Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 132)
மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்
அது தோல்புரையே போம்; இது மர்மஸ்பர்சி.
இப்படியோரோ விச்வாஸத்துக்காக விதித்து நிஷேதித்தமை யொத்திருந்ததாகிலும், இவ்வுபாஸநத்தை விடாமல் பற்றி நின்றால் அபிசார கர்மம் போலே க்ரூரமன்றே யிதுவென்ன; அதிலுங்காட்டில் க்ரூரமென்கிறார் (அது) என்று தொடங்கி.
– இவ்விதம் சாஸ்த்ரங்களில் விதிக்கப்படுவதும், அவற்றை விலக்குதல் என்பதும் அந்தந்த நம்பிக்கையை ஏற்படுத்தவே என்று கொண்டாலும், பக்தி என்பது அபிசாரகர்மம் போன்று அவ்வளவு கொடியது அல்ல அல்லவோ? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கிறார் – அதனைக் காட்டிலும் கொடியது என்கிறார்.
பரஹிம்ஸா ரூபமான அந்த அபிசார கர்மம், தேஹாத்மாபிமாநி செயலாய் விசிஷ்ட வேஷ விரோதியாய் அத்தால் வரும் பலமும் சில துக்காநுபவ மாத்ரமாய்க் கொண்டு மேலெழப் போகையாலே, (தோல்புரையே போம்) என்கிறது; அஹங்கார கர்ப்பமானவிந்தவுபாஸநம், ஆத்ம ஜ்ஞாநம் பிறந்தவன் செயலாய் நிஷ்க்ருஷ்டவேஷ விரோதியாய் பகவதேக பாரதந்த்ர்யரூப ஸ்வரூப நாசகமாகையாலே (மர்ம ஸ்பர்சி) என்கிறது.
– பரஹிம்சை என்பதை ஒத்ததான அபிசாரகர்மம் என்பது இந்த உடலையே ஆத்மா என்று எண்ணியிருப்பவன் செய்யக்கூடிய செயலாகவும், சரீரத்துடன் தொடர்புள்ள ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதமான செயலாகவும், இதனால் உண்டாக்கக்கூடிய பலன் என்பது துக்கத்தைச் சற்றே அனுபவிக்கும்படியாகவும், அதன் பின்னர் கழிவதாகவும் உள்ளது. ஆனால் பக்தியைத் தொடர்ந்து பற்றியபடி இருத்தல் என்பது, ஆத்மாவின் விரோதியாகவும், ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டுள்ள ஆத்மாவின் தன்மையை அழிக்கவல்லதாகவும் உள்ளதால், பக்தி என்பது அபிசார கர்மத்தைக் காட்டிலும் கொடியது ஆகும்.