Sri Vachana Bhushanam - மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம் (சூர்ணை 129)

மூன்றாம் ப்ரகரணம் – அதிகாரி நிஷ்டா க்ரமம்

இத்தை ப்ரவர்த்திப்பித்தது பரஹிம்ஸையை நிவர்த்திப்பிக்கைக்காக.

இனி இப்படியிது தன்னை விதித்தது கீழ்நின்ற நிலையைக் குலைத்து மேலே கொண்டு போகைக்காகவித்தனை யென்கிறார் (இத்தை) என்று தொடங்கி.

– இப்படியாகப் பக்தி என்பதை சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டது ஏன் என்றால் அப்படிப்பட்ட நிலைகளைத் தள்ளி மேலே உயர்த்துவதற்காக என்று அருளிச்செய்கிறார்.

– அதாவது, சாஸ்த்ரமாகிறது “த்ரைகுண்ய விஷயா வேதா:” என்கிறபடியே பெற்ற தாய் அந்த பதிராதிகளான விகலகரணரோடு படுகரணரோடு வாசியற வத்ஸலையா யிருக்குமாப்போலே, மாதாபித்ரு ஸஹஸ்ரங்களிற் காட்டிலும் வத்ஸலதரமாகையாலே, தம:ப்ரசுரரோடு ரஜ:ப்ரசுரரோடு ஸத்வப்ரசுரரோடு வாசியற அவர்கள் அபதேப்ரவ்ருத்தராய் நசிக்கவிட க்ஷமமல்லாமையாலே, அவ்வோருடைய குணாநுகுணமாக புருஷார்த்தங்களையும் தத்ஸாதநங்களையு முபதேசித்து, கொள்கொம்பிலே யேற்றுகைக்குச் சுள்ளிக்கால் நாட்டுவாரோபாதி, இவ்வோமுகங்களால் தன்னுடைய தாத்பர்யாம்சத்திலே யாரோபிக்கைக்காக ப்ரவர்த்திப்பிக்கிறதாகையாலே, ச்யேநவிதி தொடங்கி ப்ரபத்தி பர்யந்தமாக வருமளவும், சேதநர் நின்றநின்றவளவுக் கீடாக உத்தரோத்தர புருஷார்த்த ஸாதநங்களை ப்ரவர்த்திப்பித்து பூர்வபூர்வங்களை நிவர்த்திப்பிக்கக் கடவதாயிருக்கும்; ஆகையாலே இவ்வுபாஸநத்தை ப்ரவர்த்திப்பித்தது பரஹிம்ஸையை நிவர்த்திப்பிக்கைகாக. (பரஹிம்ஸை) என்றது மேலான ஹிம்ஸையென்றபடி; பரதேவதை, பரகதி என்கிற விடங்களில் மேலான தேவதை, மேலான கதி என்றர்த்தமாகிறாப்போலே. அதாவது ச்யேந விதிக்கு மேலாக விதிக்கப்பட்ட பச்வாலம்பநாதிகளைச் சொன்னபடி. அத்தை ஹிம்ஸையென்னலாமோ வென்னில்; விஹித ஹிம்ஸையென்னக் கடவதிறே. “அக்நீ ஷோமீயம் பசுமாலபேத” என்கிறவிடத்தில், ஆலம்பசப்தம், “ஆலம்ப: ஸ்பர்ச ஹிம்ஸயோ:” என்கையாலே ஹிம்ஸா வாசியிறே. இத்தால், காம்யகர்மத்தைச் சொன்னபடி. (பூர்வ விஹித ஹிம்ஸை) என்று ச்யேந விதியைச் சொல்லுகையாலும், ததுபரி விஹிதமான காம்யமே இவ்விடத்தில் விவக்ஷிதம். அன்றிக்கே, விஹிதமேயாகிலும், பகவச்சேஷத்வ ஜ்ஞாநபூர்வகமாக அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு அக்நீந்த்ராதி தேவதாந்தர்யாமி ஸமாராதநமாகவே பண்ணும் பச்வாலம்பநாதியுக்த யாகாதி கர்மத்தைப் பற்ற ஸ்வதந்த்ரனாய்க் கொண்டு ஸ்வர்காதி பலஸாதநமாக அக்நீந்த்ராதி தேவதாமாத்ரங்களை யுத்தேசித்துப் பண்ணும் பச்வாலம்பநாதி யுக்த காம்ய கர்மம் விசேஷஜ்ஞர்க்கு பரஹிம்ஸாப்ராயமென்னலாம்படி யத்யந்த நிக்ருஷ்டமாயிருக்கையாலே, இவ்வாகாரத்தை யிட்டு அது தன்னை பரஹிம்ஸை யென்றருளிச் செய்தாராகவுமாம். சாஸ்த்ரவிஹிதமுமாய் பகவதேக விஷயமுமா யிருக்கிற ப்ராபகாந்தரத்தை ஜ்ஞாநிகளுக்கபாய மென்றவோபாதி, இதுவு மதிகாரி விசேஷத்தையிட்டுச் சொல்லலாமிறே. “அத பாதகபீதஸ் த்வம்” என்று - உபயாந்தரத்தை பாதகமாகச் சொல்லிற்றிறே தர்மதேவதையும். புபுக்ஷுவுக்குபாதேயமான புண்யந்தானே முமுக்ஷுவுக்கு பாபசப்த வாக்யமாகா நின்றதிறே. ஆக எல்லாவற்றாலும் - இவ்விடத்தில் காம்யகர்மத்தையே சொல்லுகிறது. இப்படி தான் யோஜிக்கிறது – உபாஸந விதிக்கு நிவர்த்யம் காம்ய கர்மமாக விவர்தாமே பரந்த (படி) ரஹஸ்யத்திலேயருளிச் செய்கையாலே.

