Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 137)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆபிமுக்க்யஸூசக மாத்ரத்திலே ஸந்தோஷம் விளையும்.

ஆனால் அவனுக்கிவனளவில் ஸந்தோஷம் விளையும்படியென்ன வருளிச் செய்கிறார் (ஆபிமுக்க்ய) இத்யாதியாலே.

– ஆனால் (நாம் ஏதும் செய்யாதபோதிலும்) ஒரு சேதநனிடம் ஸர்வேச்வரனுக்கு மகிழ்வு எவ்விதம் ஏற்படும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அநாதிகாலம் யாதானும் பற்றி நீங்கும் விரதத்தையேறிட்டுக் கொண்டு தன்பக்கல் விமுகனாய்ப் போந்தவிவன், அந்நினைவு குலைந்து தன் பக்கலபிமுகனானமைக்கு ஸூசகமானதொரு வ்யாபாரம் பெற்றவளவிலே, “இத்தனை காலம் விமுகனாய்ப் போந்தவன் இன்றபிமுகனாகப் பெறுவதே” என்று அவன் திருவுள்ளம் மிகவுமுகக்குமென்றபடி.

– எல்லையற்ற காலமாக, திருவிருத்தம் (96) - யாதானும் – என்பதற்கு ஏற்ப ஏதேனும் காரணத்தைக் கற்பித்துக்கொண்டு அவனை விட்டு நீங்கியபடி உள்ளோம். இப்படியாக அவனைவிட்டு அகன்றபடி உள்ள நாம், அவனை வந்து அடையும்படி, அவனிடம் மாறாத அன்பு கொள்ளும்படி ஏதேனும் ஒரு செயலைச் ஸர்வேச்வரன் செய்கிறான். அதனைப் பிடித்துக்கொண்டு அந்தச் சேதனன் அவனிடம் திரும்பும்போது, “இத்தனை காலம் நம்மிடம் அன்பு இல்லாமல் திரிந்தவன், இன்று நம்மிடம் மீண்டும் அன்பு கொண்டவனாக வந்து நின்றான்”, என்று மகிழ்ந்து கொண்டாடுகிறான்.