Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 134)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

ப்ரபத்த்யுபாயத்துக்கு இக்குற்றங்களொன்றுமில்லை.

இப்படி ப்ராபகாந்தரத்துக்கு அநேகம் குற்றங்களை ப்ரதிபாதித்தீர், ப்ரபத்த் யுபாயத்துக்கு ஒரு குற்றமுந்தானில்லையோவென்ன வருளிச்செய்கிறார் (ப்ரபத்த்யுபாயத்துக்கு) என்று தொடங்கி.

– இப்படியாகப் பக்திக்கு உள்ள பலவிதமான தோஷங்களை உரைத்தீர்கள்; ப்ரபத்தி என்ற உபாயத்திற்கு எந்தவிதமான தோஷமும் இல்லையோ என்ற கேள்வி எழலாம். இதற்கான விடையை அருளிச்செய்கிறார்.

(இக்குற்றங்கள்) என்று ஸ்வரூப விரோதம் முதலாக துஷ்கரத்வ பர்யந்தமாகச் சொன்னவை யெல்லாவற்றையும் பராமர்சிக்கிறது. (ஒன்றுமில்லை) என்றது, ஒரு தோஷமும் இதன் பக்கலில்லை என்றபடி. (இக்குற்றங்களொன்றுமில்லை) என்கையாலே மற்றொரு குற்றமுண்டென்னுமிடம் தோற்றுகிறது அதாவது, வஸ்துத: உபாயத்வம் தனக்கின்றிக்கேயிருக்கச்செய்தே ஆபாதப்ரதீதியிலே உபாய ப்ரதிபத்த் யர்ஹமாம்படியிருக்கை.

“இக்குற்றங்கள்” என்பது பக்தியானது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதமானது என்பது தொடக்கமாக, துஷ்கரத்வம் என்று கடந்த சூர்ணையில் உரைக்கப்பட்டது முடிய உள்ள அனைத்து தோஷங்களையும் காண்பிக்கிறது. “ஒன்றும் இல்லை” என்றால், ப்ரபத்தி உபாயத்தில் இது போன்று எந்தவிதமான தோஷங்களும் இல்லை என்று கருத்து. “இக்குற்றங்களொன்றுமில்லை” என்பதன் மூலம் இவை நீங்கலாக வேறு ஏதேனும் தோஷம் ஒன்று உள்ளது என்றாகிறது. அது என்ன தோஷம்? உண்மையாக ஆராயும்போது ஸர்வேச்வரன் மட்டுமே மோக்ஷ உபாயம் அன்றி, ப்ரபத்தி உபாயம் அல்ல என்பது தெளிவு. ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும்போது தன்னை மோக்ஷ உபாயம் என்று எண்ணுவதற்குக் காரணமாக ப்ரபத்தி இருக்கிறது என்ற தோஷம் ப்ரபத்திக்கு உள்ளது.