– “இத்தை ப்ரவர்த்திப்பித்தது” என்றால் என்ன? சாஸ்த்ரங்கள் என்பவை கீதை (2-45) – த்ரைகுண்ய விஷயா வேதா: - மூன்று குணங்களுடன் கூடிய ஆத்மாவை விஷயமாகக் கொண்ட வேதங்கள் – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளவை வேதங்கள் ஆகும். பெற்ற தாய் ஒருவள் குருடு மற்றும் செவிடு போன்ற குறைகளுடன் பிறந்த தனது குழந்தைகள் மற்றும் அவ்விதம் எந்த விதமான குறைகளும் இன்றிப் பிறந்த தனது குழந்தைகள் ஆகிய இரண்டுவிதமான குழந்தைகளுடன் சரிசமமாகவே அன்புடன் இருப்பது போன்று, இத்தகைய வேதங்கள் ஆயிரம் தாய்தந்தைகளுக்கு மேலான அன்புடன் கூடியதாக நம்மிடம் உள்ளன (குறிப்பு: இத்தகைய வேதங்களே ஆயிரம் தாய் தந்தைகளைக் காட்டிலும் நம்மிடம் அன்புடன் உள்ளபோது, அத்தகைய வேதங்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கநாதன் நம்மிடம் எத்தனை அன்புடன் இருப்பான் என்று சற்றே எண்ணிப்பாருங்கள்). அந்தத் தாய் போன்று வேதங்கள் தமோ மற்றும் ரஜோ குணம் மிக்கவர்கள் மற்றும் ஸத்வ குணம் மிக்கவர்கள் என்று எந்தவிதமான பாகுபாடும் பாராமல் அனைவரிடமும் ஒரே போன்று அன்புடன் உள்ளன. ஆகவே நாம் தகாத வழியில் சென்று அழியும்படிச் செல்ல அவை விடுவதில்லை. ஆகவே அவரவர்களின் தகுதிக்கு ஏற்றதான புருஷார்த்தங்களையும், அந்தப் பலன்களை அடைவதற்கான உபாயங்களையும் உபதேசிக்கின்றன. இப்படியாகப் பெரியபந்தலைக் கொடிகள் பற்றிக் கொள்ளச் சிறு குச்சிகளை நடுவது போன்று, தங்களது தாத்பர்யமான வழிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு பல வழிகளையும் அவை மேற்கொள்கின்றன. ஆகவே ச்யேந விதி தொடங்கி ப்ரபத்தி முடிய உள்ள பல விதிகளை, இந்த உலகில் உள்ள மக்கள் அவரவர்கள் எந்த நிலையில் உள்ளனரோ அதற்கு ஏற்றபடி உபதேசம் செய்து, அந்தந்த உபாயங்கள் மற்றும் அவற்றின் பலன் உரைத்து, அவர்களை மேன்மேலும் உயர்த்துகின்றன (அதாவது கீழே உள்ள நிலைகளைத் தள்ளித்தள்ளி அவர்கள் மேலே வருகின்றனர்). ஆகவே பக்தி விதி ஏன் கூறப்பட்டது என்றால் ஹிம்ஸை செய்வதை அங்கமாகக் கொண்ட காம்யகர்மங்களைத் தள்ளுவதற்காக ஆகும். “பரஹிம்ஸை” என்றால் மேலான ஹிம்ஸை என்று பொருள். பரதேவதை, பரகதி என்பவை உயர்ந்த தேவதை மற்றும் உயர்ந்த மார்க்கம் என்று குறிப்பது போன்று ஆகும். மிகவும் மேலான ஹிம்ஸை என்றால் ச்யேந விதிக்குக் கூறப்பட்ட பசுவைக் கொல்லுதல் போன்றவை ஆகும். ஆனால் சாஸ்த்ரத்தில் கூறப்பட்ட ஒரு விதியை ஹிம்ஸை என்று