Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 130)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இதுதான் பூர்வவிஹிதஹிம்ஸைபோலே; விதி நிஷேதங்களிரண்டுக்கும் குறையில்லை.

ஆனால் இப்படி விதித்தத்தைப்பின்னை நிஷேதிக்கிற தென்னென்ன வருளிச் செய்கிறார் (இதுதான்) என்று தொடங்கி.

– ஆயினும் இவ்விதம் விதிக்கப்பட்டவற்றை (பத்தியை) விலக்குவது ஏன் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– (இதுதான்) என்கிறது - கீழ்ச்சொன்ன உபாஸநத்தை. (பூர்வ விஹித ஹிம்ஸையாவது) “ச்யேநேநாபிசரந் யஜேத” என்று ப்ரதமத்திலே விதிக்கப்பட்ட அபிசார கர்மம்; அது, தம:ப்ரசுரராய் நாஸ்திகராயிருப்பாரைப் பற்ற விதிக்கப்பட்டு ஆஸ்திகராய் காரீர்யாதி காம்ய கர்மங்களிலேயிழிகைக்கு யோக்யரான ரஜ:ப்ரசுரரைப்பற்ற நிஷேதிக்கப்படுகிறாப்போலே, உபாஸநமும் ஸ்வாதந்த்ர்யாந்யசேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமாக பகவச்சேஷத்வத்திலே யூன்றுவிக்கைக்கு யோக்யரான ஸத்த்வ ப்ரசுரரைப் பற்ற விதிக்கப்பட்டு, பாரதந்த்ர்யஜ்ஞாநம் பிறந்து பகவதேகோபாயத்வத்திலே யூன்றுகைக்கு யோக்யரான பரமஸ்த்வ நிஷ்ட்டரைப்பற்ற நிஷேதிக்கப்படவும் குறையில்லை.

– “இதுதான்” என்பதன் மூலம் மேலே கூறப்பட்ட உபாஸநம் அல்லது பக்தி கூறப்பட்டது. “பூர்வ விஹித ஹிம்ஸை” என்பது என்ன? ச்யேநேநாபிசரந் யஜேத - விரோதியை அழிக்க எண்ணுபவன் ச்யேநயாகம் செய்யக்கடவன் - என்பது முதலில் விதிக்கப்பட்ட அபிசாரகர்மம் ஆகும் (அபிசாரம் என்பது கொலை; அபிசாரகர்மம் என்றால் அந்தக் கொலை என்பதைப் பலனாகக் கொண்ட கர்மம் ஆகும்). இது போன்ற கர்மங்கள் தமோ குணம் மிக்கவராகவும், நாஸ்திகராகவும் இருப்பவர்களை சாஸ்த்ரத்தின் பக்கம் ஈர்க்கும் விதமாக முதலில் விதிக்கப்படுகிறது (அதாவது இதன் மூலம் அவன் சாஸ்த்ரங்களைப் பற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது); ஆனால் இதே கர்மங்கள் ஆஸ்திகர்களாக காரீரி என்று கூறப்படும் மழையைக் குறித்த கர்மம் போன்ற காம்ய கர்மங்களை இயற்றத் தகுதி கொண்ட ரஜோகுணம் மிக்கவர்களுக்கு விலக்கப்படுகிறது; அதாவது அவர்களை ஈர்க்கும் பொருட்டு விலக்கப்படுகிறது (இவர்கள் கொலை செய்தல் போன்றவற்றை விரும்பமாட்டனர் என்பதால் விலக்கப்படுகிறது). இதே போன்று பக்தி என்பதும் – “நான் சுதந்திரமானவன்” மற்றும் “நான் மற்றவர்க்கு அடிமை” என்னும் எண்ணங்களை நீக்கிய பின்னர், ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள நிலைக்குத் தகுதி பெற்ற ஸத்வகுணம் மிக்கவர்களை ஈர்க்கும் விதமாக விதிக்கப்பட்டது; ஆனால் அதே பக்தி என்பது - தான் எம்பெருமானுக்கே வசப்பட்டவன் என்ற ஞானம் தலை தூக்கி, ஸர்வேச்வரன் என்ற உபாயத்தில் நிலைநிற்பதற்குத் தகுதி பெற்ற பரமஸத்வநிஷ்டர்களை ஈர்க்கும் விதமாக விலக்கப்பட்டது.