேமையுடன் கலங்கி நின்று அவன் எதனை அளித்தான் என்று ஆராயாமல் ஏற்றுக்கொள்கிறேன் - என்று ஸர்வேச்வரன் உரைத்ததே ப்ரமாணம் ஆகிறது. – மஹாபாரதம் உத்யோகபர்வம் – அத்யத் பூர்ணாதபாம் கும்பா தந்யத் பாதாவநேஜநாத், அந்யத் குசல ஸம்ப்ரச்நாந், நசேச்சதி ஜநார்தந – என்ற வரிகள் காண்க. பாண்டவர்களுக்காக க்ருஷ்ணன் தூது வந்தபோது த்ருதராஷ்ரன், “பாண்டவர்களிடம் மட்டுமே அன்பு கொண்டு ஓரவஞ்சனையுடன் செயல்படும் க்ருஷ்ணன் வருகிறான். அவனிடம் நாம் சில நாடுகளையும் செல்வங்களையும் வழங்கி நம் பக்கம் சேர்த்துக் கொள்வோம்”, என்று கூறினான். எண்ணமும் சொற்களும் செயலும் ஒத்துப்போகாத அவனது எண்ணத்தை உணர்ந்த ஸஞ்ஜயன், “அவன் உனது எண்ணத்திற்கு ஒத்துப்போக மாட்டான். அவனுக்கு வேண்டியது இவ்வளவே”, என்று உரைக்கத் தொடங்குகிறான். அவன் வரும்போது, ஒருவன் தான் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் சொம்பை அவன் வரும் வழியில், வாசலில் வைத்தாலே போதுமானது. அதனையே அவன் பூர்ணகும்பம் என்று ஏற்றுக்கொண்டு குளிர்ந்துவிடுவான். அதற்கு மேல் அவனுக்கு ஏதும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஒரு இல்லத்திற்கு வரும் விருந்தினன் ஒருவன் உள்ளே வருவதற்கு முன்பாகத் தனது கால்களைக் கழுவவேண்டும் என்று சாஸ்த்ரம் உரைக்கிறது. அதற்கு உதவும்விதமாக க்ருஷ்ணன் வரும்போது ஒரு சொம்பு நீரை வைத்தால், அவன் தனது திருவடிகளை விளக்கிக்கொள்ள அதுவே உதவி செய்யும். அவனுக்காக வேறு ஏதும் சிறப்பாகச் செய்யவேண்டாம். நீண்ட தூரத்திலிருந்து வந்த ஒருவனை நலம் கேட்பதைக் காட்டிலும் உயர்ந்த செயல் ஏதேனும் உண்டோ? ஆகவே அது போன்று இனிமையான சொல் ஒன்றே போதுமானது. வேறு எதனையும் செய்ய வேண்டாம் - என்று உரைத்தான். இதன் மூலம் ஸஞ்ஜயன், “நீ அவனுக்கு அளிக்க எண்ணும் நாட்டையும் பொன்னையும் அவன் ஒரு பொருளாக எண்ணுவானோ? நீ ஏதேனும் அளிப்பதில் வல்லவன் என்று எண்ணினால் உனது அன்பு என்பதை வெளிப்படுத்தும் விதமாக நான் கூறியவற்றைச் செய்ய முயற்சிப்பாய்”, என்று உணர்த்தினான். – திருவாய்மொழி (1-6-1) – என்ற பாசுரத்தை அருளிச்செய்கிறார். தாழ்வுகளுக்கு எதிர்த்தட்டாக உள்ள ஸர்வேச்வரனை ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டவர்களாக அநுபவித்தபடி, அந்த அனுபவத்தின் காரணமாக எழுந்த மகிழ்வின் விளைவாக - ஏதத்ஸாமகாயந் நாஸ்தே – சாமத்தைப் பாடியபடி உள்ளான் - என்னும்படியாகப் பாடி, ஆத்மஸ்வரூபமானது ப்ரகாசம் அடைவதற்காக வேண்டுவீர்களாக; அவனை ஆராதிக்க நம்மிடம் ஏதும் இல்லையே என்று நம்மிடம் இல்லாதவற்றை ஒரு குறையாகப் பார்த்து அதன் காரணமாக அவனை விட்டு அகலாமல் இருப்பீர்களாக; வாசனைப்பொருள் அற்றதான வெறும் தண்ணீரை ஒரு படியாவது அளித்து, அதன் பின்னே அவனுக்கு ஏதேனும் புகையையோ அல்லது மலரையோ இட்டாலே போதுமானது - என்று திருவாய்மொழியில் உரைத்தார். இப்படியாக அவனது ஆராதிக்கப்படும் தன்மை உள்ளதை ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்தார்.