உரைக்கலாமா என்ற கேள்வி எழலாம். அதனால்தான் ”விதிக்கப்பட்ட ஹிம்ஸை” என்கிறார். அக்நீஷோமீயம் பசுமாலபேத – என்ற வரியில் உள்ள ”ஆலம்ப” என்ற பதம், அமரகோசத்தில் - ஆலம்ப: ஸ்பர்ச ஹிம்ஸயோ: – என்பதன் மூலம் ”ஹிம்ஸை” என்ற பொருளை அளிக்கிறது. “பூர்வஹித ஹிம்ஸை” என்று ச்யேந விதியை உரைப்பதால், அதற்கு மேல் கூறப்பட்ட காம்யகர்மங்கள் அனைத்துமே “பரஹிம்ஸை” என்ற பதம் மூலம் கூறப்பட்டது என்றாகிறது. இதற்கு வேறு விதமாகவும் பொருள் உரைக்கலாம். அதாவது பரஹிம்ஸை என்ற பதம் மூலம் காம்யகர்மம் கூறப்பட்டதற்கு வேறு காரணமும் உள்ளது என்று கூறுகிறார். ஒருவன் தான் ஸர்வேச்வரனுக்கே வசப்பட்டவன் என்ற ஞானம் கொண்டவனாக, பசுஹிம்சை போன்ற கர்மங்கள் அனைத்தும் அக்னி மற்றும் இந்த்ரன் ஆகியவர்களின் அந்தர்யாமியாக உள்ள ஸர்வேச்வரனுக்குச் செய்யும் ஆராதனமே என்ற எண்ணம் கொண்டவனாக அத்தகைய கர்மங்களைக் காணக்கூடும். ஒருவன் தான் சுதந்திரமானவன் என்றும், ஸ்வர்க்கம் போன்ற பலன்களுக்காகவே பசுவதை போன்றவற்றுடன் கூடிய காம்யகர்மங்கள் அந்தப் பலன்களை அளிக்கவல்ல அக்னி, இந்திரன் போன்றவர்களுக்காக இயற்றப்படுகின்றன என்றும் எண்ணக்கூடும். ஆகவே இவை சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டபோதும், உயர்ந்த ஞானம் கொண்டவர்களுக்கு மேலான ஹிம்ஸை என்று தோன்றும்படியாக உள்ள தாழ்ந்த நிலை காரணமாகவே காம்யகர்மங்களைப் பரஹிம்ஸை என்றார். அல்லது மூன்றாவதாக ஒரு காரணமும் கூறலாம். சாஸ்த்ரங்களால் கூறப்பட்டதும், எம்பெருமானை மட்டுமே விஷயமாகக் கொண்டுள்ளதும் ஆகிய பக்தியை ஞானிகளுக்கு அபாயம் என்று கூறியது காண்க. இது போன்றே காம்யகர்மங்களை “பரஹிம்ஸை” என்று அதிகாரிகளின் நிலையால் கூறுவது தவறில்லை. மஹாபாரதம் - அத பாதகபீதஸ் த்வம் - ஆத்மாவின் ஸ்வரூபத்திற்கு விரோதமான செயல்கள் குறித்து உனக்குப் பயம் உள்ளது என்றால் - என்று மற்ற உபாயங்கள் அனைத்தையும் தவறு என்றே தர்மதேவதை கூறியது அல்லவோ? மேலும் இன்பங்களை அடைவதில் மிகவும் ஆசை கொண்டவர்களால் செய்யப்படும் புண்ணியச்செயல்கள் அனைத்துமே மோக்ஷத்தில் விருப்பம் கொண்டவர்களால் செய்யத்தகாத பாவங்கள் என்று கூறப்பட்டது. ஆக இங்கு பலவற்றாலும் காம்யகர்மமே ”பரஹிம்ஸை” என உரைக்கப்பட்டது. பரஹிம்சை என்ற பதம் மூலம் காம்யகர்மமே உரைக்கப்படுகிறது என்று பொருள் கொள்ளக் காரணம் இவரே (ஸ்வாமி பிள்ளைலோகாசார்யார்) அருளிச்செய்த பரந்தபடியில் உள்ளதால் ஆகும்.