Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 138)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

பூர்த்தி கைவாங்காதே மேல்விழுகைக்கு ஹேது வித்தனை.

அவனப்படியிருந்தாலும்; அவன் பூர்த்தியானது, அகிஞ்சநரான நம்மாலவனை யுகப்பித் தணுகப்போகாது என்று இவன் கைவாங்கும்படி பண்ணாதோவென்ன வருளிச்செய்கிறார் (பூர்த்தி) என்று தொடங்கி.

– அவன் பரிபூர்ணனாக உள்ளபோதிலும், அவனிடம் உள்ள நிறைவான தன்மை என்பது, எந்தவிதமான கைம்மாறும் நம்மிடம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, “நம்மால் அவனை மகிழச் செய்ய இயலாது, ஆகவே அவனிடம் செல்வது சரியல்ல”, என்று சேதநனைத் தடுத்துவிட வாய்ப்பு உள்ளதே என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அவனுடைய அவாப்தஸமஸ்தகாமத்வம், ஆச்ரயணோந்முகனான விவன் “நம்மாலவனை யொருபடியாலும் ஸந்தோஷிப்பிக்கப் போகாது” என்று ததாச்ரயணத்தினின்றும் மீளுகையன்றிகே, நாமிட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டாத பரிபூர்ணனாகையாலே, நம்பக்கல் பெற்றது கொண்டு ஸந்தோஷிக்குமென்று அபிநிவேசித்தப் பற்றுகைக்குடலாமித்தனை யென்கை. – அன்றிக்கே, அவன் பூர்த்தி அவனையிப்படி ஸந்தோஷிக்க வொட்டுமோ, உபேக்ஷித்துக் கைவாங்கப்பண்ணாதோவென்ன; (பூர்த்தி) இத்யாதியாலே யருளிச் செய்கிறாராகவுமாம். அதாவது - அவனுடைய பூர்த்தியானது, ”இவன் பச்சையிட்டிலன்” என்று அநாதிரித்து அங்கீகாரத்தினின்றும் கைவாஙாதே, “ஆபிமுக்க்ய ஸூசகமாத்ரத்துக்கு மேற்பட நமக்கிவன் சில செய்ய வேண்டுவதுண்டோ” என்று விரும்பிக் கைக்கொள்ளுகைக்குடலாமித்தனையென்கை.

“தான் விரும்பியவை அனைத்தும் அடையப்பெற்றவன்” என்ற அவனது தன்மை எத்தன்மையது என்றால் – ”நம்மால் அவனை எந்தவிதத்திலும் மகிழ்வடையச் செய்யஇயலாது” என்று அவனைப் பற்றுதல் செய்யாமல் அகல்கின்ற நம்மைத் தடுத்து; நாம் எத்தனை சிறிய அளவில் அளித்தாலும் அதனைக் கொண்டு மனநிறைவு கொள்வதற்கு அவசியம் இல்லாமல் அனைத்தையும் உள்ளவன் ஆகையால், நம்மிடமிருந்து பெறப்பட்டதை வைத்து அவன் மகிழ்வான் என்ற எண்ணம் நமக்குத் தோன்றக் காரணமாக உள்ளது. – அல்லது, அவனுடைய நிறைவான தன்மை என்பது மகிழும்படிச்செய்யுமோ, நாம் ஏதும் அளிக்கவில்லை என்று அவனைப் பின்வாங்க வைத்துவிடுமோ – என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை அளிக்கிறார். அவனது பூர்த்தியான தன்மை, “இவன் (சேதனன்) தனக்கு ஏதும் செய்யவில்லை” என்று வெறுப்பு ஏற்படுத்தி நம்மை ஆதரிக்காமல் தள்ளும்படிச் செய்வதில்லை; மாறாக, “நம்மீது அன்புடன் உள்ளவன் என்ற நிலையை இவன் கொண்டுள்ளான். இதற்கும் மேலே இவன் செய்யவேண்டுவது உண்டோ?”, என்று நம்மை விரும்பி ஏற்கும்படிச் செய்துவிடும்.