Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 135)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ஆத்மயாதாத்ம்ய ஜ்ஞாநகார்யமாகையாலே ஸ்வரூபத்துக்கு உசிதமுமாய், “சிற்றவேண்டா” என்கிறபடியே நிவ்ருத்தி ஸாத்யமாகையாலே ஸுகரமுமாயிருக்கும்.

இக்குற்றங்களிதுக்கில்லையென்னுமத்தை ப்ரகாசிப்பிக்கைக்காக இதினுடைய ஸ்வரூபோசிதத்வ ஸுகரத்வங்களையருளிச் செய்கிறார் (ஆத்ம யாதாத்ம்ய) இத்யாதியாலே.

– மேலே கூறப்பட்ட பக்திக்குரிய பலவிதமான தோஷங்கள் ப்ரபத்திக்கு இல்லை என்பதை உணர்த்தும்விதமாக ப்ரபத்தியானது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்றது, எளிதாக இயற்றக்கூடியது போன்ற தன்மைகளை அருளிச்செய்கிறார்.

இப்ப்ரபத்தி (ஆத்ம யாதாத்ம்யஞாந கார்யமாகையாவது) திருமந்த்ரத்தில் மத்யம பதத்தில் சொல்லுகிறபடியே ஆத்மாவினுடைய யதாவஸ்தித வேஷமான பகவதத்யந்த பாரதந்த்ர்யத்தை யுணருகையாலே வந்ததாயிருக்கை. (ஸ்வரூபத்துக்கு சிதமாகையாவது) - அந்த பாரதந்த்ர்யமாகிறது ஸ்வரூபத்துக் கநுரூபமாயிருக்கை. (சிற்றவேண்டா) என்கிறது, சிற்றுதல் – சிதறுதலாய், பரக்கவேண்டாவென்கை. அதாவது ஒரு வ்யாபாரமும் பண்ணவேண்டா வென்றபடி. (நிவ்ருத்தி ஸாத்யமாகையாலே ஸுகரமுமாயிருக்கும்) என்றது – ”பகவத் ப்ரவ்ருத்திவிரோதி ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி: ப்ரபத்தி” என்கிறபடியே – ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தியாலே ஸாதிக்கப்படுமதாகையாலே எளிதாகச் செய்யலுமாயிருக்குமென்கை. இவையிரண்டையும் சொல்லவே, கீழ்ச்சொன்ன தோஷங்களொன்று மிதுக்கில்லை யென்னுமிடம் ஸித்தித்தபடி யென்னென்னில்; அபாயத்வ பயஜநகத்வ சோக ஜநகத்வ அஹங்கார மிச்ரதயா நிஷித்தத்வ அவத்யகரத்வங்கள் ஸ்வரூப விரோதித் வத்தைப் பற்றி வருகிறவையாகையாலும் பலவிஸத்ருசத்வம். இது பலஸாந்தநமன்றிக்கே ஸித்தோபாயமே பல ஸாதநமாய் இது தத்வரணமாத்ரமாய் அதிகாரி விசேஷணமாயிருப்ப தொன்றாகையாலே இதின் பக்கல் வருகைக்கவகாசமில்லாமையாலும், இவ்வாறு தோஷமுமிதுக்கில்லாமை (ஸ்வரூபத்துக் குசிதம்) என்றதிலே ஸித்தமாமிறே. கர்மஸாத்யதயா வரும் துஷ்கரத்வமில்லை யென்னுமிடம் (நிவ்ருத்தி ஸாத்யமாகையாலே ஸுகரம்) என்றதிலே ஸுஸ்பஷ்டமிறே. ஆகையால், ஸ்வரூபௌசித்ய ஸுகரத்வங்களாகிற விவையிரண்டு மிதுக்குண்டென்னவே, கீழ்ச்சொன்ன தோஷங்களொன்று மிதுக்கில்லை யென்னுமிடம் ப்ரகாசிதமாய்த்து.

