Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 131)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

அத்தை சாஸ்த்ரவிச்வாஸத்துக்காக விதித்தது. இத்தை ஸ்வரூபவிச்வாஸத்துக்காக விதித்தது.

இப்படி நிஷேதிக்கப்படுமவையானவிவைதன்னை அடியிலே யெதுக்காக விதித்ததென்ன வருளிச்செய்கிறார் (அத்தை) என்று தொடங்கி.

இவ்விதம் பின்னர் விலக்கிவைக்கப்படும் இவற்றை முதலில் ஏன் விதிக்கவேண்டும் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “சடசித்த சாஸ்த்ர வசதோபாயோபிசார ச்ருதி:” என்கிறபடியே அபிசாரகர்மத்தை விதித்தது, சாஸ்த்ரத்தை யில்லையென்றிருக்கும் நாஸ்திகனுக்கு சாஸ்த்ர விச்வாஸம் பிறக்கைக்காக; உபாஸநத்தை விதித்தது, தன்னை ஸ்வதந்த்ரனென்றும் அந்யசேஷபூதனென்றும் ப்ரமித்துப் போந்த சேதநனுக்கு, அவை யிரண்டு வந்தேறி, பகவச்சேஷத்வமே நிலைநின்ற வேஷமென்று தன் ஸ்வரூபத்தில் விச்வாஸம் பிறக்கைக்காக வென்கை.

ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் – சடசித்த சாஸ்த்ர வசதோபாயோபிசார ச்ருதி: – அபிசார யாகத்தை ச்ருதியானது ஏன் விதித்தது என்றால் சாஸ்த்ரங்களில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி ஈர்க்கும் வழி அதுவே என்பதால் – என்று கூறுவதற்கு ஏற்ப, அபிசாரகர்மம் ஏன் விதிக்கப்பட்டது என்றால், சாஸ்த்ரங்களே இல்லை என்று கூறும் நாஸ்திகனுக்கு சாஸ்த்ரங்கள் மீது விச்வாசம் உண்டாவதற்கே ஆகும். சரி, ஏன் பக்தியை விதிக்கவேண்டும்? விடை அளிக்கிறார். தன்னைச் சுதந்திரமானவன் என்றும், மற்றவர்களுக்கு அடிமைப்பட்டவன் என்றும் எண்ணம் கொண்ட ஒருவனுக்கு அந்த இரண்டு சிந்தனைகளும் மாறி, ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்து நிற்பதே தனது ஸ்வரூபத்திற்கு நிலையான தன்மை என்று, தனது ஸ்வரூபத்தின் மீது விச்வாஸம் ஏற்படுத்துவதற்காக விதிக்கப்பட்டது.