Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 133)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
இதுதான் கர்மஸாத்யமாகையாலே துஷ்கரமுமாயிருக்கும்.
இவ்வளவேயன்று, இது துஷ்கரமுமென்கிறார் (இதுதான்) இத்யாதியாலே.
அது மட்டும் அல்ல, இந்தப் பக்தி என்பது இயற்றுவதற்கு மிகவும் கடினமானதும் ஆகும் என்கிறார் (துஷ்கரம் என்றால் ஸ்வரூப விரோதி, அபாயமாக இருத்தல், அச்சம் ஏற்படக் காரணமாக இருத்தல், சோகம் உண்டாகக் காரணம், அஹங்காரம் உண்டாகக் காரணம் போன்ற பல தோஷங்களுடன் கூடியுள்ளதால் கடினமானது என்றார்).
இப்படி ஸ்வரூபவிரோதியாயிருக்கிற விவ்வுபாஸநந்தான், “யஜ்ஞேந தாநேந தபஸா அநாசகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி”, ”அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருத மச்நுதே”, ”ஸர்வாபேக்ஷாச யஜ்ஞாதி ச்ருதே ரச்வவத்”, ”கஷாய பங்க்யதே கர்மாணீ ஜ்ஞாநந்து பரமா கதி:”, ”கஷாயே கர்மபி: பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரவர்த்ததே”, ”ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி: நராணாம் க்ஷீண பாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே காய க்லேசகரமான கர்மாநுஷ்ட்டாநத்தாலே ஸாதிக்கப்படுமதாகையாலே, அசக்தனானவிவனால் செய்து தலைக்கட்ட அரிதாயிருக்குமென்கை. ஆக (ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கும்) என்று தொடங்கி இவ்வளவாக உபாயாந்தர தோஷம் விஸ்தரேண ப்ரதிபாதிக்கப்பட்டது.
இப்படியாக இந்தப் பக்தி என்பது ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதியாக உள்ளது. கீழே உள்ள பல வரிகளிலும் கூறப்பட்டதற்கு ஏற்ப பக்தி என்பது சரீரத்தை வருத்தி இயற்றப்படவேண்டிய கர்மங்கள் மூலம் கிட்டக்கூடியது என்பதால், சக்தியற்ற சேதனன் செய்து முடிக்கக் கடினமானது ஆகும் என்று கொள்க: ப்ருஹத் உபநிஷத் – யஜ்ஞேந தாநேந தபஸா அநாசகேந ப்ராஹ்மணா விவிதிஷந்தி -வேள்விகள், தானம், தவம், விரதங்கள் போன்ற பலவற்றாலும் பரம்பொருளைப் பற்றிய ஞானம் உள்ளவர்கள் உபாஸனை செய்கின்றனர். அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருத மச்நுதே – கர்மங்கள் மூலமாக, உபாஸனை கைகூடுவதற்கு விரோதியாக உள்ள பாவங்கள் நீங்கி, அந்த உபாஸனை மூலம் மோக்ஷம் அடைகிறான். ப்ரஹ்மஸூத்ரம் (3-4-26) - ஸர்வாபேக்ஷாச யஜ்ஞாதி ச்ருதே ரச்வவத் – யாகம் போன்ற கர்மங்களை அவற்றின் அங்கங்களுடன் இயற்றவேண்டும், குதிரையைப் போன்று. கஷாய பங்க்யதே கர்மாணீ ஜ்ஞாநந்து பரமா கதி: - இயற்றப்படும் கர்மங்கள் அனைத்தும் ரஜோ மற்றும் தாமஸ குணங்களை நீக்கக்கூடியவையாகும். கஷாயே கர்மபி: பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரவர்த்ததே – கர்மங்களை இயற்றுவதன் மூலம் பாவங்கள் நீங்குகின்றன. ஆகவே இயற்றுவதற்கு அவை கடினமானது ஆகும். ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோ ஜ்ஞாந ஸமாதிபி: நராணாம் க்ஷீண பாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே - ஆயிரம் பிறவிகளில் இயற்றப்படும் தவம் மூலமும், ஞானம் மூலமும், த்யானம் மூலமும் பாவங்கள் அழியப்பெற்றவனுக்கு மட்டுமே க்ருஷ்ணனிடம் பக்தி ஏற்படுகிறது. ஆக, “ப்ராபகாந்தர பரித்யாகத்துக்கும்” என்று தொடங்கிய சூர்ணை-115 முதல் இந்தச் சூர்ணை முடிய பக்தி என்பதை உபாயமாகக் கொள்ளும் நிலைக்கு உள்ள தோஷங்களை மிகவும் விரிவாக அருளிச்செய்தார்.