இந்த ப்ரபத்தி என்பது ” ஆத்ம யாதாத்ம்யஞாந கார்யமாகையாவது” எனப்படுதல் எப்படி? திருமந்த்ரத்தின் நடுப்பதமான “நம:” என்பதில் உரைப்பதற்கு ஏற்ப, ப்ரபத்தி என்பது ஆத்மாவின் ஸ்வரூபமான ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல் என்பதை உணர்ந்ததன் காரணமாகவே ஏற்படுவது என்பதால் ஆகும். “ஸ்வரூபத்துக்கு சிதமாகையாவது” என்பது என்ன? இப்படியாக ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமைப்பட்டிருத்தல் என்பதான பாரதந்த்ர்ய தன்மைக்கு ஏற்றபடி இருத்தல் ஆகும். “சிற்றவேண்டா” என்றால் பரக்க வேண்டாதபடி இருப்பதாகும். அதாவது நாமாக முனைந்து எந்தச் செயலும் செய்யவேண்டாம் என்னும்படி உள்ளதாகும். “நிவ்ருத்தி ஸாத்யமாகையாலே ஸுகரமுமாயிருக்கும்” என்பது என்ன? பகவத் ப்ரவ்ருத்திவிரோதி ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி: ப்ரபத்தி – என்பதற்கு ஏற்ப நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முயலும் செயல்களில் இருந்து விலகி இருப்பதன் மூலம் உணர்த்தப்படுவதால் ப்ரபத்தி என்பது எளிதாகச் செய்யலாம்படி உள்ளது. – இந்த இரண்டு கருத்துக்களின் மூலம் ப்ரபத்திக்கு மேலே கூறப்பட்ட தோஷங்கள் இல்லை என்பது எவ்விதம் உணர்த்தப்பட்டது என்ற கேள்வி எழலாம். அபாயமாக உள்ள தன்மை, அச்சம் ஏற்படக் காரணமாக இருத்தல், சோகம் உண்டாகக் காரணமாக இருத்தல், அஹங்காரத்துடன் கூடியதால் விலக்கப்பட ஏற்றதாக உள்ள தன்மை, தாழ்வினை ஏற்படுத்திவிடல் போன்ற ஆத்ம ஸ்வரூபத்திற்கு விரோதமான தன்மைகளுடன் கூடியுள்ளதால் பக்தி என்பது மோக்ஷமாகிய பலன் என்பதற்கு ஒத்ததாக உள்ளது அல்ல. ஆனால் ப்ரபத்தி என்பது மோக்ஷத்திற்கு சாதனமாக அல்லாமல், ஸித்தோபாயமான ஸர்வேச்வரனே அதற்குச் சாதனமாக உள்ளான்; ப்ரபத்தி என்பது அவனைப் பற்றும் உபாயமாக மட்டுமே உள்ளது; ஆகவே மேலே உள்ள தோஷங்கள் ப்ரபத்திக்கு இல்லை. ஆக மேலே உள்ள தோஷங்கள் எதுவும் இந்த ப்ரபத்திக்கு இல்லை என்பது ”ஸ்வரூபத்துக்கு உசிதமாய்” என்பதால் தெளிவு. “நிவ்ருத்தி ஸாத்யமாகையாலே ஸுகரம்” என்பதன் மூலம் கர்மத்தால் இயற்றப்படும்போது செய்து முடிக்கக் கடினமானது என்ற தோஷம் இல்லை என்பது தெளிவாகிறது. ஆக ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு ஏற்றதாக இருத்தல், இயற்றுவதற்கு எளிமையாக இருத்தல் என்ற இரண்டும் ப்ரபத்திக்கு உள்ளதால், மேலே கூறப்பட்ட தோஷங்கள் ஏதும் ப்ரபத்திக்கு இல்லை என்பது மிகவும் தெளிவாகிறது.